கம்ப்யூட்டர் பெண்கள் 10 - விஞ்ஞானிகளுக்கு புரோகிராமிங் கற்றுத் தந்த பிரான்சிஸ் ஆலன்!
சாதனை புரோகிராமராக பிரான்சிஸ் ஆலன் கணிணி இயலுக்கான நோபல் பரிசு என கருதப்படும் டூரிங் விருதை பெற்ற முதல் பெண்மணியாகவும் ஆலன் விளங்குகிறார்.
கம்ப்யூட்டர் வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது எனியாக், யூனிவேக் கம்ப்யூட்டர்களை பற்றி பேசுவது போலவே, ஐபிஎம் நிறுவனம் பற்றியும் பேசுவது தவிர்க்க இயலாதது.
கம்ப்யூட்டர் துறை வளர்ச்சியில் ஐபிஎம் நிறுவனத்தின் பங்களிப்பு கணிசமானது என்றாலும், இந்த பங்களிப்புகள் பெரும்பாலும் குழு சாதனையாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றவே தவிர, இவற்றில் முக்கியப் பங்காற்றிய தனிமனிதர்கள் அதிகம் முன்னிறுத்தப்பட்டதில்லை.
இந்த போக்கிற்கு மாறாக ஐபிஎம் கொண்டாடும் சாதனை புரோகிராமராக பிரான்சிஸ் ஆலன் (FRANCES ALLEN) விளங்குகிறார். அது மட்டும் அல்ல, கணிணி இயலுக்கான நோபல் பரிசு என கருதப்படும் டூரிங் விருதை பெற்ற முதல் பெண்மணியாகவும் ஆலன் விளங்குகிறார்.
கம்ப்யூட்டர் துறையில் ஆலனின் சாதனைகள் வியக்க வைப்பவை மட்டும் அல்ல, அவரது பங்களிப்பின் தாக்கமும் வியக்க வைப்பவை. இன்றளவும் புரோகிரமர்கள் கோட் எழுதவும், நிரலாக்கத்திலும் பயன்படுத்தும் உத்திகளுக்கான அடிப்படையான அம்சங்களை ஆலன் தான் உருவாக்கிக் கொடுத்தார்.
மென்பொருள் குரு
மென்பொருளை கம்ப்யூட்டர் வன்பொருள் புரிந்து கொள்ள வழி செய்வதவர் என பிரான்சிஸ் ஆலனை நியூயார்க் டைம்ஸ் நினைவாஞ்சலி கட்டுரை பாராட்டுகிறது. கம்பைலர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் அல்கோரிதம் நிறைவாக்கத்தின் முன்னோடி என ஐபிஎம் அவரை பாராட்டியுள்ளது. எல்லாவற்றையும் விட முக்கியமாக மென்பொருள்கள் உருவாக்கப்படும் அடிப்படை அம்சங்களை புரிந்து கொண்டவர்கள் ஆலனை தங்களது மானசீக குருவாக ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், கம்ப்யூட்டரோடு மென்பொருள் மூலம் பேசுவதை சாத்தியமாக்கியதில் அவரது பங்களிப்பு முக்கியமாக அமைகிறது.
கம்ப்யூட்டர் ஆய்வாளர், விஞ்ஞானி என்று அறியப்படும் ஆலன், கம்ப்யூட்டர் ஆய்வை விரும்பி மேற்கொள்ளாமல் தற்செயலாக இந்தத் துறையின் பக்கம் வந்தவர். முன்னோடி புரோகிராமர்களில் ஒருவராக போற்றப்படும் ஆலன், விஞ்ஞானிகளுக்கே புரோகிராமிங் மொழியை கற்றுக்கொடுத்தவராக அறியப்படுகிறார். அந்த புரோகிராமிங் மொழி அவருக்கே அறிமுகம் இல்லாதது என்பதால், விஞ்ஞானிகளுக்கு அதை கற்றுத்தருவதற்காகவே அவர் அதை கற்றுக்கொண்டார் என்பது தான் விஷேசமானது.
