கம்ப்யூட்டர் பெண்கள் 7: நம்மை கம்ப்யூட்டர் கற்க வைத்த மேதை!
கல்வி கற்பது முதல் இ-காமர்ஸ் வரை எல்லாவற்றுக்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடிவதற்கும் இடாவுக்கே உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
’இயந்திரத்தால் உங்களுக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதீர்கள். இயந்திரத்துடன் இணைந்து, நாட்டிற்கும், உலகிற்கும் உங்களால் என்ன செய்ய முடியும் என கேட்டுக் கொள்ளுங்கள்”.- இடா ரோட்ஸ்
பெட்டிக்கடைகளில் கூட கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அளவுக்கு கம்ப்யூட்டர் பரவலாகி இருக்கிறது என்றால், அமெரிக்க கம்ப்யூட்டர் மேதை இடா ரோட்ஸ்-க்கு (Ida Rhodes) நாம் நன்றி சொல்ல வேண்டும். அதோடு கல்வி கற்பது முதல் இ-காமர்ஸ் வரை எல்லாவற்றுக்கும் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடிவதற்கும் இடாவுக்கே உலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கம்ப்யூட்டர் சார்ந்து எண்ணற்ற வேலைவாய்ப்புகளும், மகத்தான பயன்பாடுகளும் உருவாகியிருப்பதற்கும் கூட இடாவே முக்கியக் காரணம்.
இப்படி இடா ரோட்ஸ் பற்றி புகழ் பாட காரணம், கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பாக அவருக்கு இருந்த தொலைநோக்கான பார்வையும், கம்ப்யூட்டர்களின் ஆற்றல் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையும் தான். அந்த வகையில் அவரை கம்ப்யூட்டர் துறையின் முன்னோடிகள் சார்லஸ் பேபேஜ் மற்றும் ஆலன் டூரிங் வரிசையில் வைத்துப்பார்க்கலாம்.
சார்லெஸ் பேபேஜும், ஆலன் டூரிங்கும் நவீன கம்ப்யூட்டருக்கான கருத்தாக்க அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தனர் என்றால், கம்ப்யூட்டர் எனும் இயந்திரத்தின் வெகுஜன பயன்பாட்டை குறிப்பாக அதன் வர்த்தகப் பயன்பாடு தொடர்பான தொலைநோக்கான பார்வையை இடா ரோட்ஸ் முன்வைத்தார்.
கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பான அவரது கருத்துகளும், பார்வையும் முன்னோடி தன்மை கொண்டிருந்ததோடு, கம்ப்யூட்டர் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பாகவும் அமைந்தன.
கம்ப்யூட்டர் கணிப்பு
இனி வரும் காலங்களில் கம்ப்யூட்டர் நடைமுறை வாழ்க்கையில் பலவிதமான பயன்பாடுகளை கொண்டிருக்கும் எனும் தொலைநோக்கான பார்வையை கொண்டிருந்ததோடு, இந்த கருத்துகளை ஏற்கச்செய்வதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் புழக்கத்திற்கு வரும், வீடியோ வசதி சாத்தியமாகலாம் என்பது உள்ளிட்ட காலத்தை முந்தைய கணிப்புகளும் அவரது பார்வையில் இருந்தன.
கம்ப்யூட்டர் வரலாற்றில் பங்காற்ற கிடைத்த வாய்ப்பும், அதனடிப்படையில் கம்ப்யூட்டர் இயந்திரத்தின் செயல்பாட்டை புரிந்து கொள்ளும் நுண்ணறிவும் கம்ப்யூட்டரின் எதிர்கால பயன்பாடு பற்றிய புரிதலை இடாவுக்கு அளித்தன.
கம்ப்யூட்டர் வளர்ச்சியில் இடாவின் பங்களிப்பை புரிந்து கொள்ள அவரது வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.
