கம்ப்யூட்டர் பெண்கள் 8 - மென்பொருள் மகாராணி ‘கிரேஸ் ஹாப்பர்’
ஆர்வம் உள்ள எவரும் புரோகிராமிங் கற்றுக்கொள்ள முடிகிறது என்றாலும் அதற்கான அடித்தளம் அமைத்தவரும் கிரேஸ் ஹாப்பர் தான்.
கம்ப்யூட்டர்கள் பொது பயன்பாட்டிற்கு வராமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
கம்ப்யூட்டர்கள் இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியாத இன்றைய சூழலில் இந்த கேள்விக்கான பதிலை நினைத்துப்பார்ப்பது கடினம் தான். உண்மையில், கம்ப்யூட்டர்கள் எல்லா துறையிலும் பயன்படுத்த முடியாத நிலையை கற்பனை செய்வது மிரட்சியாகவே இருக்கும்.
அதே போல், கம்ப்யூட்டர்கள் சாமானியர்கள் பயன்படுத்த முடியாமல், கணிதப்புலிகளும், கோடிங் வல்லுனர்களும் மட்டுமே கையாளக்கூடிய பிரத்யேக இயந்திரங்களாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? புரோகிராமிங் வேலைகளும் இருந்திருக்காது, புரோகிராமர்களுக்கான தேவையும் இருந்திருக்காது. பெட்டிக்கடையில் பில் போடுவதற்கு எல்லாம் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.
நல்ல வேளையாக கம்ப்யூட்டர் வரலாற்றில் இத்தகைய விபரீதங்கள் நிகழாமல், கம்ப்யூட்டர்கள் தலைமுறைகளாக முன்னேறி, பிசிகளாக உருமாறி, பெட்டிக்கடைகள் வரை வந்துவிட்டன.
முன்னோடி பெண்
இந்த மாற்றத்தில் முக்கியப் பங்காற்றிய கோடிங் மகாராணி ‘கிரேஸ் ஹாப்பர்’ (Grace Hopper) பற்றி தான் இந்த வாரம் பார்க்க இருக்கிறோம். இன்று கம்ப்யூட்டர்கள் எல்லோரும் பயன்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன என்றால் அதற்கு கிரேஸ் ஹாப்பர் முக்கியக் காரணம்.
அதோடு, கம்ப்யூட்டரோடு மனித மொழியில் பேச முடிகிறது என்றால், அதற்கு மூலக்காரணம் அவர் தான். ஆர்வம் உள்ள எவரும் புரோகிராமிங் கற்றுக்கொள்ள முடிகிறது என்றாலும் அதற்கான அடித்தளம் அமைத்தவரும் கிரேஸ் ஹாப்பர் தான்.
கம்ப்யூட்டர்களை எளிதாக ப்ரோகிராம் செய்வதற்கான கம்பைலரை முதலில் உருவாக்கிக் கொடுத்ததோடு, புரோகிராம்களை மனித மொழியில் எழுதுவதற்கான முதல் புரோகிராமை கிரேஸ் ஹாப்பர் உருவாக்கி கொடுத்தார்.
அவர் உருவாக்கிய குறிப்புகளே முதல் கம்ப்யூட்டர் மொழிகளில் ஒன்றான கோபால்- க்கு அடிப்படையாக அமைந்தது. இதன் காரணமாகவே, கிரேஸ் ஹாப்பர், கோபால் அன்னை, அசர வைக்கும் கிரேஸ், மென்பொருள் மகாராணி, கோடிங் அரசி என்றெல்லாம் பலவிதமாக போற்றப்படுகிறார்.
யூனிவேக் அத்தியாயம்
கம்ப்யூட்டர் வரலாற்றில் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படும் யூனிவேக் (UNIVAC) கம்ப்யூட்டர் திட்டத்தில் இணைந்து பணியாற்றிய போது கிரேஸ் ஹாப்பர் இந்த பங்களிப்பை செய்தார் என்பதை இங்கு மனதில் கொள்வது அவசியம். ஏனெனில், யூனிவேக் கம்ப்யூட்டர் தான், வர்த்தகப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட முதல் கம்ப்யூட்டராக அமைகிறது. (யூனிவர்சல் ஆட்டமேட்டிக் கம்ப்யூட்டர் என்பதன் சுருக்கம்).
