கம்ப்யூட்டர் பெண்கள் 24 - டெக் உலகில் பெண்களுக்கான குரலாக இருந்த அனிதா போர்க்!
தொழில்நுட்ப உலகில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலான இயக்கங்களுக்கும், ஆளுமைகளுக்கும் அனிதா போர்க் முன்னோடியாக கருதப்படுகிறார்.
பார்பி பொம்மைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர் எனும் வாசகம் அனிதா போர்க் (Anita Borg) எனும் தொழில்நுட்ப ஆளுமையை அறிமுகம் செய்வதற்கு மிகப்பொருத்தமாக இருக்கும்.
ஏனெனில், பார்பிக்கு எதிராகப் போராடிய காரணம், தொழில்நுட்பத் துறையில் பாலியல் சமத்துவம் தொடர்பாக அவர் கொண்டிருந்த நம்பிக்கையை புரிந்து கொள்ள இது உதவுகிறது. தொழில்நுட்ப உலகில் பெண்களின் உரிமைக்குரலாக அனிதா போர்க் விளங்கியதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அதே நேரத்தில், கம்ப்யூட்டர் வரலாற்றில் முன்னணியில் இருந்த பெண்கள் மெல்ல பின்னுக்குத் தள்ளப்பட்டும் தொழில்நுட்ப உலகம் ஆண்களின் கோட்டையாக மாறியதையும் இதன் மூலம் உணரலாம்.
இன்று, ஸ்டெம் துறைகளில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்க வேண்டும், பெண்கள் கோடிங் கற்க வேண்டும், வன்பொருள் செய்யவும் பெண்கள் முன்வர வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை முன்வைத்து தொழில்நுட்ப உலகில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கிலான இயக்கங்களுக்கும், ஆளுமைகளுக்கும் அனிதா போர்க் முன்னோடியாக கருதப்படுகிறார்.
பெண்களுக்கான குரல்
கம்ப்யூட்டர் விஞ்ஞானியான அனிதா போர்க், 1980-களின் பிற்பகுதியில் தொழில்நுட்ப உலகில் பெண்களுக்கான பிரதிநித்துவத்திற்கு குரல் கொடுக்கும் செயற்பாட்டாளராக உருவெடுத்ததார் என்பதும் கூட, கம்ப்யூட்டர் வரலாறு ஆண்களின் வசமாகத் துவங்கியதை புரிய வைக்கிறது.
கம்ப்யூட்டர் உலகின் முதல் புரோகிராமர் அடா லவ்லேஸ் எனும் பெண் தான் என்பதில் துவங்கி, உலகின் முதல் மின்னணு கம்ப்யூட்டரான எனியாக்கை புரோகிராம் செய்ததும் பெண்கள் தான் என்பதையும் இந்த தொடரில் பார்த்தோம்.
அடா லவ்லேசின் தொடர்ச்சியாக, புரோகிராமிங் மொழிகள் உருவாக்கத்திலும், மென்பொருள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்காற்றிய கிரேஸ் ஹாப்பர், பார்பரா லிஸ்கோவ், மார்கரெட் ஹாமில்டன் என தொடரும் பெண் சாதனையாளர்கள் வரிசையை பார்க்கும் போது, கம்ப்யூட்டர் துறையின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு எத்தனை முக்கியமானது என புரிந்து கொள்ளலாம்.
ராடியா பேர்ல்மன், எலிஸிபெத் பியன்லர் என தொடரும் சாதனையாளர்கள் இணையத்தின் வளர்ச்சியிலும் பெண்கள் தோள் கொடுத்ததை உணர்த்துகிறது. இணையத்தின் அடுத்த கட்டமான வலையின் வளர்ச்சியில் கூட, நிக்கோலா பெல்லோ எனும் பெண் இருப்பதையும் பார்த்தோம்.
பெண்களுக்கு பாதிப்பு
துவக்கக் காலத்தில் மென்பொருள் ஆக்கம் என்பது பெரும்பாலும் பெண்கள் ஈடுபாடு காட்டும் துறையாக இருந்த நிலை மாறி, இடைப்பட்ட காலத்தில் கண்ணுக்குத்தெரியாத மாற்றம் நிகழ்ந்தது போல, புரோகிராம்கள் எழுதுவதும், கோடிங் செய்வதும் ஆண்களுக்கு ஏற்ற பணியாக மாறிப்போனது. இந்த காலத்தில் பில்கேட்ஸ்களும், ஸ்டீவ் ஜாப்ஸ்களும் சாதனையாளர்களாக பேசப்பட்ட அளவுக்கு Eniac பெண்களும், இன்னும் பிற மென்பொருள் பெண்களும் பேசப்படவில்லை.