உக்ரைன் மங்கை
இடாவின் இயற்பெயர் ஹடாஷா இட்கோவிட்ஸ் (Hadassah Itzkowitz). இப்போதைய உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்’இல் இருந்து 150 மைல் தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர், இளம் பருவத்தில் ரஷ்ய சீமாட்டி ஒருவரின் ஆதரவை பெற்றிருந்த நிலையில், 13வது வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். 1923ல் கார்னல் பல்கலையில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.
சில ஆண்டுகளில் கொலம்பியா பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றார். உயர் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்ற நிலையிலும், தனது துறையில் அவருக்கு உடனடியாக வேலை கிடைக்கவில்லை. இதனிடையே, அவரது திருமணமும் தோல்வியில் முடிந்தது. திருமணத்திற்கு பின் அவர் ரோட்ஸ் எனும் பெயரை தக்க வைத்துக்கொண்டார். ’இடா’ என்பது அமெரிக்க வாழ்க்கைக்காக அவரே சூட்டிக்கொண்ட பெயராகும்.
இதனிடையே, அவர் செவிலியராகவும் பயிற்சி பெற்றிருந்தார். அடுத்து வந்த ஆண்டுகளில், செவிலியராக பணியாற்றியதோடு, கணித ஆசிரியை உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டார். குமாஸ்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த காலத்தில் தான் அவர் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.
ஐன்ஸ்டீன் உரையை கேட்டு உரைந்து நின்ற இடா, அவரிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியாத அளவுக்கு உரைந்து நின்ற நிலையை அடுத்த சில ஆண்டுகளில் அவரை மீண்டும் சந்தித்த போது, ஐன்ஸ்டீன் நினைவு கூர்ந்து இப்போது பேச கற்றுக்கொண்டுவிட்டீர்களா எனக் கேட்டதாக சொல்லப்படுவது இடா வாழ்க்கையில் சுவாரஸ்யமான கதையாக அமைகிறது.
கணித பாதை
சோதனைகளும், சவால்களும் நிறைந்த இடாவின் வாழ்க்கையில் உண்மையான திரும்பு முனை, 1940ல் தான் உண்டானது. அந்த ஆண்டு தான், அவர் கணிதவியல் அட்டவணை திட்டத்தில் பொறுப்பில் சேர்ந்தார். இந்த தொடரில் நாம் ஏற்கனவே பார்த்த சாதனையாளரான ஜெர்ட்ருட் பிளான்கின் கீழ் இடா இந்த திட்டத்தில் பணியாற்றினார்.
இந்த திட்டத்திற்காக பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த 400 க்கும் மேற்பட்ட மனித கம்ப்யூட்டர்களில் இடாவும் ஒருவர் என்றாலும், கணிதத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி காரணமாக, இந்த திட்டத்தை வழிநடத்திய பிளான்கின் வலதுகரமாக திகழ்ந்தார். திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு கணக்கு போடுவதில் பயிற்சி அளித்ததோடு, அவற்றை சோதித்து சரி பார்ப்பதிலும் கவனம் செலுத்தினார்.
இந்த திட்டத்தின் கீழ் வெளியான கணிதவியல் அட்டவணை அத்தியாய புத்தகங்களிலும் அவரது பங்கு முக்கியமாக அமைந்தது. மனித கம்ப்யூட்டர்களாக இந்த குழுவினர் சிக்கலான கணக்குகளை கொண்டு, கணக்கிடுவதற்கான அட்டவணைகளை தயார் செய்து கொண்டிருந்த காலத்தில், விஞ்ஞான உலகம் கம்ப்யூட்டர் யுகத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
ஆரம்ப கால கம்ப்யூட்டர்களின் தொடர்ச்சியாக 1946ல் பெரும் பாய்ச்சலாக முதல் பொது பயன்பாடு கம்ப்யூட்டரான எனியாக் அறிமுகமானது. மாபெரும் மூளை (The Giant Brain) என்று வர்ணிக்கப்பட்ட எனியாக் பொதுமக்கள் மத்தியில் கம்ப்யூட்டர் தொடர்பான பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.
