குடிசை வீட்டில் புறப்பட்டு சட்டசபை செல்லும் எளிய தோழர் மாரிமுத்து!
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மாரிமுத்து வாழ்க்கை பயணம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தேர்தல்களில் முக்கியமானவர்களின் வெற்றியை போலவே, எளிய மனிதர்களும் வெற்றி அடைந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களம்கண்ட க.மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளார்.
க.மாரிமுத்துவிற்கு 49 வயதாகிறது. கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணு - தங்கம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்து வளர்ந்தவர். இவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான். இவரது மனைவி விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டூர் ஒன்றியம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அப்பகுதி மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போராடி வரும் நிலையில், அந்த போராட்டங்களை கோட்டூர் ஒன்றியச் செயலாளராக மாரிமுத்து பலமுறை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.
மேலும், தொகுதியில் உள்ள அனைவரிடமும் இயல்பாக பழகும் எளியவராக அறியபடுகிறார். இதன் காரணமாகவே கம்யூனிஸ்ட் கட்சி இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. வேட்பாளர்களின் சொத்துக்கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அவர்களின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்ட போதே, மாரிமுத்து தாக்கல் செய்துள்ள விவரங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
தனது வங்கிக் கணக்கில் ரூ.58 ஆயிரம், மனைவியிடம் சேமிப்பு ரூ.1,000, 3 பவுன் தங்கச் சங்கிலி, 66 சென்ட் நிலம் உட்பட சுமார் ரூ.3 லட்சத்துக்கு இவரது மொத்த சொத்து மதிப்பு உள்ளதாக மாரிமுத்து தனது வேட்புமனுவில் கூறி இருந்தார். இவர் குடிசையில் தான் இன்னமும் வசிக்கிறார்.
புயல் மழையால் இவரது குடிசை பாதிக்கப்பட்ட நிலையில் அதை செப்பனிட வழியில்லாமல் மேலே தார்பாலின் போட்டிருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலும் கூட, அவர் தனக்கு நிவாரணமாகக் கிடைத்த தொகையை அருகாமையில் வழிக்கும் ஏழை ஒருவருக்கு கொடுத்து உதவியிருக்கிறார்.
மாரிமுத்து பி.காம் பட்டதாரி. இவர் வசித்த தெருவில் படித்தவர் இவர் மட்டும் தானாம். பட்டப்படிப்பு படித்தாலும் கூலி வேலைக்கு சென்று சம்பாதித்திருக்கிறார்.
25 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு வரும் இவரின் துடிப்புமிக்க செயல்பாடுகளும், அடித்தட்டு மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்ததுமே இவரை இந்தமுறை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வைத்தது.
அதன்படி, களப்பணியாற்றிய மாரிமுத்து தற்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலின்போதே மக்களின் குரலாக ஒலிப்பதற்காகவும், மக்களுக்கான திட்டங்களை பெற்றுத்தரவும் சட்டமன்றம் செல்ல களத்தில் நிற்பதாகக் கூறியிருந்தார். இப்போது அதன்படி மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க இருக்கிறார்.
வாழ்த்துக்கள் தோழர்!