Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

திருப்பூரில் நடந்த 100% ‘இயற்கை’ திருமண விழா!

குடிநீராக மழை நீர், குழந்தைகளுக்கு பனை வண்டி, செம்பு டம்ப்ளரில் தண்ணீர், பாரம்பரிய உணவுவகைகள், என்று எல்லா விஷயத்திலும் இயற்கை மற்றும் பாரம்பரியத்தை கலந்து அசத்தினர் இந்த திருப்பூர் குடும்பத்தார்.

திருப்பூரில் நடந்த 100% ‘இயற்கை’ திருமண விழா!

Thursday July 12, 2018 , 5 min Read

அம்பானி வீட்டுத் திருமணம் ஆகட்டும், அடித்தட்டு நிலை மக்கள் வீட்டு திருமணம் ஆகட்டும், திருமணம் என்றாலே ஆடம்பரமாக இருக்க வேண்டும், விருந்தினர்களை வாய் பிள்ளக்க வைக்கும் அளவிற்கு உணவு வகைகள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், அந்த ஆடம்பரம் என்பது செயற்கையாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் இல்லாமல், இயற்கையோடு இணைந்ததாக, நமது பாரம்பரியத்தை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும். இதைத் தான் தங்கள் திருமணத்தில் செய்து காட்டியுள்ளனர் திருப்பூரைச் சேர்ந்த மணமக்களான லோகேஸ்வரன் - கீதாஞ்சலி ரித்திகா.

திருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலமாகக் கொண்டிருந்தாலும், அடிப்படையில் விவசாய பின்னணி கொண்ட குடும்பம் லோகேஸ்வரன் மற்றும் கீதாஞ்சலி உடையது. மணமகள் கீதாஞ்சலியின் அப்பா ரவி ஒரு இயற்கை ஆர்வலர். பெருந்துறை அருகே சிறிய கிராமத்தில் விவசாயப் பின்னணியில் வளர்ந்தவர். தனது கிராமத்தில் சாயப்பட்டறை நீரால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். மண்வளத்தைக் கெடுக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர்.

image


உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமல்ல என தன் மகள் திருமணத்தையும் ஒரு இயற்கைத் திருவிழாவாக பாரம்பரிய முறைப்படி நடத்த திட்டமிட்டார் ரவி. இதற்கு மணமகன் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே, நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்தனர்.

முதல் வேலையாக தங்களுக்கு சொந்தமான நிலத்தில், செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு வளர்க்கத் தொடங்கினர். அதில் விளைந்த காய்கறிகளை மட்டுமே வைத்து அவர்கள் திருமணத்திற்கு உணவு தயாரித்துள்ளனர். கூடுதலாக ஆர்கானிக் முறைப்படி எங்கெங்கு விவசாயம் செய்யப்படுகிறது என்பதை விசாரித்து திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.

“திருமணத்தை எளிமையாக, அதே சமயத்தில் பாரம்பரிய முறைப்படி, பிளாஸ்டிக் இல்லாத இயற்கைத் திருவிழாவாக நடத்த வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. இதற்கு சம்பந்தி வீட்டில் சம்மதம் தெரிவிக்கவே மகிழ்ச்சியோடு வேலைகளை ஆரம்பித்தோம்.”

நாங்கள் புள்ளி வைக்கத் தொடங்கியதுமே, எங்களைச் சுற்றி இருந்தவர்கள் அதை வைத்து கோலம் போட உதவினர். அதாவது, இன்னும் இதையெல்லாம் திருமண விழாவில் சேர்க்கலாமே என பலரும் பல ஐடியாக்கள் கொடுத்தனர். 

“அப்படியாக உறவினர் ஒருவர் கொடுத்த ஐடியா தான் மழை நீரில் விருந்து தயாரிப்பது. அதற்கு திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்கிறார் ரவி.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் சத்துக்கள் நீங்கிய குடிநீரைத் தர விரும்பாத திருமண வீட்டார், அதிலும் புதுமையான மாற்றத்தை செய்ய விரும்பினர். அதன்படி, மழை நீரை சேமித்து அதனையே சமையலுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அருந்த கொடுத்தனர். நீர் அருந்துவதற்கான குவளைகளைக் கூட பிளாஸ்டிக் அல்லது பேப்பர் கப்களாக இவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை. செம்புக் குவளைகளிலேயே மழை நீரை திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அருந்தக் கொடுத்துள்ளனர். இதற்காக மழை நீர் சேமிப்பவர்களிடம் சென்று சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் மழை நீரை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