கம்ப்யூட்டர் துறையில் பெண்கள் மையத்தில் இருந்து விலக்கப்பட்டது மட்டும் அல்லாமல், கோடிங் கற்பதும், மென்பொருள் செய்வதும் பெண்களுக்கு கடினமான என்பது போன்ற பொதுக்கருத்து வலுப்பெறத்துவங்கியது. பெண்களே இதை ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டதோடு, பெண் சாதனையாளர்கள் எல்லாம் விதிவிலக்கு என்பது போல பார்க்கும் நிலை உருவானது.
இந்தப் பின்னணியில் தான், 1987ல் சிஸ்டர்ஸ் (Systers) எனும் பெண்களுக்கான முதல் இணைய சமூகத்தை இ-மெயில் குழுவாக உருவாக்கிய அனிதா போர்கின் வாழ்க்கையை திரும்பிப் பார்ப்பது வரலாற்று தேவையாகிறது.
புரோகிராமிங் ஆர்வம்
Anita Borg தற்செயலாக புரோகிராமிங் துறைக்கு வந்தவர் தான் என்றாலும், இத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, கம்ப்யூட்டர் அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்று, இயங்குதள உருவாக்கத்தில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.
எனினும், தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், கம்ப்யூட்டர் துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், இத்துறைப் பெண்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் காரணமாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானி என்பதோடு, தொழில்நுட்பத்துறையில் பெண்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டவராக அறியப்படுகிறார்.
கம்ப்யூட்டர் துறையில் பெண்கள் நலனுக்காக அவர் தன் பெயரில் துவக்கிய அமைப்பும், துறையின் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக கம்ப்யூட்டர் முன்னோடி கிரேஸ் ஹாப்பர் பெயரில் துவக்கிய அமைப்பும் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி வருகின்றன.
Anita Borg Naffz அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர். ஹவாய், வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் வாழ்ந்தவர், இணையத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்ட 1969ம் ஆண்டு புரோகிராமரானார். அவருக்கு கணித பாடத்தில் ஆர்வமும் தேர்ச்சியும் இருந்தாலும், துவக்கத்தில் கம்ப்யூட்டர் துறைக்கு வரும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது அவர் கம்ப்யூட்டரை தொட்டது கூட இல்லை.
கம்ப்யூட்டர் கல்வி
இதனிடையே, அவருக்கு திருமணம் ஆனது. கணவருடன் நியூயார்க் சென்றவர், நண்பர்களின் பரிந்துரையின் பேரில் டேட்டா எண்ட்ரி துறையில் வேலைத்தேட துவங்கி, காப்பீடு நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பிறகு, தானாகவே புரோகிராமிங் கற்றுக்கொண்டார்.
பின்னர், நியூயார்க் பல்கலையில் சேர்ந்து கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் படிக்கத்துவங்கினார். கல்வி உதவித்தொகையும் கிடைத்த நிலையில், பல ஆண்டுகள் உழைத்து டாக்டர் பட்டமும் பெற்றார்.
டாக்டர் பட்டம் பெற்ற பிறகு, யுனிக்ஸ் சார்ந்த டார்கன் (TARGON) எனும் இயங்குதளத்தை உருவாக்குவதில் ஈடுபட்டார். 1986ல் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இங்குள்ள ஆய்வகத்தில் 12 ஆண்டுகள் பணியாற்றியவர், மென்பொருள் உருவாக்கத்தில் பல முக்கியப் பங்களிப்புகளை நிகழ்த்தினார்.
இடைப்பட்ட காலத்தில் கம்ப்யூட்டர் மாநாடுகளில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 1987 ஆஸ்டின் நகரில் நடைபெற்ற கம்ப்யூட்டர் மாநாட்டில் கலந்து கொண்டார். பொதுவாக மாநாடுகளில் பங்கேற்கும் போது அதில் எத்தனை பெண்கள் பங்கேற்கின்றனர் என்று பார்ப்பது அவரது வழக்கம். ஆஸ்டின் மாநாடு பட்டியலை பார்த்த போது, 400 பங்கேற்பாளர்களில் 30 பேர் மட்டுமே பெண்கள் என்பதை கவனித்தார்.
பெண்கள் எண்ணிக்கை ஏன் குறைவாக இருக்கிறது எனும் யோசனையோடு குளியலரை பகுதிக்குச்சென்றவர், அங்கு வந்த தோழியிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தார். அங்கு வந்த மற்ற பெண்களும் இந்த பேச்சில் கலந்து கொண்டனர். அப்போது தான், அந்த பெண்களுக்கு தாங்கள் வேறிடத்தில் சந்தித்து பேச வேண்டும் எனத்தோன்றியது. உடனே அனிதா, மாநாட்டிற்கு வந்திருந்த பெண்களிடம் இரவு விருந்திற்கு முன் சந்தித்து பேசலாம் என கூறினார்.
