கம்ப்யூட்டர் பெண்கள் 9 - நிலவுக்கு மனிதர்களை அனுப்ப உதவிய கேத்தரின் ஜான்சன்!
கேத்தரீன் ஜான்சன் விண்வெளி பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும், விண்வெளி பயணம் சாத்தியமானதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.
எப்படிப் பார்த்தாலும், கேத்தரின் ஜான்சன் (Katherine Johnson) வாழ்க்கை வியக்க வைப்பதாக இருக்கிறது. அவர் நூறு ஆண்டுகளுக்கு மேல் நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு நிலவிய காலத்தில், பள்ளிப் படிப்பை முடிப்பதற்கான வாய்ப்பை விட 35 வயதுக்குள் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் இருந்த பின்னணியில் பிறந்து வளர்ந்தார் எனும் போது அவரது நிறை வாழ்க்கையே ஒரு சாதனையாக அமைகிறது.
கருப்பினப் பெண் எனும் முறையில், தனது பாலினம் மற்றும் நிறம் சார்ந்த பாகுபாடுகளை எதிர்கொண்டு வளர்ந்தவர், பணிச் சூழலில் திறமையால் தனக்கான வரம்புகளை வென்று முன்னேறியிருக்கிறார். கணிதத்தில் அதீத ஆர்வமும், அதற்கு நிகரான திறமையும் கொண்டிருந்தவர், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் ஆரம்ப காலத்தில் பணியாற்றிய மனித கம்ப்யூட்டர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
எல்லாவற்றையும் விட, நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைத்த திட்டத்தில் அவரது பங்களிப்பு முக்கியமாக அமைந்திருக்கிறது. ஆம், விண்வெளி வீரர்கள் பயணத்திற்கான அடிப்படை பாதையை கேத்தரின் ஜான்சன் தான் வகுத்து கொடுத்தார்.
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் போது, எந்த இடத்தில் விண்கலம் இறங்க வேண்டும் எனச் சொல்லுங்கள், அந்த இடத்திற்கு செல்வதற்கான பாதையை கணக்கிட்டு சொல்கிறேன் எனக் கூறும் அளவுக்கு அவரது ஆற்றல் அமைந்திருந்தது.
இப்போது உள்ளது போல ஆற்றல் மிக்க கம்ப்யூட்டர்கள் இன்னும் உருவாகாத காலத்தில், நிலவுக்கான மனித பயணத்திற்கான பாதையை துல்லியமாக கணித்துக்கொடுத்த அவரது சாதனை வாழ்க்கையை திரும்பி பார்க்கலாம்.
கணித ஆர்வம்
கேத்தரின் ஜான்சன், அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் 1918ல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல, கேத்தரினுக்கு சிறு வயதில் இருந்தே கணிதத்தில் ஆர்வம் இருந்தது, அவர் எல்லாவற்றையும் ’எண்ணிக்கொண்டிருந்தார்’.
சாலையில் நடத்து சென்றால் எடுத்து வைக்கும் அடிகளை எண்ணினார். தேவாலயத்திற்கு செல்வதற்கான வழியிலும் அடிகளை எண்ணினார். வீட்டு வேலை செய்த போது பாத்திரங்களையும், துணிகளையும் எண்ணினார்.
எண்களின் மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடும், புரிதலும் இருந்தது. பத்து வயதில் அவர் உயர் வகுப்பில் சேர்ந்து படிக்கத்துவங்கினார். ஆனால், சோதனையாக கருப்பினத்தவர் பொது பள்ளிகளில் எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க அனுமதிக்கப்படாத சூழலில் வளர்ந்ததால், அவரது பெற்றோர்கள் மூன்று மணி நேர பயண தொலைவில் இருந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.