யூனிவேக் கம்ப்யூட்டர்
இந்த நிலையில் தான், யூனிவேக் (UNIVAC) கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி துவங்கியது. எனியாக் கம்ப்யூட்டரை உருவாக்கிய அதே குழு தான் ’யூனிவேக்’ உருவாக்கத்திலும் ஈடுபட்டது. யூனிவேக்கில் முக்கிய முன்னேற்றம் என்னவெனில், முதல் முறையாக வர்த்தக பயன்பாட்டிற்காக இந்த கம்ப்யூட்டர் திட்டமிடப்பட்டது.
தேசிய தர நிர்ணய அமைப்பு இதற்கான நிதி ஆதரவை அளித்தது. இந்த அமைப்பின் சார்பில், வாஷிங்டன் நகரில் நேஷனல் அப்லைடு மேத்தமேடிக்ஸ் லாபரட்டரீஸ் எனும் துறையும் உண்டாக்கப்பட்டிருந்தது.
நியூயார்க் நகரில் செயல்பட்டு வந்த கணிதவியல் அட்டவணை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பலன்களை அறிந்த வாஷிங்டன் நிர்வாகிகள், மின்னணு கம்ப்யூட்டர் உருவாக்கப் பணியில் தங்களுக்கு உதவ ஒருவரை அனுப்புமாறு கோரிக்கை வைத்தது. கணிதவியல் அட்டவணை திட்டத்தின் தலைவரான டாக்டர்.லோவன் இந்த பணிக்காக இடாவை அனுப்பி வைக்க தீர்மானித்தார்.
வாஷிங்டன் செல்வதற்காக கோரிக்கையை இடா தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டார். மின்னணு திட்டம் என்கிறீர்கள், எனக்கோ மின்னணுவியல் பற்றி எதுவும் தெரியாது, அங்கு போய் நான் முட்டாளாக நிற்கப் போகிறேன். என்பது போல தனது தயக்கத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டுச்சென்றார்.
அவர் நினைத்தது போலவே, வாஷிங்டன்னில் கம்ப்யூட்டர் குழுவினரைச்சந்தித்து பேசிய போது, பல விஷயங்கள் குறித்து குழப்பமாக உணர்ந்தார். தனது குழப்பங்களை கேள்விகளாக கேட்டார். ஒரு வாரம் இருந்தவர், இந்த வேலைக்கு பொருத்தமானவர் இல்லை என நினைத்து திரும்பி வந்துவிட்டார்.
’நியூயார்க் வந்ததும் தனது மேலதிகாரி லோவனிடம் சென்று, நீங்கள் என்னை அங்கு அனுப்பியிருக்கவே கூடாது’ என்று கூறினார். ஆனால், ஆச்சர்யம் என்னவெனில், வாஷிங்டனில் இருந்து இடாவை மீண்டும் அனுப்பி வைக்குமாறு கோரியிருந்தனர். அவரது செயல்பாடும், செயல்திறனும் அவர்களுக்கு பிடித்துப்போயிருந்தது. மின்னணு கம்ப்யூட்டர் பற்றி கற்றுக்கொள்வதை மீண்டும் ஒரு முறை முயற்சிக்குமாறு லோவனும் கூறவே இடா அதை ஏற்றுக்கொண்டார்.
இந்த முறை இடா திரும்பி வரவில்லை என்பதோடு அதன் பிறகு அந்த துறையிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். இங்கு பணியாற்றிய போது தான், அவர் யூனிவாக் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் பங்கு வகித்தார். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு துறையின் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கான புரோகிராமை உருவாக்கிக் கொடுத்தார். யூனிவாக் கம்ப்யூட்டருக்கான சி-10 புரோகிராமிங் மொழியையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
ஆரம்ப தோல்வி
மின்னணு கம்ப்யூட்டர் செயல்படும் விதத்தை கற்றுக்கொண்டவர் கம்ப்யூட்டர்கள் மீது தனிப்பற்று கொண்டவரானார். இயல்பாக அவரிடம் இருந்த கணிதத் திறன் கைகொடுக்க கம்ப்யூட்டர்களை இயக்குவதற்கான புரோகிராம்களை உருவாக்கும் திறனில் சிறந்து விளங்கினார்.