யூனிவேக் கம்ப்யூட்டர் உருவாக்கப்படுவதற்கு முன், கம்ப்யூட்டர்கள் பெரும்பாலும் ராணுவ பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்தப்பட்டன. மற்றபடி, அரசு அமைப்புகள் மட்டும் ஆய்வு பணிக்காக பயன்பட்டன. ஒரு கம்ப்யூட்டரை வடிவமைத்து உருவாக்க பெரும் பொருட்செலவு தேவை என்பதோடு வல்லுனர்கள் படை சேர்ந்து ஆண்டு கணக்கில் உருவாக்க வேண்டிய திட்டமாகவும் இருந்தது.
இந்த நிலையில் தான் வர்த்தகப் பயன்பாட்டிற்காக யூனிவேக் கம்ப்யூட்டருக்கு திட்டமிடப்பட்டது. யூனிவேக் உருவாக்கத்தில் உள்ள முக்கியமான கிளைக்கதையை இங்கு பார்ப்பது பொருத்தமானது.
எனியாக் காலம்
பொதுப் பயன்பாட்டிற்கான முதல் கம்ப்யூட்டரான எனியாக், அமெரிக்க ராணுவத்திற்கான ஏவுகனை செலுத்தல் தொடர்பான கணக்குகளை போடுவதற்காக பிரதானமாக உருவாக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் மார்க் 1 மற்றும் மார்க் 2 ஆகிய கம்ப்யூட்டர்களும் ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டன.
ஹார்வர்டு கணிதவியலாளரான ஹாவர்டு ஐகன் (Howard Aiken ) மார்க் கம்ப்யூட்டரை அமெரிக்கக் கடற்படைக்காக உருவாக்கிக் கொடுத்தார். எனியாக் கம்ப்யூட்டரை எகர்ட் மற்றும் மவுச்லி (Eckert and Mauchly) உருவாக்கிக் கொடுத்தனர்.
இரண்டு குழுவினரும் கடற்படைக்காக பணியாற்றிய போது, அவர்களின் நோக்கம் மாறுபடவில்லை. ஆனால், போர் முடிந்த பிறகு கம்ப்யூட்டரின் பயன்பாட்டிற்கான திசையில் இந்த குழுக்களின் தலைவர்கள் இடையே பெரும் வேறுபாடு இருந்தது. ஐகன், கம்ப்யூட்டர்களை அறிவியல் ஆய்வுக்கான கருவியாக பார்த்தார். மவுச்லி, கம்ப்யூட்டர்கள் வர்த்தக துறையிலும் கைகொடுக்கும் என நம்பினார்.
இது தொடர்பான விவாதங்களின் போது, ஐகன், கம்ப்யூட்டர்களை வர்த்தகமயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிகபட்சமாக அமெரிக்காவிற்கு ஐந்து அல்லது ஆறு கம்ப்யூட்டர்கள் தேவைப்படலாம் அதற்கு மேல் என்ன தேவை என அவர் வாதிட்டர்.
கம்ப்யூட்டர் விவாதம்
இந்த விவாதத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் பேராசிரியர் ஐகன் சொன்னதை ஏற்றுக்கொண்டது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் தான் மவுச்லி எனியாக் கம்ப்யூட்டரை உருவாக்கிக் கொடுத்திருந்தார். பல்கலைக்கழகத்தில் மவுச்லி மற்றும் எகெர்ட் பணியில் தொடர நிபந்தனை விதிக்கப்பட்டதை அடுத்து இருவரும் விலகி தனி நிறுவனத்தை துவக்கி யூனிவேக் கம்ப்யூட்டரை உருவாக்கத்துவங்கினர்.
