சிறு விவசாயிகளை சிறு தொழில்முனைவோர்களாக மாற்றும் நிறுவனம்!
மும்பையைச் சேர்ந்த Taru Naturals பத்தாயிரம் பழங்குடியினர் மற்றும் சிறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது.
'தரு நேச்சுரல்ஸ்' (Taru Naturals) சுமார் 10,000 பழங்குடியினர் மற்றும் சிறு விவசாயிகளுடன் இணைந்து செயல்படும் ஒரு நிறுவனம். சமீபத்தில் Good Food for All என்கிற போட்டியில் உலகளவில் பங்கேற்ற 50 நிறுவனங்களுக்கு 'சிறந்த சிறு வணிகங்கள்’ விருது வழங்கப்பட்டது.
UN Food Systems Summit உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நிறுவனங்களில் 'தரு நேச்சுரல்ஸ்' நிறுவனமும் அடங்கும். மும்பையைச் சேர்ந்த தரு நேச்சுரல்ஸ் 2016-ம் ஆண்டு ருசி ஜெயின் என்பவரால் தொடங்கப்பட்டது.
“உலகம் முழுவதும் உள்ள இளம் தொழில்முனைவோர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவமாக இருந்தது,” என்று குறிப்பிடுகிறார் ருசி.
தொழில்முனைவோர் உலகின் வெவ்வேறு பகுதியில் இருந்து செயல்பட்டாலும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன என்பதை ருசி புரிந்துகொண்டார். சரியான தயாரிப்பை உருவாக்குவது, சந்தை தேவைகளைப் புரிந்துகொள்வது, விளம்பர உத்திகள் போன்றவை தொடர்பான சிக்கல்கள் அனைவருக்கும் பொதுவாகவே இருப்பது புரிந்தது.
“சிறு விவசாயிகள் சிறு தொழில்முனைவோர்களாக மாறவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்,” என்று கூறும் ருசி சமூக நலன் சார்ந்த சிந்தனையே இந்தப் போட்டியில் வெற்றியடைய வைத்தது என்கிறார்.
விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறார்
சிறு விவசாயிகள் பருவநிலை மாற்றத்தைத் தாக்குபிடிக்கும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள Taru Naturals ஊக்குவிக்கிறது. மேலும், ஆர்கானிக் விவசாயம் பற்றிய பயிற்சியும் அளிக்கிறது. விவசாயம் சார்ந்த விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதில் பங்களிக்கிறது.
சிறு விவசாயிகளிடமிருந்து விளைபொருட்கள் நேரடியாக வாங்கப்பட்டு நியாயமான விலையில் நுகர்வோரைச் சென்றடைய ஏற்பாடு செய்கிறது.
முதலில் வெல்லம் விற்பனையில் ஈடுபட்ட இந்நிறுவனம் இன்று மஞ்சள், தானியங்கள், மசாலாக்கள், நட்ஸ், சீட்ஸ், எண்ணெய், கோதுமை மாவு, கருப்பரிசி என ஏராளமான பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
மும்பையில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. 10 பேர் கொண்ட குழுவாக செயல்படுகிறது.
இதுதவிர Taru Naturals வேளாண் காடுவளர்ப்பு, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது.
”விவசாயிகள் பழங்களைத் தரும் மரங்களை வளர்க்க ஊக்குவிக்கிறோம். இதன் மூலம் அவர்கள் பலனடையலாம்,” என்கிறார் ருசி.
அவர் மேலும் கூறும்போது,
”தரமான விளைச்சலைக் கொடுக்கவேண்டும் என்கிற நோக்கத்தை முன்னிறுத்தி செயல்படுவதால் எங்கள் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள பயிற்சியளிக்கிறோம்,” என்றார்.
விதைகளின் பயன்பாடு, வெவ்வேறு பயிர்களை வளர்க்கும் விதம் போன்றவற்றில் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான வழிகாட்டல்
இணைநிறுவனரான ருசியின் அம்மா பூனம் ஜெயின் நேச்சுரோபதி நிபுணர். இயற்கையுடன் ஒன்றி வாழ்வதன் அவசியத்தை சிறு வயதிலிருந்தே ருசிக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்துள்ளார்.
ருசி பல்வேறு என்ஜிஓ-க்களுடன் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த அனுபவத்தின் மூலம் விவசாயிகளுக்கும் சந்தைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர்ந்தார்.
“விவசாயம் தொடர்பான வணிகத்தை திறம்பட நடத்த விவசாயிகளுக்கு வழிகாட்டல் அவசியம் என்பதை எனக்குக் கிடைத்த அனுபவத்தில் புரிந்துகொண்டேன்,” என்கிறார்.
ருசி 2014-ம் ஆண்டு வேலை விட்டு விலகினார். 2016-ம் ஆண்டு ’தரு நேச்சுரல்ஸ்’ தொடங்கினார்.
சுயநிதியில் இயங்கி வந்த இந்த ஸ்டார்ட் அப் 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் Power Accelerator நிறுவனத்திடமிருந்து 12,000 டாலர் நிதி திரட்டியுள்ளது. சமீபத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சீட் நிதி திரட்டியுள்ளது.
டி2சி பிராண்டாக உருவெடுக்கிறது
தரு நேச்சுரல்ஸ் நிறுவனம் டி2சி பிராண்டாக அறிமுகமாக இருப்பதாக ருசி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் 20 அவுட்லெட்களில் கிடைக்கின்றன.
தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. துபாய் சந்தையில் அறிமுகமாக உள்ளது. வரும் நாட்களில் சிங்கப்பூரிலும் படிப்படியாக கூடுதல் சந்தைப்பகுதிகளில் செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ருசி குறிப்பிடுகிறார்.
”எங்கள் பேக்கேஜ்களில் பெயின்டிங் செய்வதற்காக கிராமப்புற கைவினைஞர்களுடன் இணைந்துள்ளோம். ஒவ்வொரு பேக்கேஜிலும் க்யூஆர் குறியீடு இருப்பதால் பேக்கேஜ்களை எளிதாக ட்ரேஸ் செய்யமுடியும்,” என்று விவரித்தார்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவு மிக்ஸ் தயாரிப்பை வழங்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா