கம்ப்யூட்டர் பெண்கள் 25 - பெண்களுக்கான கோடிங் இயக்கத்தை நடத்தும் ரேஷ்மா சோஜனி!
அமெரிக்க இந்தியரான ரேஷ்மா சோஜனி, 21 ம் நூற்றாண்டில் புரோகிராமிங் திறனின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெண்கள் கோடிங் கற்பதை ஊக்குவிக்கும் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
கம்ப்யூட்டர் துறை வளர்ச்சியில் முக்கியப் பங்களிப்பு செய்த முன்னோடிப் பெண்களை விவரிக்கும் இந்த தொடரை ஜானகி அம்மாள் மற்றும் முத்துலட்சுமி ரெட்டியுடன் நிறைவு செய்வது பொருத்தமாக இருக்கும்.
ஜானகி அம்மாள் தாவிரவியலில் பிஎச்டி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணியாக திகழ்கிறார். பெண்கள் பள்ளிக்குச்சென்று படிப்பதே அரிதாக இருந்த காலகட்டத்தில், தடைகளை உடைத்து உயர்கல்வி பயின்றதோடு, அமெரிக்காவில் டாக்டர் பட்டமும் பெற்ற சாதனையாளரான ஜானகி அம்மாள் விளங்குகிறார். தாவரவியல் ஆய்வில் இவரது பங்களிப்பும் முன்னோடி தன்மை கொண்டதாக கருதப்படுகிறது.
தமிழ்நாட்டைச்சேர்ந்த முத்துலட்சுமி ரெட்டி, மருத்துவத் துறையில் முன்னோடி பெண்மணியாக விளங்குபவர் என்பது பரவலாக அறியப்பட்டதே.
இந்தியாவின் முதல் ஆர்கானிக் கெமிஸ்ட்டான அஸிமா சாட்டர்ஜி, முதல் உயிரி விஞ்ஞானி கமலா சோஹனி என விரியும் இந்த சாதனையாளர்கள் பட்டியலில் தான், பிரீத்தி சங்கரும் (Priti Shankar) வருகிறார். ஆய்வாளர், கல்வியாளர், பேராசிரியர் என பல முகங்களை கொண்ட பிரீத்தி சங்கர் இந்தியாவின் முதல் பெண் கம்ப்யூட்டர் விஞ்ஞானியாகவும் விளங்குகிறார்.
கோவாவில் ராணுவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரீத்தி, பூனாவில் பட்டப்படிப்பை முடித்த நிலையில் 1968ல், தில்லி ஐஐடியில் இருந்து மின் பொறியியலில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணியாக விளங்குகிறார்.
முதல் விஞ்ஞானி
பெண்கள் கல்லூரிக்குச் சென்று படிப்பதே சமூகத்தால் ஊக்குவிக்கப்படாத காலத்தில் அவர், பொறியியல் துறையில் பட்டம் பெற்றது எத்தனை பெரிய சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம். அதன் பிறகு, அமெரிக்கா சென்று பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர், பெங்களூருவின் இந்திய அறிவியல் கழகத்தில் தானியங்கி துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
தானியங்கி என்பதே இந்தியாவுக்கு புதிய கருத்தாக்கமாக இருந்த நிலையில், இத்துறைக்கான பேராசிரியராக இருந்து வழிகாட்டினார்.
கம்ப்யூட்டர் புரோகிராமிங் சார்ந்த கம்பைலர்கள், அல்கோர்தமிக் கோடிங் ஆகிய துறைகளில் ஆய்வு செய்துள்ள பிரீத்தி, இத்துறைக்கான வழிகாட்டும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
பிரீத்தியை போலவே, கம்ப்யூட்டர் விஞ்ஞானியான சங்கமித்ரா மொகந்தி (Sanghamitra Mohanty) செயற்கை நுண்ணறிவு, வானிலை கணிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கிறார்.