யூனிவேக் உருவாக்க கதையே விரிவாக பார்க்க வேண்டியது என்றாலும், இப்போதைக்கு நாம் கிரேஸ் ஹாப்பர் கதைக்கு வருவோம். கிரேஸ் ஹாப்பர் பேராசிரியர் ஐகானுடன் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு, யூனிவேக் உருவாக்கத்தில் மவுசிலி- எகெர்டு குழுவுடன் இணைந்து பணியாற்றி மென்பொருள் உலகில் சாதனைகள் படைத்தார். அமெரிக்க கடற்படை பணி தான் இதற்கான இணைப்பாக அமைந்தது.
கடற்படை அதிகாரி என்பது கிரேஸ் ஹாப்பர் வாழ்க்கையில் முக்கிய அடையளமாகவும் அமைகிறது. கடற்படை பணியை அவர் மிகப்பெரிய கவுரமாக கருதியதோடு, கம்ப்யூட்டர் வரலாற்றில் கடற்படையின் பங்களிப்பையும் முக்கியமாகக் கருதினார். கடற்படையில் அவர் இணைந்த கதையை சுருக்கமாக பார்த்துவிட்டு அவரது கம்ப்யூட்டர் பங்களிப்பை தொடர்ந்து பார்க்கலாம்.
கிரேஸ் ஹாப்பர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1906ல் பிறந்தார். சிறு வயதிலேயே அவருக்கு கணிதத்திலுல், வடிவியலிலும் ஆர்வம் அதிகம் இருந்தது. கடிகாரங்கள் செயல்படும் விதத்தை அறிவதற்காக அடுத்தடுத்து ஏழு கடிகாரங்களை அக்குவேறு ஆணி வேறாக பிரித்துப்போடும் அளவுக்கு அதீத ஆர்வம் கொண்ட சிறுமியாகவும் இருந்திருக்கிறார்.
கடற்படை பணி
வாஸர் கல்லூரியில் பெளதீகம், கணிதத்தில் பட்டம் பெற்றவர் யேல் பல்கலையில் முதுகலை பட்டம் பெற்றார். வாஸர் கல்லூரியில் பாடம் நடத்தும் பணியை ஏற்றுக்கொண்டவர். இதனிடையே, கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்தார்.
வின்செண்ட் ஹாப்பர் என்பவரை திருமணமும் செய்து கொண்டார். 1945ல் விவாகரத்து பெற்ற நிலையில், ஹாப்பர் அதன் பிறகு மறுமணம் செய்து கொள்ளவில்லை என்பதோடு, தன் பெயருடன் ஹாப்பர் பெயரை தொடர்ந்து பயன்படுத்தினார். மறுமணம் செய்து கொள்ளாதது பின்னாளில் கம்ப்யூட்டர் பணியில் மூழ்கியிருப்பதற்கான சுதந்திரத்தை அவருக்கு வழங்கியது.
வாஸர் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த போது, பியர்ல் ஹார்பர் துறைமுகம் தாக்கப்பட்டு அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் நுழையும் நிலை உண்டான போது ஹாப்பர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற விரும்பினார். எனினும் கடற்படையில் சேர்வதற்கான தகுதி இல்லை என அவர் நிராகரிக்கப்பட்டார். இருந்தும் மனம் தளராக கிரேஸ் ஹாப்பர், கடற்படைக்கான இருப்பு வீரர்கள் பிரிவிற்கு விண்ணப்பித்து தேர்வானார். இறுதி வரை இதே பிரிவில் பணியாற்றியதோடு, பதவி உயர்வுகளையும், கவுரவங்களையும் பெற்றார்.
உலகப்போரின் போது, கிரேஸ் ஹாப்பருக்கு மார்க் கம்ப்யூட்டருடன் பணியாற்றிம் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை அவர் கம்ப்யூட்டர் எனும் இயந்திரத்தை அறிந்ததில்லை. கடற்படையில் இணைந்ததும் அடிப்படை பயிற்சிக்குப்பிறகு அவர் ஹார்வர்டு பல்கலையில் கப்பல்களுக்கான கம்ப்யூட்டர் திட்டத்தில் பணியாற்ற அனுப்பி வைக்கப்பட்டார். கம்ப்யூட்டர் ஆய்வுக்கான மையங்களில் ஒன்றாக இது அமைந்திருந்தது.
