கம்ப்யூட்டர் பெண்கள் 22 - இணைய தொலைபேசிக்கு அடித்தளம் அமைத்த மரியன் குரோக்!
இணையம் வளர்ந்து வந்த காலத்தில் அதன் எதிர்கால முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த மரியன் குரோக், டிசிபி முறையை அடிப்படையாக கொண்டு இணைய தொலைபேசி சேவைக்கு வழி காட்டினார்.
கம்ப்யூட்டர் விஞ்ஞானி, 200க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்றவர், கருப்பின பெண் தொழில்நுட்ப சாதனையாளர் என்றெல்லாம் போற்றப்படும் மரியன் குரோக்கின் (Marian Croak) சாதனைகள் அனைத்தும், அவரது ஐந்து வயது கனவில் இருந்து துவங்குகிறது. குழாய் பழுது பார்ப்பவராக வேண்டும் என்பது தான் அந்த கனவு.
ஐந்து வயது சிறுமியாக இருந்த போது குழாய் பழுது பார்ப்பதில் மரியனுக்கு ஆர்வம் ஏற்பட காரணம் இல்லாமல் இல்லை. அந்த சிறுமியின் கண்களில் குழாய் பழுது பார்ப்பவர் பிரச்சனைக்கு தீர்வு அளிப்பவராக தெரிந்தார். காரணம், வீட்டுல் குழாய் பழுதான போது மரியனின் அம்மா உடனடியாக அவரது அப்பாவுக்கு போன் செய்து, வீட்டிற்கு வந்து பழுதை சரி செய்யுமாறு கேட்டிருக்கிறார். அதன்படி அப்பாவும், அலுவலகத்தில் இருந்து வந்து குழாய் பிரச்சனையை சரி செய்தார்.
இதைப்பார்த்த சிறுமி மரியனுக்கு, வளர்ந்து பெரியவள் ஆனதும், வீட்டில் பழுதென்றால் அம்மா தன்னைத்தான் அழைக்க வேண்டும் என்று தோன்றியது. அவர் பிரச்சனைகளை தீர்த்து வைப்பவராக இருக்க விரும்பினார். அதோடு, குழாய் பழுது பார்ப்பவர், மின் ஊழியர், பொறியாளர் என எல்லோரும் ஆண்களாக இருப்பதை பார்த்தவருக்கு, இத்தகைய வேலை தனக்கும் வேண்டும் என நினைத்தார்.
பொறியாளர் மனது
ஆண்கள் போல வெளியுலகிற்கு சென்று பணியாற்றும் வாய்ப்பை விரும்பி, அவர் பழுது பார்ப்பவராக விரும்பியதே பின்னாளில், கம்ப்யூட்டர் பொறியாளராக சாதிப்பதற்கான அடித்தளமாக அமைந்தது.
அடிப்படையில் அவரிடம் ஒரு பொறியாளர் மனது இருந்தது. அந்த மனதே, மின் ஊழியரும், குழாய் பழுது பார்ப்பவரும், சாதனங்களை பிரித்துப்பார்த்து, அவற்றின் குறைகளை போக்கும் பணி மீது ஆர்வம் கொள்ள வைத்தது.
"சாதனங்கள் எப்படி வேலை செய்கின்றன என அறிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது," என அவரே ஒரு முறை கூறியிருக்கிறார்.
இந்த ஆர்வம் அவரது பள்ளி நாட்களிலும் வெளிப்பட்டது. பள்ளியில் படித்த போது கணிதத்திலும், அறிவியல் பாடத்திலும் அதீத ஆர்வம் கொண்டிருந்தார். இந்த ஆர்வத்தை ஆசிரியர்களும் ஊக்குவித்து வளர்த்தனர். வீட்டில் அப்பாவும் மரியனின் அறிவியல் ஆர்வத்திற்கு ஆதரவாக இருந்தார். மகளுக்கு ரசாயனத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்தவர், அதில் சோதனை செய்வதற்கான வசதியை செய்து கொடுத்தார்.