கணிதத் திறன்
ஆலன் அடிப்படையில் ஆசிரியர் என்பதும், கணிதத்தில் அதீத திறமை கொண்டவர் என்பதாலும், அப்போது உருவாக்கப்பட்டிருந்த புரோகிராமிங் மொழியான ஃபோர்ட்ரானை (FORTRAN) அதன் முக்கியப் பயனாளிகளான விஞ்ஞானிகளுக்கு கற்றுத்தர ஆலனை ஐபிஎம் நிறுவனம் தேர்வு செய்தது. ஆலனும், எந்தவித திட்டமும் இல்லாமல், கல்விக்கடனை அடைக்க இந்த பொறுப்பு உதவும் எனும் எண்ணத்தோடு, தற்காலிக ஏற்பாடாக இந்தப் பணியை ஏற்றுக்கொண்டார்.
ஆனால், ஆலானே எதிர்பாராத வகையில், ஓய்வு பெறும் வரை ஐபிஎம் நிறுவனத்திலேயே அவர் பணியில் தொடர்ந்தார் என்பது மட்டும் அல்ல, அங்கு கம்ப்யூட்டர்களுக்கான கம்பைலர் உருவாக்கத்திலும், சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார். ஆய்வு நோக்கிலும் கம்ப்யூட்டர் துறையில் ஆலன் முத்திரை பதித்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள பெருவில் 1932ல் பிறந்து வளர்ந்த ஆலன், நியூயார்க் மாநிலக் கல்லூரியில் கணித பட்டம் பெற்றார். இரண்டு ஆண்டுகள் நியூயார்க் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் பணி நிரந்த்திரத்திற்காக தகுதி பெற விரும்பி, 1957ல் மிக்சிகன் பல்கலையில் முதுகலை கணித வகுப்பில் சேர்ந்தார்.
மிச்சிகன் பல்கலையில் படித்துக்கொண்டிருந்த போது தான், ஐபிஎம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்திற்கு வந்து நிறுவனம் நடத்திய தேர்வில் அவர் வெற்றி பெற்றார். அப்போது பல்கலையில் நடத்தப்பட்ட மிகவும் அடிப்படையான கம்ப்யூட்டர் வகுப்புகளில் பங்கேற்ற அனுபவம் இருந்தாலும் ஐபிஎம் நிறுவனத்தில் தேர்வான போது அவருக்கு கம்ப்யூட்டர் துறை தொடர்பாக பெரிய கனவு இருக்கவில்லை.
கல்விக்கடன்
கல்விக் கடனாக பெற்ற தொகையை அடைக்க இரண்டு ஆண்டுகள் ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு பின்னர், மீண்டும் தனக்குப் பிடித்தமான ஆசிரியர் பணிக்கு திரும்ப நினைத்திருந்தார். ஆனால், கம்ப்யூட்டர் துறை அவரை பிடித்து வைத்துக்கொண்டது மட்டும் அல்ல அவருக்கும் இத்துறை பிடித்துப்போனது.
ஐபிஎம் நிறுவனத்தில் ஆய்வுப் பிரிவில் அவருக்கு வேலை கிடைத்தாலும், அவரிடம் முதலில் ஒப்படைக்கப்பட்டது கற்பித்தல் பணி தான். ஐபிஎம் நிறுவனத்தில் ஃபோர்ட்ரான் புரோகிராமிங் மொழி அப்போது தான் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. கம்ப்யூட்டர்களின் வர்த்தகப் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட முதல் புரோகிராமிங் மொழியான கோபால் போலவே அறிவியல் பணிகளுக்கான புரோகிராமிங் மொழியாக ஃபோர்ட்ரான் அமைந்திருந்தது.
ஐபிஎம் உருவாக்கிய மொழியாக ஃபோர்ட்ரான் அமைந்தாலும், அதன் ஆய்வாளர்களே அம்மொழியை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டினர். அவர்கள் எல்லோரும் அப்போது பழக்கத்தில் இருந்த அசெம்ப்ளி லாங்க்வேஜ் மூலமே கம்ப்யூட்டருடன் தொடர்பு கொண்டு பழகியிருந்தனர். ஃபோர்ட்ரான் போன்ற ஒரு உயர் மட்ட மொழியில், கம்ப்யூட்டருடன் தொடர்பு கொள்வது சாத்தியம் என்பதை அவர்கள் ஏற்கவில்லை.