இங்கு தான், பேராசிரியர் ஐகன் அவருக்கு மார்க் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்து அதன் செயல்பாடுகளை கற்றுத்தந்தார். மார்க் கம்ப்யூட்டரை மிகப்பெரிய கணக்கிடும் இயந்திரம் என்றே சொல்ல வேண்டும். அது கணிதவியல் அட்டவணைகளை கணக்கிட்டு அச்சிட்டு கொடுத்தது. எண்களும், குறியீடுகளும் தான் அதற்கு எல்லாமுமாக இருந்தன. இந்த கம்ப்யூட்டரில் பயன்படுத்துவதற்கான கோடிங் குறிப்புகளை ஹாப்பரிடம் ஐகன் கொடுத்து அவற்றை பழகிக் கொள்ளுமாறு கூறினார்.
துவக்கத்தில் ஹாப்பருக்கு அந்த குறிப்புகள் புரியாத புதிராக இருந்தாலும் கணித தேர்ச்சியால் அவற்றை பரிட்சியமாக்கி கொண்டார். கோடிங் குறிப்புகளை மேலும் புரிந்து கொள்ள கம்பயூட்டர் செயல்பாட்டில் கவனம் செலுத்திய போது இந்த புதிய இயந்திரங்கள் மீது அவருக்கு ஈர்ப்பு உண்டானது. அவர் புரோகிராமிங் கற்றுக்கொண்டதோடு, கம்ப்யூட்டர் தொடர்பாக சார்லெச் பேபேஜ் முன்வைத்த முக்கிய கருத்தாக்கங்களையும் அறிந்து கொண்டார்.
மார்க் கம்ப்யூட்டர்
இதனிடையே, மார்க் கம்ப்யூட்டருக்கான வழிகாட்டி புத்தகத்தை எழுதுமாறும் கேட்டுக் கொண்டார். என்னால் புத்தகம் எழுத முடியாது என ஹாப்பர் மறுப்பு தெரிவித்த போது நீங்கள் இப்போது கடற்படையில் பணியாற்றுகிறீர்கள் என ஐகன் நினைவூட்டினார். இதை கட்டளையாக புரிந்து கொண்டு ஹாப்பர் மார்க் வழிகாட்டி புத்தகத்தை எழுதினார்.
ஹார்வர்டில் மார்க் 2 மற்றும் 3 கம்ப்யூட்டர் உருவாக்கத்திலும் அவர் முக்கியp பங்காற்றினார். 1949 வரை ஹார்வர்டு கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் பணியாற்றினார். இடையே வாஸர் பல்கலையில் பேராசியர் பணி உறுதி செய்யப்பட்டதையும் அவர் ஏற்கவில்லை.
1949ல் ஹாப்பர், எகெர்ட் மற்றும் மவுச்லி உருவாக்கியிருந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கணிதவியலாளராக இணைந்தார். இங்கு தான் கம்ப்யூட்டர் துறைக்கான அவரது முக்கிய பங்களிப்புகள் நிகழ்ந்தன. ஐகனிடம் பணியாற்றிய போது கம்ப்யூட்டர் அடிப்படை செயல்பாடு பற்றி உண்டாகியிருந்த அடிப்படை புரிதல் கைகொடுத்தது.
முந்தைய கம்ப்யூட்டர்களில் இருந்து பல விஷயங்களில் வேறுபட்டு, மேம்பட்டிருந்த யூனிவாக் கம்ப்யூட்டர் திட்டத்தில் பணியாற்றிய போது, ஹாப்பருக்கு அதன் சாத்தியங்கள் தெளிவாக புரிந்தது. அந்த வகையில் மவுச்லியின் கம்ப்யூட்டர் பார்வையை அவர் தொலைநோக்கு மிக்கதாக உணர்ந்திருந்தார். எதிர்காலத்தில் வர்த்தகத் துறையில் மட்டும் அல்லாது மேலும் பல துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு வந்து பலன் அளிக்கும் என உறுதியாக நம்பினார்.
