புதுமையான முயற்சிகள் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ’சூப்பர் ஹீரோஸ்’
’இண்டியன் சூப்பர்ஹீரோஸ்’ நிறுவனம் இடைத்தரகர்களைத் தவிர்த்து விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிசெய்கிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பர்களைக் கொண்டு ஸ்டேஷனரி பொருட்களை தயாரிக்கிறது. இவை பயன்பாட்டிற்குப் பிறகு மரங்களாக வளரக்கூடியவை.
திவ்யா ஷெட்டி இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது அவரது தாத்தா இறந்துபோனார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான அவருக்கு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அவர் அதிகக் கடன் சுமையில் இருந்தார். குடும்பத்திற்கு சிரமத்தை கொடுக்கக்கூடாது என்று நினைத்து அவர்களது பண்ணை வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரிழந்தார்.
இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றைய காலகட்டத்திலும் இந்திய விவசாயிகளின் நிலை மாறவில்லை. கடன் சுமை, பருவ நிலை மாற்றங்கள், இடைத்தரகர்களின் சுரண்டல்கள், பிளவுபட்ட கடன் சந்தைகள், விவசாயிகள் தற்கொலை போன்றவை இன்றளவும் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஆகவே இந்தியாவில் உள்ள 76 சதவீத விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலக விரும்புவதாக வளர்ந்து வரும் சமூகங்களின் ஆய்வு மைய (CSDS) அறிக்கை சுட்டிக்காட்டுவதில் வியப்பேதும் இல்லை.
திவ்யாவின் குடும்பத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்ததால் அவர் விவசாயம் தொடர்பாக செயல்பட அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. எனவே அவர் NMNIT கல்லூரியில் மென்பொருள் பிரிவில் பொறியியல் படித்தார். பின்னர் மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது.
சூப்பர்ஹீரோக்கள்
2015-ம் ஆண்டில் திவ்யா தனது தாத்தாவின் வாழ்க்கை மற்றும் அவரது இறப்பு குறித்த முழு விவரங்களையும் குடும்பத்தினர் மூலமாக தெரிந்துகொண்டார். அந்த சமயத்திலும் சமூகத்தில் பெரிதாக எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. விவசாயிகள் கடன் சுமையால் தவித்துக்கொண்டே இருந்தனர். மாண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துபோனார். அதுவே ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்கிறார் திவ்யா.
“இதற்கு தீர்வுகாணவேண்டும் என தீர்மானித்தேன். நான் வளர்ந்த விவசாய சமூகத்தின் நலனில் பங்களிக்க விரும்பினேன். என்னுடைய பணியை விட்டு விலகி என்னுடைய நண்பர் விஷ்ணுவர்தனுடன் இணைந்து விவசாயிகளுக்கு உதவ ’இண்டியன் சூப்பர்ஹீரோஸ்’ அமைக்க தீர்மானித்தேன். இரு குடும்பத்துடன் துவங்கப்பட்ட முயற்சி மெல்ல ஒரு நெட்வொர்க்காக வளர்ந்தது,” என்றார்.
ஆர்கானிக் விவசாயிகள் அடங்கிய நெட்வொர்க்கை உருவாக்குவதே இண்டியன் சூப்பர்ஹீரோஸ் நோக்கம். அத்துடன் விளைச்சல்கள் விவசாய நிலத்திலிருந்து வாடிக்கையாளரைச் சென்றடையும் வரை இடைத்தரகர்களின் தலையீடு தவிர்க்கப்படுவதை உறுதிசெய்கின்றனர். இது பலனளித்தது. முன்பிருந்த வருவாயைக் காட்டிலும் விவசாயிகள் சிறப்பான வருவாய் ஈட்டினர்.
இந்த நோக்கத்திற்காக இருவரும் ஒரு ஆன்லைன் போர்டலைத் துவங்கினார்கள். தென்னிந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்த அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்துகொண்டனர். இது குறித்து திவ்யா விவரிக்கையில்,
“800 விவசாயிகளை நேரடியாகக் கண்காணிப்பதும் நிர்வகிப்பதும் சாத்தியமில்லாத காரணத்தால் ஒருங்கிணைப்பு மற்றும் தரவுகள் சார்ந்த விவகாரங்களுக்கு அரசு சாரா நிறுவனங்கள் உதவியது. விற்பனையின் பெரும் பகுதி ஆன்லைனில் இருந்தபோதும் போர்டலில் விற்பனை செய்யப்படுகிறது,” என்றார்.
அத்துடன் இண்டியன் சூப்பர்ஹீரோஸ் விவசாயம் சார்ந்த பல்வேறு வகுப்புகளும் நடத்துகிறது. இதன் மூலம் விளைநிலத்தின் ஒரு பகுதியை வாடகைக்கோ அல்லது லீஸ் முறையிலோ எடுத்து நேரடியாக விவசாயிகளிடமிருந்தே ஆர்கானிக் விவசாயம் குறித்து நகரவாசிகள் கற்றுக்கொள்ளலாம்.