இந்தச் சூழலில் தான் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகளுக்கு ஃபோர்ட்ரான் மொழியில் பயிற்சி அளிக்கும் பணி ஆலனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், ஆலனுக்கும் ஃபோர்ட்ரான் மொழியில் அறிமுகம் கிடையாது என்பதால் அவர் அந்த மொழியை கற்றுக்கொண்டபடியே அதை ஆய்வாளர்களுக்கு கற்றுக்கொடுப்பதில் ஈடுபட்டார். மற்றவர்கள் இதை பெரும் சவாலாக உணர்ந்திருக்க கூடும் என்றாலும், ஆலன் இந்த அனுபவத்தை சுவாரஸ்யமானதாகக் கருதினார்.
கம்ப்யூட்டர் மொழி
ஆனால் ஒன்று, முரண்டு பிடிக்கும் மாணவர்களைப்போல, ஃபோர்ட்ரான் மொழி தங்களுக்கு தேவையற்றது என நினைத்து அதிருப்தி கொண்ட ஆய்வாளர்கள் அவரது வகுப்பில் நிறைந்திருந்தனர். ஃபோர்ர்டரான் மொழியின் அருமையை ஆலனால் புரிந்து கொள்ள முடிந்ததால், ஆய்வாளர்களும் அதை ஏற்கச்செய்ய அவரால் முடிந்தது. ஆரம்ப தடைகள் விலகிய பிறகு ஃபோர்ட்ரான் மொழியில் அருமையான நிரல்களை உருவாக்க முடிந்தது கண்டு ஆய்வாளர்கள் வியந்து போனது தனிக்கதை.
இதன் பிறகு, அவர் ஐபிஎம் கம்ப்யூட்டருக்கான மானிட்டர்டு ஆட்டமேட்டிக் டிபக்கிங் சிஸ்டம் திட்டத்தில் பணியாற்றினார். கம்ப்யூட்டருக்கான கட்டளைகளை வரிசையாக உருவாக்கி, அவற்றுக்கான பிழைகளை தானாக சரி செய்தபடி தொடர்ந்து செயல்படும் வகையில் இது அமைந்திருந்தது. இதற்கான பணியில் ஈடுபட்டிருந்த போது ஆலன் கம்ப்யூட்டர்களுடன் ஒன்றிப்போனார். இது பிணைப்பு அவரது இறுதிக்காலம் வரை நீடித்தது.
இந்த காலகட்டத்தை கம்ப்யூட்டர் துறையில் பெண்களுக்கான பொற்காலம் என ஆலன் பேட்டி ஒன்றில் வர்ணித்திருக்கிறார். ஐபிம் நிறுவனத்தில் பெண் ஆய்வாளர்கள் பலர் பணியாற்றியதோடு, கம்ப்யூட்டர் தொடர்பான எந்த கருத்தரங்கு மாநாடுகளுக்கு சென்றாலும் பெண்களை பார்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். கம்ப்யூட்டர் கட்டுமானம் மற்றும் மென்பொருளுக்கான பல்வேறு அடிப்படை அம்சங்கள் உருவாக்கப்பட்டு வந்ததால் பொதுவாகவே கம்ப்யூட்டர் துறைக்கான பொற்காலம் என்றும் 1950 களை வர்ணித்துள்ளார்.
சூப்பர் கம்ப்யூட்டர்
இந்த காலகட்டத்தில் ஆரம்ப கால சூப்பர் கம்ப்யூட்டரில் பணியாற்றும் வாய்ப்பும் ஆலனுக்கு கிடைத்தது. ஸ்டிரெச் என பெயரிடப்பட்ட அந்த சூப்பர் கம்ப்யூட்டர் அப்போது இருந்த எந்த கம்ப்யூட்டரையும் விட 100 மடங்கு வேகமானதாக செயல்பட வேண்டும் எனும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
முழுவதும் முடிக்கப்பட்ட போது, இந்த கம்ப்யூட்டர் எதிர்பார்த்த வேகத்தை அளிக்கவில்லை என்றாலும், ஐபிஎம் நிறுவனம் இதன் தொடர்ச்சியாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பிற்காக ஹார்வெஸ்ட் எனும் கம்ப்யூட்டரை உருவாக்கிக் கொடுத்தது.