புதிய பாதை
இதற்குத் தடையாக, கம்ப்யூட்டர்களுடன் தொடர்பு கொள்ளும் இறுக்கமான முறையை பார்த்தார். கம்ப்யூட்டருடன் குறியீடுகள் மூலம் பேசுவதற்கு பதிலாக, மனிதர்கள் போலவே ஆங்கிலத்தில் கட்டளைகளை எழுத முடிந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப்பார்த்தார். இவ்வாறு செய்வதன் மூலம், கணிதத்தில் நிபுணத்துவம் இல்லாதவர்கள் கூட, கம்ப்யூட்டரை இயக்குவதற்கான குறிப்புகளை எழுதலாம் என நினைத்தார். இதுவே அவசியம் என்றும் நம்பினார்.
ஆனால், கம்பயூட்டர்களுடன் ஆங்கிலத்தில் பேசலாம் என்னும் அவரது கருத்தை சகாக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கம்ப்யூட்டர்களுக்கு எண்கள் மட்டும் புரியும் வேறு எதுவும் புரியாது என பதில் அளித்து அவரது யோசனையை நிராகரித்தனர். எனினும் அவர் மனம் தளராமல் இது தொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டார். இருப்பினும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அவர் யோசனை ஏற்கபடவில்லை.
வாழ்நாள் சாதனை
இதனிடையே, எகெர்ட்- மவுச்லி நிறுவனம் ரெமிங்டன் ரான் கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்டது. புதிய நிர்வாகிகள், ஹாப்பர் யோசனையை ஊக்குவித்தனர். இதன் பயனாக கம்ப்யூட்டருக்கான முதல் கம்பைலரை அவர் உருவாக்கினார். அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆணைத்தொடர்களின் நினைவுக்குறிப்பு என கம்பைலரை புரிந்து கொள்ளலாம்.
இவற்றை மீண்டும் உள்ளீடு செய்யாமல் தேவைப்படும் போது, நினைவுத்திறனில் இருந்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். கம்பைலர்கள் இன்று நிரலாக்கத்தில் பிரிக்க முடியாத முக்கிய அம்சமாக அமைந்திருக்கின்றன.
அடுத்த கட்டமாக, குறியீடுகளையும், பலவித கணித சிறப்பு அடையாளங்களையும் கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில், நடைமுறை மொழியில் நிரலாக்கம் செய்வதற்கான அடிப்படை வழியையும் உருவாக்கி கொடுத்தார். புளோமேட்டிக் எனும் பெயரில் இவர் உருவாக்கிய இந்த அமைப்பே பின்னாளில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான புரோகிராமிங் மொழியான கோபால்-க்கு (COBOL) அடிப்படையாக அமைந்தது. இதன் பயனாகவே அவர் மென்பொருள் மகாராணி எனப் பாராட்டப்படுகிறார்.
தொடர்ந்து கம்ப்யூட்டர் துறையில் நெருங்கி பணியாற்றிய ஹாப்பர் தனது இறுதிக்காலம் வரை இத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும், இளம் தலைமுறைக்கு கம்ப்யூட்டர் தொடர்பான பயிற்சி அளிப்பதிகும் கவனம் செலுத்தி வந்தார். கம்ப்யூட்டர் துறையில் மற்ற எந்த சாதனையையும் விட இளம் தலைமுறைக்கு பயிற்சி அளித்து வழிகாட்டியதையே பெரும் சாதனையாக கருதுவதாக அவர் பெருமிதம் கொண்டிருந்தார். எனினும் கம்ப்யூட்டர்கள் வர்த்தக பயன்பாட்டிற்கும், பொது பயன்பாட்டிற்கும் வந்ததில் அவரது பங்களிப்பு நிகரில்லாதது.
அதோடு, புரோகிராமிங் செய்வது முக்கியப் பணியாக உருவாவதற்கும் வழிவகுத்த கிரேஸ் ஹாப்பர், மென்பொருள் துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பக் (bug) கருத்தாக்கத்தை உருவாக்கியதாகவும் அறியப்படுகிறார் என்பது அவரது வாழ்க்கையின் பல சுவாரஸ்யங்களில் ஒன்றாக அமைகிறது.