image


மழை நீரில் ஆக்ஸிஜன் அதிகம் இருக்கும். அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது என தெரிந்தாலும், நம்மில் பலருக்கு மழை நீரை சேமித்து வைத்து உபயோகப்படுத்தும் பழக்கம் இல்லை. ஆனால், ரவி வீட்டில் இன்றளவும் மழை நீரை தான் சமையலுக்கும், குடிக்கவும் பயன் படுத்துகின்றனர். மழையில் நனைந்தாலே காய்ச்சல் வந்து விடும் என பயப்படுபவர்கள் கூட, இவர்கள் வீட்டு திருமணத்தில் மழை நீரை அருந்தி, அதன் ருசியை அறிந்து கொண்டனர். அதோடு, தங்கள் வீட்டிலும் இனி மழை நீரை சேமித்து அதனையே குடிக்க பயன்படுத்தப் போவதாகவும் பலர் தெரிவித்தனராம்.

அடுத்தது உணவு. திருமண விருந்திற்கு தேவையான அனைத்து காய்கறிகளும் ஆர்கானிக் முறையில் கிடைத்துவிட, மசாலாப் பொடிகளையும் இவர்களே வாங்கித் தயாரித்துள்ளனர். இதனால் கலப்படம் இல்லாத மசாலாப் பொடிகளைப் பயன்படுத்தி, ஆர்கானிக் காய்கறிகளைக் கொண்டு, மழை நீரில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் மகிழ்ச்சி. 

பட உதவி: தி நியூஸ் மினிட்

பட உதவி: தி நியூஸ் மினிட்


சாப்பாட்டில் பனைகருப்பட்டி பர்பி, பாசிப்பருப்பு மாவு உருண்டை, வாழைப்பழப்பூ வடை, குதிரைவாலி அரிசியில் செய்யப்பட்ட சாம்பார் சாதம், கருப்பட்டி இனிப்பு, முக்குளிகை டீ என யாரும் அதிகம் சாப்பிட்டிராத சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுகள் இடம் பிடித்திருந்தன. தலைவாழை இலையில் உணவும், பாக்குமட்டை தட்டில் இது போன்ற நொருக்குத்தீனி வகைகளும் தரப்பட்டது.

“ஆரம்பத்தில் இவை அனைத்தையும் செய்து முடிக்க முடியுமா, இது சாத்தியமாகுமா என்ற அச்சம் உள்ளூர இருந்தது. எனவே, ஜூலை முதல் தேதியில் திருமணத்தன்று முன்னோடியாக சிலவற்றைச் செய்து பார்த்தோம். நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் அனைவரும் மகிழ்ச்சி. அந்த உத்வேகத்திலேயே ஜூலை 4ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவு, சந்தை என அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய முடிந்தது,” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவி.

image


முன்பெல்லாம் திருமணத்தின் போது பெண்களுக்கு பசு மாடுகளைச் சீராகத் தருவது தான் வழக்கமாம். ஆனால், இன்றோ பெரும்பாலான திருமண மண்டபங்களில் மணமகளுக்கு சீராக தரும் கார் ரிப்பன் கட்டப்பட்டு நிற்பதைப் பார்க்கலாம். எனவே, இதிலும் மாற்றாக சிந்தித்த ரவி, 

காருக்குப் பதில் தனது மகளுக்கு இரண்டு காங்கேயம் பசுக்களை, கன்றுக்குட்டியோடு சீராக தந்துள்ளார். மண்டப வாசலிலேயே அந்த மாடுகள் கட்டிப் போடப் பட்டிருந்தன.

குழந்தைகளின் கால்களை மொபைல் போன்கள் கட்டிப் போட்டுவிட்டது என்றே கூறலாம். அந்தளவிற்கு எங்கு சென்றாலும் செல்போனில் விளையாடுவது தான் குழந்தைகளுக்கு முக்கியப் பொழுதுபோக்காக உள்ளது. ஆனால், தங்கள் வீட்டுத் திருமணத்தில் குழந்தைகள் ஆடிப்பாடி விளையாட வேண்டும் என திட்டமிட்ட ரவி, பனவண்டி செய்து குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார். 