கல்லூரி நாட்கள்
பிரின்ஸ்டன் பல்கலையில் படிப்பை முடித்தவர் அதன் பிறகு, கலிபோர்னியா சென்று, புள்ளியியல் ஆய்வு மற்றும் சமூக உளவியல் ஆகிய பாடங்களை இணைந்து படித்தார். மாறுபட்ட இரு பாடங்களில் கவனம் செலுத்தியது, மனிதகுலம் மீது நல்லவிதமாக தாக்கம் செலுத்த ஏற்ற வகையில் தொழில்நுட்பத்தை கையாள்வதில் ஆர்வத்தை உண்டாக்கியது. இங்கிருந்து தான் அவர் முனைவர் பட்டமும் பெற்றார்.
1982ம் ஆண்டு, மரியனுக்கு (ஏடிஅண்ட்டி) பெல் ஆய்வகத்தில் வேலை கிடைத்தது. வேலைவாய்ப்பு கண்காட்சி ஒன்றில் மரியனின் திறமையை பார்த்து ஈர்க்கப்பட்ட நிறுவன அதிகாரி, அவரை தேர்வு செய்திருந்தார்.
இணைய வரலாற்றில் 1982ம் ஆண்டு முக்கியமான ஆண்டு. இணையம் எனும் வலைப்பின்னல் வளர்ந்து வந்த நிலையில், அதன் தொழில்நுட்ப நெறிமுறையாக பின்பற்றப்படும் டிசிபி / ஐபி (TCP/IP ) நுட்பம் இந்த ஆண்டு தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இணையம் என்பது கம்ப்யூட்டர்களின் வலைப்பின்னல் மட்டும் அல்ல, பல்வேறு வலைப்பின்னல்கள் இணைந்த வலைப்பின்னல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு வலைப்பின்னலுக்குள் உள்ள கம்ப்யூட்டர்கள் தொடர்பு கொள்ள ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டு, வேறு ஒரு வலைப்பின்னலில் உள்ள கம்ப்யூட்டர்கள் தொடர்பு கொள்ள வேறு ஒரு நெறிமுறை பின்பற்றப்பட்டால், வலைப்பின்னல்கள் இடையே தொடர்பு ஏற்படுவதில் சிக்கல் உண்டாகும்.
இதற்குத் தீர்வாக தான், வலைப்பின்னல்களுக்கு இடையிலான பொதுவான தொழில்நுட்ப நெறிமுறையாக டிசிபி / ஐபி முறை அமைந்தது.
இணைய அடிப்படை
இன்று இணைய பயன்பாட்டிற்கான அடிப்படையாக டிசிபி அமைந்திருந்தாலும், அந்த காலத்தில் இதன் முக்கியத்துவத்தை எல்லோரும் உணர்ந்திருந்தனர் என்று சொல்வதற்கில்லை. தொலைநோக்கு பார்வை கொண்டவர்களே, டிசிபி எனும் பொது முறை இணையம் போன்ற வலைப்பின்னலின் வளர்ச்சிக்குத் தேவை என உணர்ந்திருந்தனர்.
டிசிபி அறிமுகமான ஆண்டில் பெல் ஆய்வகத்தில் பணிக்குச்சேர்ந்த மரியன் குரோக், அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருந்தார். அவரது இந்த ஆற்றலோ, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைபேசி சேவைக்கான தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் அமைத்தது.
மரியன் குரோக், தொழில்நுட்ப தொலைநோக்கு பார்வையை மட்டும் அல்ல, ஒரு இளம் பொறியாளராக அவர் துணிச்சல் மிக்கவராகவும் இருந்ததை இந்த இடத்தில் மனதில் கொள்ள வேண்டும். பெல் ஆய்வகத்தில் பணிக்கு சேர்ந்த புதிதில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு துறைகளின் பொறியாளர்கள் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லை எனும் கருத்தை அவர் கூறியிருந்தார். இந்த வெளிப்படையான விமர்சனத்தை சக பொறியாளர்கள் அதிகம் விரும்பவில்லை.
துணிவே துணை
ஆலோசனை கூட்டம் முடிந்ததும், நிர்வாக அதிகாரி குரோக்கை நெருங்கி வந்தார். அவ்வளவு தான் தனது கதை முடிந்தது என அவர் நினைத்துக்கொண்டிருக்க, நல்லவேளை உங்களைப் போன்ற ஒரு பொறியாளர் இங்கு இருக்கிறார் என பாராட்டி விட்டுச்சென்றார். இந்த சம்பவம், மனதில் பட்ட கருத்துக்களை தயங்காமல் வெளியே சொல்லும் நம்பிக்கையை அவருக்கு அளித்தது.