உலகை பசுமையாக்கும் முயற்சி
இண்டியன் சூப்பர்ஹீரோஸ் இடைத்தரகர்களை நீக்கிவிட்டு விவசாயிகள் நல்ல வருவாய் ஈட்ட உதவுவதுடன் கூடுதல் பலனளிக்கும் விதத்தில் செயல்பட தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
”மரங்கள் வெட்டப்படுவதும் பரவலாக போர்வெல் எடுக்கப்படுவதும் நிலத்தடி நீர் குறைவதற்கான காரணமாக அமைகிறது. ஸ்டேஷனரி போன்ற சிறு பொருட்கள் தயாரிக்கவும் மரங்கள் பயன்படுத்தப்படும் நிலையில் மரங்கள் வெட்டப்படுவதை எவ்வாறு குறைப்பது?” என்கிற கேள்வி மனதில் எழுந்தது என்கிறார் திவ்யா.
இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரில் இருந்து Plantcil (தற்போது Pepaa) என்கிற பென்சிலைக் கண்டுபிடித்தனர். இந்த பென்சில் பயன்படுத்தப்பட்ட பிறகு செடியாக வளரக்கூடியதாகும். மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரில் இருந்து தயாரிக்கப்பட்ட புதுமையான ஸ்டேஷனரி வகையான Plantcil, தற்போது இந்தியா முழுவதும் 250 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவர்களது தொழிற்சாலை கோயமுத்தூரில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள அவினாசி பகுதியில் அமைந்துள்ளது.
தயாரிப்பில் பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்
இண்டியன் சூப்பர்ஹீரோஸ் செயல்பாடுகள் இத்துடன் நின்றுவிடவில்லை.
“ஜவுளிக்கழிவுகள், பூக்கள், வாழைப்பழம், சணல் கழிவுகள், துண்டாக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றிலிருந்து பேனா, நோட்புக்குகள், கோஸ்டர்கள், பைகள், திருமண அழைப்பிதழ்கள், துணிப்பைகள் போன்ற பொருட்களைத் தயாரிக்க கிராமப்புற பெண்களுடன் இணைந்து பணிபுரிகிறோம். ஸ்டேஷனரி பொருட்களில் உள்நாட்டு ஆர்கானிக் விதைகள் கலக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டிற்குப் பிறகு இவை விதைக்கப்பட்டால் இதிலிருந்து காய்கறிகள், பூக்கள். மரங்கள் போன்றவை வளரும். இதனால் தாவரங்கள் அதிகரிக்கும்,” என்றார் திவ்யா.
40 லட்ச ரூபாய் முதலீட்டுடன் துவங்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த ஆண்டு 1.5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. தற்சமயம் சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவனம் வணிகத்தை வளர்ச்சியடையச் செய்ய நிதி உயர்த்த உள்ளது.
சிறப்பான எதிர்காலம்
முதல் தலைமுறை தொழில்முனைவராக இருப்பது கடினம் என்பதை ஒப்புக்கொள்கிறார் திவ்யா.
“விவசாயம் மற்றும் உற்பத்தி பிரிவுகள் ஆணாதிக்கம் நிறைந்தவை. இந்தப் பகுதியில் ஒரு பெண் செயல்படுவதைப் பார்க்கும்போது அந்தப் பெண் நம்பிக்கைக்கு உகந்த நபர் அல்ல என்கிற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆரம்பத்தில் விவசாயிகள் சந்தேகத்துடனேயே இந்த முயற்சியில் இணைந்துகொண்டனர். ஆனால் அவர்கள் நல்ல வருவாய் ஈட்டத் துவங்கியதும் அவர்களது மனநிலை மாறியது,” என்றார்.
எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்றும் அவர் தொடங்கிய இந்த முயற்சியில் மேலும் பலர் இணைந்துகொள்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் திவ்யா.
”அடுத்த மூன்றாண்டுகளில் நிறுவனத்தை விரிவடையச் செய்யவேண்டும். இந்திய சந்தை மட்டுமல்லாது அந்நிய நாட்டு சந்தைகளையும் ஆராயவேண்டும். குறைந்தபட்சம் 2,000 விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மாதந்தோறும் நிலையான வருவாய் ஈட்டி மேம்பட உதவவேண்டும். குறைந்தபட்சம் ஓராயிரம் பிராண்ட் மற்றும் ஒரு மில்லியன் நுகர்வோர் ஆர்கானிக் விவசாய முறைக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கும் மாற உதவவேண்டும். இதுவே எங்களது இலக்கு,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா