{மாற்றத்திற்கான வேட்பாளர்} மக்கள் தொண்டாற்றும் எளிமையான வேட்பாளர் ‘மாரிமுத்து’
தமிழக தேர்தல் களத்தில் மிக எளிமையான வேட்பாளராக கவனத்தை ஈர்க்கிறார் கம்யூனிஸ்ட் கட்சியின் மாரிமுத்து. சொந்த வீடு இல்லாமல் குடிசையில் வசிக்கும் இவர், தன்னலமற்ற பணியால் மக்களை கவர்ந்திருக்கிறார்.
தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் விவாத்தை ஏற்படுத்தியுள்ளன. பல கட்சிகளில் கோடீஸ்வர் வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், தோழர்களின் கட்சியான இந்திய கம்ப்யூனிஸ்ட் கட்சி சார்பில், வேட்பாளராக களமிறங்கியிருக்கும் க.மாரிமுத்து தனது எளிமையால் கவனத்தை ஈர்க்கிறார்.
தேர்தல் செலவுக்கே பல வேட்பாளர்களை கோடிகளை செலவழிப்பது சகஜமாக இருக்கும் நிலையில், மாரிமுத்து குடிசையில் வசிப்பவர் என்பது மட்டும் அல்ல, சொந்தமாக சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருப்பவர் என்பதும் ஆச்சர்யம் அளிக்கலாம்.
தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான மாரிமுத்துவின் மனைவியும் விவசாய வேலைக்கு செல்வபவராக இருக்கிறார். இந்த வியப்புக்குறிய வேட்பாளர் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
கம்யூனிஸ்ட் கோட்டை
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி. இந்த பகுதி இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்த தொகுதியில் 1962ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இடதுசாரி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கம்ப்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றான திருத்துறைப்பூண்டி தொகுதி வேட்பாளராக க.மாரிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். கடந்த 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றியச் செயலாளராக உள்ளார்.
விவசாயக் குடும்பம்
க.மாரிமுத்துவிற்கு 49 வயதாகிறது. கோட்டூர் ஒன்றியம் காடுவாகுடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணு - தங்கம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்து வளர்ந்தவர். இவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்திலுள்ள அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான். இவரது மனைவி விவசாயக் கூலி வேலைக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டூர் ஒன்றியம் விவசாயிகள், விவசாயட்ஹ் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. அப்பகுதி மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் போராடி வரும் நிலையில், அந்த போராட்டங்களை கோட்டூர் ஒன்றியச் செயலாளராக மாரிமுத்து பலமுறை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறார்.
மேலும், தொகுதியில் உள்ள அனைவரிடமும் இயல்பாக பழகும் எளியவராக அறியபடுகிறார். இதன் காரணமாகவே கம்யூனிஸ்ட் கட்சி இவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
குடிசையில் வசிப்பவர்
வேட்பாளர்களின் சொத்துக்கணக்கு உள்ளிட்ட விவரங்கள் அவர்களின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாரிமுத்து தாக்கல் செய்துள்ள விவரங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றன.
தனது வங்கிக் கணக்கில் ரூ.58 ஆயிரம், மனைவியிடம் சேமிப்பு ரூ.1,000, 3 பவுன் தங்கச் சங்கிலி, 66 சென்ட் நிலம் உட்பட சுமார் ரூ.3 லட்சத்துக்கு இவரது மொத்த சொத்து மதிப்பு உள்ளதாக மாரிமுத்து தனது வேட்புமனுவில் கூறியுள்ளார். இவர் குடிசையில் தான் இன்னமும் வசிக்கிறார்.
புயல் மழையால் இவரது குடிசை பாதிக்கப்பட்ட நிலையில் அதை செப்பனிட வழியில்லாமல் மேலே தார்பாலின் போட்டிருப்பதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலும் கூட, அவர் தனக்கு நிவாரணமாகக் கிடைத்த தொகையை அருகாமையில் வழிக்கும் ஏழை ஒருவருக்கு கொடுத்து உதவியிருக்கிறார்.
மாரிமுத்து பி.காம் பட்டதாரி. இவர் வசித்த தெருவில் படித்தவர் இவர் மட்டும் தானாம். பட்டப்படிப்பு படித்தாலும் கூலி வேலைக்கு சென்று சம்பாதித்திருக்கிறார்.
”எங்கள் ஊர் கம்யூனிஸ்ட்டுகள் நிறைந்த பகுதி. உழைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டுமென்ற எனது அடிமனதில் இருந்த தேடல் காரணமாக நானும் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினேன்,” என்று கம்ப்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தது பற்றி அவர் தமிழ் இந்து நாளிதழிடம் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக இப்பகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகளை அங்கீகரித்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். கட்சியை கடந்து சாதாரண ஏழை என்கின்ற அடிப்படையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனைவி ஆதரவு
மாரிமுத்துவின் மனைவி கணவருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவரும் கூலி வேலைக்கு சென்று குடும்ப செலவுகளுக்கு உதவி வருகிறார்.
“எங்களுக்குன்னு பெருசா சொத்து கிடையாது. இந்த குடுசை வீடும், மாமனார் கஷ்டபட்டு வாங்கிவச்சிருந்த இரண்டுமா நிலமும் தான். அந்த நிலத்துல கிடைக்கிறதவச்சி இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறோம். நானும் என்னோட மாமியாரும் கூலி வேலைக்குப் போய்தான் தினசரி குடும்பத்தை நகர்த்துறோம். வீட்டுக்காரர் மக்களுக்காக ஓடிடுவார். கட்சிக்காக காலை இரவு பாராமல் போயிடுவார்,” என்று அவர் நக்கீரன் இதழுக்கான பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த ஏழையையும் இந்தத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில், நாங்க இவ்வளவு நாள் பட்ட வேதனை எல்லாம் சுக்குநூறாக கலைஞ்சிடுச்சு, என்றும் அவர் கூறியிருக்கிறார்.
“எதற்குத் தோழர் நமக்குச் சொத்து. மக்களும், கட்சியுமே நமது சொத்துதான். பாவம் இந்த மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தவிக்கிறாங்க. அவங்களுக்கு நிரந்தர வீடு கட்ட வேண்டும். விவசாயிகளுக்கான, தொழிலாளர்களுக்கான குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பேன்,” என்று மாரிமுத்து கூறியிருக்கிறார்.
மக்களுக்கான போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ள மாரிமுத்து, பிரச்சாரக் களத்தில் சுறுசுறுப்பாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் குமார் போட்டியிடுகிறார். இவர் செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்த்தி போட்டியிடுகிறார்.
பெயர்: க.மாரிமுத்து
வயது- 49
கல்வி- பிகாம்.
மனைவி; ஜெயசுதா, மகன், மகள்
கட்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தொகுதி- திருத்துறைப்பூண்டி
சிறப்பம்சம்: மக்கள் தொண்டர், எளிமையான வாழ்க்கை, பொதுவுடமைச் சிந்தனை.
போட்டி வேட்பாளர்கள்- சுரேஷ் குமார் ( அதிமுக), ஆர்த்தி, (நாம் தமிழர் கட்சி)
(பொறுப்புத்துறப்பு: இத்தொடரில் நாங்கள் வெளிப்படுத்தும் வேட்பாளர்கள், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக திகழ்பவர்கள். இக்கட்டுரை எந்த கட்சிக்கும் சார்பின்றி எழுதப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். யுவர்ஸ்டோரி எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் சார்பானது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.)