Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நகைச்சுவை நடிகர் தாமுவின் புதிய முகத்துக்கு கிடைத்த கவுரவ விருது!

20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை ; நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது.

நகைச்சுவை நடிகர் தாமுவின் புதிய முகத்துக்கு கிடைத்த கவுரவ விருது!

Friday April 23, 2021 , 2 min Read

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.


ஆம்! கல்விச் சேவையாளர் என்கிற புதிய முகம்... அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரைத் தேடி வந்துள்ளது.


கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது.

1

கேரளாவின் மேன்மை ஆளுநர், தேசிய அங்கீகார வாரியத் தலைவர், AICET யின் கட்டுப்பாட்டாளர்கள், 50 பல்கலைகழக அதிபர்கள் மற்றும் துணைவேந்தர்கள், இந்தியாவின் பல்வேறு நிறுவனத் தலைவர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களைக் கொண்ட இந்த கவுன்சில் தனது 14-வது ராஷ்டிரியா சிக்ஷா கவுரவ புரஸ்கார் மற்றும் 7-வது உயர் கல்வி உச்சி மாநாட்டை கடந்த ஏப்ரல் 19, 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது..


இந்த நிகழ்ச்சியின்போது கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக, அவருக்கு ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புராஸ்கர் விருது வழங்கப்பட்டது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த நிகழ்ச்சி கானொளி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த மாநாட்டில் பல்வேறு துறையை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல வி.ஐ.பி.கள் முன்னிலையில் ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021 (தேசிய கல்வி பெருமை விருது 2021) ஏற்பாட்டுக் குழுவுடன் விழாவின் முதன்மை விருந்தினரால் நடிகர் தாமுவுக்கு வழங்கப்பட்டது.


கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.


நடிகர் தாமு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் ஆலோசனையுடன், 2011 முதல் சர்வதேச பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர் பேரவையை (IPTSA) தொடங்கினார். இது ஒரு அரசு சாரா கல்வி சேவை வழங்கும் அமைப்பு ஆகும்.

2011 முதல் 2016 வரை ஐந்து ஆண்டுகள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மேற்பார்வையில் செயல்பட்டார் டாக்டர் தாமு. அந்தவகையில் இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும், கல்வியில் தரமான மாணவர்களை உருவாக்கிடவும் டாக்டர் கலாமிடம் நேரடி பயிற்சி பெற்று பணியாற்றியவர் தான் நடிகர் தாமு..

தமிழ் இளைஞர்களின் நலனுக்காக, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், மற்றும் 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட இந்த அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்துள்ள அனுபவமுள்ள இந்தியாவின் கல்வி ஆர்வலர் தாமு என்றால் அது மிகையில்லை..


குறிப்பாக டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நேசத்துக்குரிய பக்தர்களில் ஒருவரான நடிகர் தாமு, அப்துல் கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியவர்.


இளைஞர்களின் தனிப்பட்ட நல்வாழ்வை வளர்ப்பது மற்றும் அவர்களின் சிறந்த எதிர்காலத்தை மேம்படுத்துதல், மேலும் இளம் தலைமுறையினரால் நம் இந்தியாவை பெருமைப்படுத்த வைப்பது போன்ற உயர்ந்த குறிக்கோளுடன் கல்விச் சேவை புரிந்துள்ளதற்காக நடிகர் தாமுவுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுவது மிக பொருத்தமான ஒன்று.


ஏற்கனவே சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள நடிகர் தாமுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த விருது அவரது கிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு மாணிக்க கல் என்றே சொல்லலாம்.