பதினைந்து வயதில் கல்லூரியில் சேர்ந்தவர், கணிதம் தொடர்பாக கற்றுத்தரப்பட்ட எல்லா வகுப்புகளிலும் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். கல்லூரியில் ஆஞ்சி டர்னர் (Angie Turner King) எனும் பேராசிரியரின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது. மேலும், கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற மூன்றாவது கருப்பினத்தவரான வில்லியம் கிளேட்டன், கேத்தரினுக்கு என்று தனியே கணித வகுப்புகளை நடத்தி ஊக்குவித்தார்.
திருமண வாழ்க்கை
18 வயதில் கணிதத்தில் பட்டம் பெற்ற பிறகு, அவர் உயர் கல்விக்கான வேறு பாதை இல்லாமல் பள்ளி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இருப்பினும் ஆதீக கணிதத்திறன் அவருக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத்தந்தது. மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த கருப்பின் பெண்களுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயில அவர் தேர்வு செய்யப்பட்டு முதுகலை பட்டம் பெற்றார்.
இதனிடையே, அவருக்கு திருமணமும் ஆகியிருந்தது. குளோப் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த பத்தாண்டுகள் திருமணம், தாய்மை, ஆசிரியர் பணி என மூழ்கியிருந்தார்.
இந்த காலகட்டத்தில் எனியாக், யூன்வேக் போன்ற முன்னோடி கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டு வந்த நிலையில், 1952ல் கேத்தரினுக்கும் கம்ப்யூட்டர்களுடன் இணைந்து பணியாற்றும் முதல் வாய்ப்பு கிடைத்தது. பின்னாளில் அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கழகம் நாசாவாக உருமாற இருந்த விமானவியலுக்கான தேசிய ஆலோசனைக் குழு அமைப்பு கணிதத்தில் தேர்ச்சி பெற்ற பெண்களை வேலைக்கு சேர்த்துக்கொள்வதாக அழைப்பு விடுத்திருந்தது. லாங்க்லேவில் இருந்த இந்த அமைப்பின் ஆய்வு பிரிவில் அவர் பணிக்கு சேர்ந்தார்.
மனித கம்ப்யூட்டர்கள்
இந்தப் பிரிவில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த மனித கம்ப்யூட்டர்களில் ஒருவராக கேத்தரின் செயல்படத்துவங்கினார். இந்த மையத்தில் இருந்த பொறியாளர்களுக்கு தேவையான கணக்குகளை போட்டுத்தருவது கேத்தரீன் போன்ற மனித கம்ப்யூட்டர்களின் பணியாக இருந்தது. பாவாடை கட்டிய கம்ப்யூட்டர்கள் என பின்னாளில் இது பற்றி கேத்தரீன் குறிப்பிட்டிருக்கிறார்.
கருப்பினப் பெண்கள் பணிக்கு அமர்த்திக்கொள்ளப்பட்டாலும், பலவிதங்களில் பாகுபாடு நிலவியது. அலுவலகத்தில் அவர்களுக்கான இருக்கைகள் கருப்பு கம்ப்யூட்டர்கள் என அடையாளம் காட்டப்பட்டிருந்தன. கருப்பினத்தவருக்கு என தனி கழிவறைகளும் இருந்தன. பணிக்கு சேர்ந்த இரண்டு வாரங்களில் விமான ஆய்வு பிரிவில் அவர் கடன் வாங்கப்பட்டார்.
மனித கம்ப்யூட்டராக அங்கு சென்றவர் விமானங்கள் மீதான பல்வேறு விசைகளை கணக்கிட்டு கொடுத்தார். இத்தகைய ஆற்றல் தான் அந்த பிரிவுக்குத் தேவைப்பட்டது.
அங்கிருந்த பொறியாளர்கள் எல்லாம் கணிதத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், வடிவியலை மறந்திருந்தனர். வடிவியலை நான் மறக்காமல் இருந்ததால் விமான விசை கணக்குகளை எளிதாக போட முடிந்தது என கேத்தரின் குறிப்பிட்டுள்ளார். கேத்தரீனின் கணக்கு திறன் காரணமாக அவர் இந்த பிரிவிலேயே தக்க வைத்துக்கொள்ளப்பட்டார்.