ஹார்வெஸ்ட் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்காக ஆல்பா எனும் புரோகிராமிங் மொழி உருவாக்கப்பட்டது. இந்தப் பணியின் போது கம்ப்யூட்டர்களுக்கான கம்பைலர்களை கையாளும் வாய்ப்பு அவருக்கு முதல் முறையாக கிடைத்தது.
கம்ப்யூட்டர்களுக்கு பூஜ்ஜியம்கள் மற்றும் ஒன்று தவிர வேறு எதுவுமே புரியாது என்பதால் அவற்றுக்கு புரியக்கூடிய குறியீட்டு மொழியில் நிரல்களை மாற்றிக்கொள்ள கம்பைலர்கள் உதவுகின்றன. சாதாரண மொழியில் எழுதுவது போல கட்டளைகளை எழுதினாலும் கம்பைலர்கள் அவற்றை கம்ப்யூட்டர் வன்பொருளுக்கு புரியும் குறியீடாக மாற்றிவிடும்.
கம்பைலர் முன்னோடி
கம்பைலர்கள் காரணமாகவே ஆர்வம் உள்ள எவரும் புரோகிராம்களை எழுத முடிகிறது. இதற்கான அடித்தளத்தை கிரேஸ் ஹாப்பர் உருவாக்கிக் கொடுத்தார் என்றால், பிரான்சிஸ் ஆலன் கம்பைலர்களின் அடுத்த கட்ட மேம்பாடுகளுக்கு வழி வகுத்தார். கம்பைலர்களை சிறப்பாக பயன்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்களை கொண்டு வந்தவர், பல்வேறு கம்ப்யூட்டர்களில் நிரலாக்கம் செயல்பட வழி செய்யும் இணை நிரல் தன்மையிலும் கவனம் செலுத்தினார்.
கம்ப்யூட்டர்களுக்கான மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய Parallel Translator எனும் திட்டத்தில் அவர் முக்கியப் பங்காற்றினார். புரோகிராம்கள் வேகமாக செயல்படவும் இது வழிவகுத்தது.
கம்ப்யூட்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை மனிதர்கள் சொல்வதை மேலும் மேலும் எளிமையாக்குவதற்கான அடித்தளமாக ஆலனின் பங்களிப்பு அமைந்ததாக பாராட்டப்படுகிறது. 1960-களிலும் 70-களிலும், கம்பைலர்கள் தொழில்நுட்பம், செயல்பாடு தொடர்பாக பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஜான் கோக்கே (John Cocke) எனும் ஆய்வாளருடன் இணைந்து எழுதி வெளியிட்டார். நிரல் உருவாக்கத்தின் எளிமை மற்றும் அவற்றின் செயல்பாட்டிற்கான வேகம் இரண்டுக்கும் இடையிலான சிக்கலான சமநிலையை அடைய அவரது ஆய்வுக்கட்டுரைகள் வழிகாட்டின.
பெண்களுக்கு வழிகாட்டி
இன்று கம்ப்யூட்டர்களுக்கும், ஸ்மார்ட்போன்களுக்கும் எளிதாக சேவைகளை உருவாக்க முடிகிறது என்றால் இதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர்களில் ஒருவராக ஆலன் கருதப்படுகிறார். இத்தகைய சாதனைகளுக்காக 2006ம் ஆண்டு அவருக்கு டூரிங் விருது வழங்கப்பட்டது.
அதற்கு முன்னர் ஐபிஎம் நிறுவனத்தில் ஆய்வாளர்களுக்கான பள்ளி எனப்படும் ஐபிஎம் அகடாமியின் தலைவராக 1995 ல் நியமிக்கப்பட்டார். ஐபிஎம் அகாடமியில் இருந்த போதும் சரி, நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சரி, ஆலன், கம்ப்யூட்டர் துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு வழி காட்டுவதிலும், தொழில்நுட்பத்துறையில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். 2020 ல் இயற்கை எய்தும் வரை ஆலன், பெண்கள் கம்ப்யூட்டர் சார்ந்த துறைகளில் அதிகம் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவித்துக் கொண்டிருந்தார்.