இதனால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த குழந்தைகள் உற்சாகமாக மண்டபம் முழுவதும் பனை வண்டியை ஓட்டி விளையாடிய காட்சியைக் கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கென மண்டபத்தில் ஒரு பகுதியில் ஒருவர் அமர்ந்து, குழந்தைகள் கேட்க கேட்க புதுப்புது வண்டிகளை செய்து தந்துள்ளார்.
image


சாப்பிட்டு முடித்தவர்கள் வெளியே வரும் பாதையில், அவர்கள் கண்களைக் கவரும் வண்ணம் இயற்கை சந்தை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆர்கானிக் பொருட்கள், பாக்கு மட்டையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மண்பானைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவை இடம் பிடித்திருந்தன. இதனால் திருமண வீட்டிற்கு வந்திருந்தவர்களுக்கு சந்தையின் அனுபவமும் இலவசமாகக் கிடைத்தது. ஒரே இடத்தில் தரமான பல பொருட்கள் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தேவையானதை வாங்கிச் சென்றனர்.

சாப்பிட்டு முடித்தவுடன் கை துடைக்க டிஷ்யூ பேப்பர் தராமல், அதற்குப் பதில் சிறு கைக்குட்டை போன்ற காட்டன் துணிகளைத் தந்தனர். அதிலும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், திருமணத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்தும் காட்டன் துணியில், கையால் வரையப்பட்டவையே ஆகும்.

“நாங்கள் வரவேற்புக்கு அழைப்பிதழ் கொடுத்து அழைத்தது என்னவோ 2,500 பேர் தான். ஆனால், பத்திரிகையில் இருந்த இயற்கைத் திருவிழா விபரத்தால் கவரப்பட்டு, நேரில் வந்து மணமக்களை ஆசிர்வதித்தவர்கள் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேல். சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த திருமணத்தால் எங்களுக்கு கூடுதலாக 3 ஆயிரம் உறவினர்கள் கிடைத்துள்ளனர்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரவி.

இப்படிப் பார்த்து பார்த்துச் செய்வதென்றால் செலவும் அதிகமாக இருக்குமே என்பவர்களுக்கு இல்லை என்பது தான் ரவியின் பதில். காய்கறிகள் உட்பட பல அவர்களது தோட்டத்தில் இருந்தே கிடைத்துள்ளது. வாண வேடிக்கை, பிளக்ஸ், பேனர், ருசிக்காக செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு என மற்ற திருமணங்களுக்கு ஆகும் அதே செலவு தான் இந்த இயற்கைத் திருமணத்திற்கும் ஆனதாக ரவி கூறுகிறார்.

image


ரவியின் இந்த முயற்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்தவர் ராஜ்குமார். ரவியின் பின்னலாடை நிறுவன ஊழியரான ராஜ்குமாரின் கீழ் பத்து பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட, அவர்கள் அனைவரையும் மேற்பார்வையிடுவது ராஜ்குமாரின் வேலை. அவர்கள் அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்ட கடமையை கண்ணும் கருத்துமாக செய்திருந்தனர். இதற்கு விழாவுக்கு வந்திருந்தவர்கள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே சான்று.

“இந்த ஒரு திருமணத்தை இயற்கை முறையில் செய்து முடித்தது மட்டும் எங்கள் வெற்றியல்ல. எங்களைப் பார்த்துப் பலரும் இது போன்ற முயற்சிகளை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத இயற்கைத் திருவிழாக்களாக பாரம்பரிய முறையில் நம் வீட்டு சுபகாரியங்கள் நடைபெற வேண்டும். இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்ற பலரின் சந்தேகத்திற்கு பதிலாகத் தான் எங்கள் வீட்டு திருமணத்தை கருதுகிறோம். இதைப் பார்த்து இன்னும் பலர் இதே போன்று திருமணங்கள் நடத்த வேண்டும். ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாக வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பலருக்கும் ஒரு முன்மாதிரி திருமணமாகத் தான் இதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்,” என்கிறார் ரவி.

image


இயந்திர உலகில் உறவுகள், நண்பர்கள் ஒரே இடத்தில் மகிழ்ச்சியாக சந்திப்பது என்பதே அரிதாகி வருகிறது. இது போன்ற திருமணம், பிறந்தநாள் விழாக்கள் மட்டுமே அனைவரையும் ஒன்றிணைக்கும் முக்கிய விசேஷ தினங்களாக உள்ளன. அத்தகைய சிறப்பான நாட்களை, இது போன்று முன்மாதிரி விழாவாக திட்டமிட்டு நடத்துவதன் மூலம், விருந்துக்கு வருபவர்களின் வாழ்த்துக்களை மட்டுமின்றி, பாராட்டுகளையும் எளிதாக பெறலாம் என்பதே இத்திருமணம் நமக்கு சொல்லும் சேதி.

இந்தத் திருமணம் வித்தியாசமானது மட்டுமல்லாது, அனைவரும் இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது பாராட்டுதலுக்குரியது.