டாடா குழுமத்தின் டெல்கோ நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளரான சுதா மூர்த்தியும் (இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் துணைவி) இந்த சாதனையாளர்கள் வரிசையில் தான் வருகிறார்.
இந்தப் பட்டியலில், ரேஷ்மா சோஜானியையும் (Reshma Saujani) சேர்ப்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில், ரேஷ்மா அமெரிக்க இந்தியர் என்பது மட்டும் அல்ல, 21ம் நூற்றாண்டில் புரோகிராமிங் திறனின் முக்கியத்துவத்தை உணர்ந்து பெண்கள் கோடிங் கற்பதை ஊக்குவிக்கும் இயக்கத்தை அவர் நடத்தி வருவது தான்.
குஜராத்தில் இருந்து அமெரிக்க சென்று குடியேறிய இந்திய குடும்பத்து வாரிசான ரேஷ்மா, வழக்கறிஞர், அரசியல்வாதி, அதிகாரி என பன்முகம் கொண்டவராக இருப்பதோடு, கேர்ள்ஸ் ஹூ கோடு (Girls Who Code) எனும் தொழில்நுட்ப இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.
அமெரிக்க எம்பி தேர்தலிலும் போட்டியிட்டு கவனத்தை ஈர்த்த ரேஷ்மா, 2011ம் ஆண்டு பிரச்சார பயணத்தின் போது பல பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளுக்கும் உள்ள தொழில்நுட்ப இடைவெளியை கவனித்து, பெண்கள் கோடிங் கற்பதை ஊக்குவிக்கும் வகையில் கேர்ள்ஸ் ஹூ கோடு அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பின் மூலம், பள்ளி அளவிலேயே மாணவிகளுக்கு கோடிங் கற்றுத்தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
கம்ப்யூட்டர் முன்னோடி
கம்ப்யூட்டர் துறையிலேயே எதிர்கால வேலைவாய்ப்பு இருக்கும் சூழலில் பெண்கள் இதில் பின் தங்கிவிடக்கூடாது எனும் உறுதியுடன் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் இந்திய பதிப்பும் துடிப்புடன் இயங்கி வருகிறது.
இந்த அமைப்பு, பெண்களுக்கு புரோகிராமிங், ரோபோடிக்ஸ், இணைய வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களில் பயிற்சி அளிக்கிறது. முக்கியமாக தொழில்நுட்பம் சார்ந்த உருவாக்கத்தில் ஈடுபட வைக்கிறது. அதைவிட முக்கியமாக, பெண்கள் தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட தயக்கம் கொள்ளக்கூடாது எனும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
ஸ்டெம் எனச் சொல்லப்படும் அறிவியல், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெண்கள் ஆர்வம் காட்ட வேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்பட்டும் வரும் நிலையில், கோடிங் திறனில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான இயக்கமாக ரேஷாம்வின் இயக்கம் உதாரணமாக இருக்கிறது. ரேஷ்மா, இதே பெயரிலான புத்தகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
பாலின சமத்துவம்
கம்ப்யூட்டர் உலகின் முதல் புரோகிராமர் அடா லவ்லேஸ் ஒரு பெண்மணி எனும் போது, தொடர்ந்து புரோகிராமிங் மொழிகள் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்கள் பெண்கள் எனும் போது, புரோகிராமிங் மற்றும் கோடிங் திறன் என்பது பெரும்பாலும் ஆண்களின் கோட்டையாக கருதப்படும் நிலையை முரண் நகை என்றே சொல்ல வேண்டும்.
புரோகிராமிங் சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டதற்கான வரலாற்று காரணங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த நிலையை மாற்றி தொழில்நுட்பத் துறையில் பாலின சமத்துவத்தை உண்டாக்கும் முயற்சியில் பல முன்னோடி பெண்கள் ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் உதாரணமாக ரேஷ்மா திகழ்கிறார்.
(கம்ப்யூட்டர் பெண்கள் தொடர் இத்துடன் நிறைவடைகிறது)