சில ஆண்டுகளில், நிறுவனத்திற்குள் டிசிபி முறை தொடர்பான விவாதம் வந்த போது மரியனின் இந்த துணிச்சலான கருத்து சொல்லும் ஆற்றலே துணைக்கு வந்தது. டிசிபி முறை அறிமுகமான அடுத்த ஆண்டு இணையத்தில் டொமைன் பெயர் முறையும் அறிமுகமானது அடுத்த மைல்கல்லாக அமைந்தது.
இணையம் இன்னமும் பொது பயன்பாட்டிற்கு அறிமுகமாகவில்லை என்றாலும், நிறுவனங்களும், வல்லுனர்களும் இணைய வலைப்பின்னலின் எதிர்கால முக்கியத்துவத்தை உணரத்துவங்கியிருந்தனர். இப்படி தான், தொலைபேசி சேவை நிறுவனமான ஏ.டி. அண்ட் டி.யும் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. தொலைபேசி சேவை படிப்படியாக டிஜிட்டல்மயமாக கொண்டிருந்தது. தொலைபேசி நிறுவனங்கள் இணைய வசதியையும் வழங்கத்துவங்கியிருந்தன.
தொலைபேசி வசதி
இந்த பின்னணியில், இணைய வசதி மற்றும் தொலைபேசி வசதிக்கு என தனித்தனி உள்கட்டமைப்பு இருப்பதற்கு பதிலாக, இரண்டுக்கும் இணையத்தை பயன்படுத்தினால் என்ன என குரோக் நினைத்தார். அப்போது அவர் நிறுவனத்தில் வலைப்பின்னல் தொழில்நுட்ப குழுவிற்கு தலைமை வகித்தார். எனவே, இணையம் சார்ந்த தொலைபேசி சேவைக்கான யோசனையை அவர் முன்வைத்தார்.
அந்த காலகட்டத்தில் குரோக்கின் சிந்தனையை பெரும் பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தொலைபேசி சேவை என்பது அனலாக் முறையிலேயே அமைந்திருந்தது. குரல் அழைப்புகளைக் கொண்டு செல்ல தாமிர கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. துவக்கத்தில் இணைய வலைப்பின்னலில் கம்ப்யூட்டர்களை இணைக்க தொலைபேசி பயன்படுத்தப்பட்டாலும், இணையமும், தொலைபேசி அழைப்பும் வேறு வேறாக இருந்தன.
இதற்கு மாறாக, இணையம் வாயிலாகவே குரல் அழைப்புகளை கொண்டு செல்லும் வகையில் குரோக்கின் யோசனை அமைந்திருந்தது. இதை சாத்தியமாக்கும் தொழில்நுட்ப உத்தியும் தேவைப்பட்டது. அதாவது, அனலாக் அழைப்புகளை டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டியிருந்தது. இணைய வலைப்பின்னலில் தரவுகள் அனைத்தும், சிறு சிறு பாக்கெட்களாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
டிஜிட்டல் பாதை
குரோக்கும் அவரது குழுவினரும், தொலைபேசி குரலோசையை டிஜிட்டல் தரவுகளாக்கி, இணைய பின்னலின் வழியே அனுப்பி வைக்கும் நுட்பத்தை உருவாக்கினர். இதற்கென நிறுவனம் தனியே ஒரு தொழில்நுட்ப நெறிமுறையையும் உருவாக்கியிருந்தது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த டிசிபி முறையில் இருந்து இது மாறுபட்டிருந்தது. இந்த வேறுபாடு ஏற்றதில்லை என குரோக் நினைத்தார்.
புதிதாக பின்பற்றப்பட இருந்த ஏடிஎம் முறைக்கு மாறாக இணையம் ஏற்றுக்கொண்ட டிசிபி முறையை பின்பற்றி குரல் வழி சேவை நுட்பத்தை உருவாக்க வேண்டும் என நிர்வாகத்திடம் குரோக் வலியுறுத்தினார். டிசிபி தான் எதிர்காலம் என வாதிட்டதோடு, ஏ.டி அண்டு டி நிறுவனம் இதை உருவாக்கவில்லை எனில் வேறு போட்டி நிறுவனம் இதை உருவாக்கும் என்றும் அவர் எடுத்துரைத்தார். இதன் பயனாக நிர்வாகம் டிசிபி அடிப்படையிலான நுட்பத்தை அங்கீகரித்தது.
இதுவே, வி.ஓ.ஐ.பி (VoIP) எனக் குறிப்பிடப்படும் இணையம் மூலமான தொலைபேசி சேவைக்கான அடித்தளமாக அமைந்தது. இந்த நுட்பத்தின் அடிப்படையில் இணைய தொலைபேசி சேவை அறிமுகமாக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தாலும், இதற்கான தொழில்நுட்ப மற்றும் கருத்தாக்க அடிப்படையை குரோக் உருவாக்கியிருந்தார்.
டிசிபிக்கு ஆதரவாக வாதிட்ட போது, இணையம் என்பது வெறும் பொம்மை நுட்பம் அது வெற்றி பெறாது என எதிர்வாதம் செய்தவர்களும் அவரது நிறுவனத்தில் இருந்தனர். குரல்வழி தொழில்நுட்பம் போன்ற தன்மை இணையத்திற்கு இல்லை என்றும் வாதம் செய்தனர். ஆனால், குரோக் இணையம் மற்றும் அதன் பின்புலமான டிசிபி முறை மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். இதை நிர்வாகத்திற்கு புரிய வைக்கும் ஆற்றலும் அவரிடம் இருந்தது. இதன் காரணமாகவே அவர் இணைய தொலைபேசி நுட்பத்தை உருவாக்கிய முன்னோடியாக அறியப்படுகிறார்.
ஆனால், பெரும்பாலான பெண் கண்டுபிடிப்பாளர்களுக்கு நிகழ்வது போலவே, இணைய தொலைபேசி முறை நுட்பத்தின் கண்டுபிடிப்பாளாராக அவரது பெயர் பெரும்பாலும் அலட்சியம் செய்யப்படுகிறது. இணைய தொலைபேசி முறை கண்டுபிடிப்பு மற்றும் இதன் வரலாறு தொடர்பான கட்டுரைகளில், இஸ்ரேலைச்சேர்ந்த ஆலன் கோஹன் என்பவரே (Alon Cohen) இதன் கண்டுபிடிப்பாளராக குறிப்பிடப்படுகிறார்.
1995ல் இணைய தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த வோகல்டெக் நிறுவனத்தை உருவாக்கியவர் என்ற முறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது என்றாலும், இதற்கான அடித்தளம் குரோக்கினுடையது என்பதை மறுப்பதற்கில்லை.
இணைய முன்னோடி
குரோக் பற்றி தனியே தேடும் போதே, இணைய தொலைபேசி முறையில் அவரது சாதனைகளை அறிய முடிகிறது. ஆனால், குரோக்கின் சாதனை இத்துடன் நின்றுவிடவில்லை. அவர் 200க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்றிருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை குரல் வழி சேவை சார்ந்தவை.
வலைப்பின்னல் சார்ந்த நுட்பங்களில் கவனம் செலுத்தும் குரோக் பின்னர் கூகுள் நிறுவனத்திலும் முக்கியப் பதவி வகித்தார். கூகுள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட அமைப்புகள் சிக்கல் இல்லாமல் செயல்படுவதில் அவர் முக்கிய பங்காற்றியிருக்கிறார். கூகுளின் கைவிடப்பட்ட இணைய பலூன் திட்டத்திலும் அங்கம் வகித்திருக்கிறார்.
அமெரிக்காவை காத்ரீனா சூறாவளி உலுக்கிய போது, தொலைபேசி மூலம் நன்கொடை வழங்கும் நுட்பத்தையும் அவர் உருவாக்கிக் கொடுத்தார். அதே போல, வரி வடிவ செய்தி மூலம் வாக்களிக்கும் நுட்பத்தையும் உருவாக்கிக் கொடுத்தார்.
இன்று இணையம் வழியே தொலைபேசி சேவையை பயன்படுத்துவதற்கும், குரல் அழைப்புகள் மட்டும் அல்லாமல் வீடியோ, வரி வடிவ செய்திகள் என எல்லாவற்றையும் இணைய தொலைபேசியில் பயன்படுத்துவதற்கும் நிச்சயம் மரியன் குரோக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும்.