அதுவரை கம்ப்யூட்டர் என்பது பெரும்பாலும் ஆய்வு சார்ந்ததாகவே இருந்தது. மேலும், போரின் தேவைக்கு ஈடுகொடுப்பதற்காகவே கம்ப்யூட்டரின் பயன்பாடும் அமைந்திருந்தது. கம்ப்யூட்டரின் அதிவேகமாகவும், துல்லியமாகவும் கணக்கு போடும் திறன் அனைவரையும் வியக்க வைத்தாலும், அதன் பயன்பாடு குறித்து பெரிய அளவில் புரிதல் இருக்கவில்லை. இந்த சூழலில் தான், 1950-களில் வர்த்தகப் பயன்பாட்டிற்காக கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது.
வருங்காலத்தில் கம்ப்யூட்டர்கள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தபோகின்றன என்பதை இடா அறிந்திருந்தார். இதை மற்றவர்களுக்கு புரிய வைப்பதிலும் ஆர்வம் காட்டினார். எனவே, புரோகிராமிங் பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டதோடு, கருத்தரங்கம், மாநாடு போன்றவற்றில் கம்ப்யூட்டர் பற்றி உரையாற்றினார். வர்த்தக நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு பற்றி ஆலோசனை கூறினார்.
எதிர்கால உரை
இந்த காலகட்டத்தில் தான் 1952ல் நிகழ்த்திய உரை ஒன்றில், தனிப்பட்ட திரைகள் கொண்ட கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்படும், வீடியோ தொடர்பு மற்றும் எளிதான இடைமுக பயன்பாடு போன்றவை அறிமுகமாகும் என்றெல்லாம் விவரித்தார். இவை எல்லாமே பின்னர் கம்ப்யூட்டர் உலகில் அறிமுகமாயின.
மனித கம்ப்யூட்டரின் எதிர்காலம் பற்றிய கனவு எனும் தலைப்பிலான இந்த உரையில், வருங்காலத்தில் கம்ப்யூட்டரின் வேகமும், செயல்திறனும் அதிகமாகும் என கணித்திருந்தார். கம்ப்யூட்டரை அணுகுவதும் எளிதாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். வீடு இல்லம்- கம்ப்யுட்டர் பயன்பாடு பற்றி எல்லாம் குறிப்பிட்டிருந்தார். டைப் செய்யப்படும் ஆணைகளை கம்ப்யூட்டர் தானாக புரிந்து கொண்டு செயல்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
1980-களில் கம்ப்யூட்டர் பரவலாக பொது பயன்பாட்டிற்கு வரத்துவங்கிய போது கூட, வேலையிழப்புக்கு வழி வகுக்கும் எனும் அச்சத்தால் பலரும் கம்ப்யூட்டரை எதிர்த்த நிலையில், 1950-களிலேயே கம்ப்யூட்டர் பயன்பாட்டின் திசை மற்றும் முக்கியத்துவதை இடா எடுத்துரைத்து வழிகாட்டினார். கம்ப்யூட்டர் மனித குலத்திற்கான நன்மைக்காக பயன்படும் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தது.
1964ல் ஓய்வு பெற்றாலும், தனது இறுதி காலம் வரை கம்ப்யூட்டர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஈடுபட்டிருந்தார். இதனிடைய, இயந்திர மொழிபெயர்ப்பு தொடர்பான ஆய்விலும் பங்களிப்பு செலுத்தினார். யூதர்களுக்கான விடுமுறை நாட்காட்டி அல்கோரிதமையும், உருவாக்கிk கொடுத்தார்.
யூனிவேக் கம்ப்யூட்டர் பற்றியும், அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய மற்றொரு முன்னொடியுமான கிராஸ் ஹாப்பர் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்...