1957ல் சோவியத் யூனியன் சார்பில் ’ஸ்பூட்னிக்’ செயற்கை விண்ணில் செலுத்தப்பட்டிருந்த நிலையில், அமெரிக்கா அதற்கு ஈடு கொடுக்க விண்வெளி ஆய்வை தீவிரமாக்கியது. விண்வெளிக்கு மனிதரை அனுப்பி வைப்பதற்கான திட்டமும் துவக்கப்பட்டது. இதற்குத் தேவையான விண்வெளி பாதையை கணக்கிடும் பொறுப்பு கேத்தரீன் பிரிவிடம் அளிக்கப்பட்டது. விண்வெளிக்கு ஒருவரை அனுப்பி வைப்பது என்றால், அங்கிருக்கும் சூழலை அறியவும், எந்த இடத்தில் ஏவுவாகனம் இறங்க வேண்டும் என்றெல்லாம் கணக்கிடப்பட வேண்டியிருந்தது.
விண்வெளி ஆய்வு
இதற்கான பணி ரகசியமாக மேற்கொள்ளப்பட்டது. கேத்தரீன் இதில் முழுவீச்சில் ஈடுபட்டார். தினந்தோறும் 16 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலையிலும் அவர் உற்சாகமாகவே செயல்பட்டார். இதனிடையே, புற்றுநோய் காரணமாக கணவர் மரணம் அடைந்த சோகத்தை எதிர்கொள்ளவும் இது உதவியது. பின்னர், ராணுவ அதிகாரி ஜேம்ஸ் ஜான்சனை அவர் மறுமணம் செய்து கொண்டார்.
கேத்தரீன் ஜான்சன் தனக்கு அளிக்கப்பட்ட கணித பணிகளை முடித்து தருவதோடு நின்று விடவில்லை. விமான நுட்பங்களை அறிவதிலும் ஆர்வம் காட்டினார். ஆண் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அவர் தானாக பங்கேற்கத் துவங்கினார்.
பின்னர், இதுவே வழக்கமானது. அங்கிருந்த பெண்கள் கேள்வி கேட்காமல் சொன்ன வேலையை செய்தனர். நான் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டேன் என்று கேத்தரீன் இந்த அனுபவம் பற்றி கூறியிருக்கிறார். 1958ல் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பாக பொறியாளர்கள் நிகழ்த்திய உரைகள் அடிப்படையிலான ஆய்வறிக்கையில் முக்கியக் கணித பகுதிகளை அவர் அளித்திருந்தார்.
1948ல் பொது பயன்பாட்டிற்கான யூனிவேக் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டு டிஜிட்டல் கம்ப்யூட்டர்கள் பரவலாகத் துவங்கிய நிலையில் 1958ல் நாசா அமைப்பில் மனித கம்ப்யூட்டர்கள் பிரிவு கலைக்கப்பட்டது. எனினும், கேத்தரீன் ஜான்சன் தக்க வைத்துக் கொள்ளப்பட்டார்.
1962ல் ஜான் கிளன் (John Glenn) என்பவர் தலைமையில் விண்வெளி ஆய்வாளர்கள் குழுவை அனுப்பி வைக்கும் திட்டத்தில் நாசா தீவிரம் காட்டியது. இந்த பணிக்காக உலகலாவிய தகவல் தொடர்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. பெர்முடா, புளோரிடா, வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் இருந்த ஐபிஎம் கம்ப்யூட்டர்கள் இதற்காக இணைக்கப்பட்டன.
கேத்தரீன் கணக்கு
விண்வெளி ஆய்வு திட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே கேத்தரீன் முக்கியப் பங்கு வகித்து வந்தார். 1961ல், அமெரிக்கா ஆலன் ஷெப்பர்டு எனும் விண்வெளி வீரரை முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்பி வைத்த போது, இந்த பயணத்திற்கான பாதை தொடர்பான கணக்குகளை கேத்தரீன் தான் போட்டுக்கொடுத்தார். 1962 திட்டத்திற்கு கம்ப்யூட்டர்களிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால், விண்வெளி வீரர்கள் கம்ப்யூட்டர் இயந்திர கணக்கை ஏற்றுக்கொள்ளத்தயங்கினர்.
விண்வெளி பயணத்திற்கான இறுதி சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, விண்வெளி வீரர் ஜான் கிளன் அந்த பெண்மணியை அழையுங்கள், அவர் கணக்கு போட்டுக்காட்டினால் தான் நம்புவேன் எனக் கூறிவிட்டார்.
அதன் பிறகு, கேத்தரீன் வந்து விண்வெளி பயணத்திற்கான பாதையை கணகிட்டு கொடுத்த போது, கம்ப்யூட்டர் கணக்குடன் அதுவும் ஒத்துப்போனதை பார்த்த பிறகே கிளன் சந்தேகம் நீங்கி பயணத்திற்கு தயாரானார்.
”அவர் ( கேத்தரீன்) சரியாக இருப்பதாகச் சொன்னால் போதும்,” என கிளன் நம்பிக்கையோடு கூறியதே அவரது கணித திறமைக்கான சான்று.
டிஜிட்டல் யுகம்
கேத்தரின் தொடர்ந்து டிஜிட்டல் கம்ப்யூட்டர்களுடன் பணியாற்றத்துவங்கிய போது, அதன் நுட்பங்களை கற்றுக்கொண்டார். இதன் காரணமாக நாசா விஞ்ஞானிகளும் டிஜிட்டல் கம்ப்யூட்டர் மீதான தயக்கத்தை கைவிட்டனர். அடுத்ததாக 1969ல், அப்போலோ 11 விண்கலம் மூலம் மனிதரை நிலவுக்கு அமெரிக்கா அனுப்பி திட்டத்திலும் கேத்தரீன் முக்கியப் பங்கு வகித்தார்.
இந்த பயணத்திற்கான கணக்குகளை போட்டுக்கொடுத்ததோடு, தோல்வியில் முடிந்த அப்பல்லோ 11 விண்கலத்தில், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கான மாற்று கணக்குகளையும் அவர் தான் போட்டு கொடுத்தார்.
கேத்தரீன் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும், விண்வெளி பயணம் சாத்தியமானதில் அவரது பங்களிப்பு முக்கியமானது. 33 ஆண்டுகள் நாசாவில் பணியாற்றிய பிறகு 1986ல் கேத்தரீன் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வில் அவரது சாதனை பங்களிப்பை மீறி, பல ஆண்டுகள் அவர் அறியப்படாதவராகவே இருந்தார்.
எனினும், மார்கரெட் ஷெட்டர்லி (Margot Lee Shetterly) ’ஹிடன் பிகர்ஸ்’ எனும் பெயரிலான புத்தகத்தின் மூலம் அவரது சாதனைகளை வெளி உலகிற்கு கொண்டு வந்தார். இதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவருக்கு அமெரிக்க அதிபரின் பதக்கமும் வழங்கப்பட்டது.
இந்த புத்தகத்திற்கான ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, விண்வெளி ஆய்வில் அவரது பங்களிப்பு பற்றி கேத்தரின் ஜான்சனிடம் கேட்ட போதெல்லாம், நான் என் வேலையை தான் செய்தேன் என்று அவர் அமைதியாகக் கூறியதாக ஷட்டர்லி கூறியிருக்கிறார்.
தனது சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்ளவில்லை என்றாலும் கேத்தரின் ஜான்சன், பெண்கள் அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் துறைகளில் அதிகம் ஈடுபாட்டு காட்ட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தார். இதற்கான பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார்.
இந்த வரிசையில், நிலவில் மனிதர்களை கால் பதிக்க வைத்த அப்பல்லோ விண்கல கம்ப்யூட்டருக்கான மென்பொருளை உருவாக்கிய சாதனை பெண்மணி மார்கரெட் ஹாமில்டன் பற்றி அடுத்து பார்க்கலாம்.