சிஸ்டர்ஸ் குழு
அவர் அழைப்பை ஏற்று பெரும்பாலான பெண்கள் வந்திருந்தனர். கம்ப்யூட்டர் மேதை பார்பரா லிஸ்கோவ் துவங்கி, பல்கலை மாணவிகள் வரை பலர் பங்கேற்றனர். அவர்களிடம் இருந்து இ-மெயில் முகவரியை சேகரித்தவர், தொடர்ந்து கருத்து பரிமாற்றம் செய்வதற்காக ’சிஸ்டர்ஸ்’ ‘Sisters' எனும் பெயரில் இ-மெயில் குழுவை உருவாக்கினார். துவக்கத்தில் இயங்குதளம் ஆய்வு தொடர்பான கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் நோக்கம் கொண்டிருந்தாலும், நாளடைவில் கம்ப்யூட்டர் துறை பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பேசி ஆதரவு நாடும் இடமாக இந்த குழு உருவானது.
கம்ப்யூட்டர் துறை பெண்களுக்கான இணைய சமூகமாக சிஸ்டர்ஸ் குழு செயல்பட்டது. 38 நாடுகளில் 2800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக இக்குழு செயல்பட்டது. இக்குழுவில் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றி மட்டுமே விவாதிக்க அனுமதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் வேறு விஷயங்களை கொண்டு வந்தால் கூட, அனிதா போர்க் நாகரீகமாக மறுத்துவிடுவார்.
இந்த குழுவின் சார்பாக தான் 1992ல் பார்பி பொம்மைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சிறிமிகள் விளையாடுவதற்கான பலவகையான பார்மி பொம்மைகளை தயாரிக்கும் மேட்டல் நிறுவனம், டாக்டர் பார்பி, விமானி பார்பி என பலவகை பார்பிகளை அறிமுகம் செய்யும் வழக்கம் கொண்டிருந்தது. இந்த வரிசையில், நிறுவனம் அறிமுகம் செய்த கம்ப்யூட்டர் சிப் கொண்ட பார்பி பொம்மை, கணித பாடம் கஷ்டமானது எனச் சொல்வது போல அமைந்திருந்தது.
Barbie சர்ச்சை
பொம்மை தான் என்றாலும், அனிதா இந்த விஷயத்தை முக்கியமாகக் கருதினார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் பெண்களுக்கு கடினமானது என தவறான கருத்து சமூகத்தில் பரவியிருக்கும் நிலையில், பார்பி பொம்மை கணித பாடம் கஷ்டமானது எனச் சொல்வது சிறுமிகள் மத்தியில் இந்த தவறான எண்ணத்தை வலுப்படுத்தும் என அஞ்சியவர் இது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து நிறுவனத்திற்கு கடிதமும் எழுதினார். சிஸ்டர்ஸ் குழுவில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டது தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த பொம்மையில் இருந்த கணித பாடம் தொடர்பான கருத்து நீக்கப்பட்டது.
பெண்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் ஆர்வம் காட்டி கம்ப்யூட்டர் உள்ளிட்ட துறைகளில் ஆர்வத்தோடு பங்கேற்க வேண்டும் என்பதே அனிதா போர்கின் விருப்பமாக இருந்தது. பெண்கள் மத்தியில் கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் 1994ல் டெல்லே விட்னி என்பவருடன் இணைந்து பெண்களுக்காக பெண்கள் நடத்தும் கம்ப்யூட்டர் மாநாடுகளை ஏற்பாடு செய்யத் துவங்கினார். இந்த மாநாடு முயற்சியே கம்ப்யூட்டர் துறையில் பெண்களின் பங்களிப்பை கொண்டாடும் கிரேஸ் ஹாப்பர் கொண்ட்டாட்டமாக மாறியது.
பெண்களின் எதிர்காலம்
பெண்களுக்கான தொழில்நுட்ப ஆதரவை மேம்படுத்தும் வகையில் 1997ல் பெண்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கழகத்தை (Institute for Women and Technology) உண்டாக்கினார். இந்த அமைப்பே தற்போது அவரது பெயரில் செயல்பட்டு வருகிறது. 1997ல் டிஜிட்டல் நிறுவனத்தில் இருந்து விலகி ஜெராக்ஸ் நிறுவனத்தில் இணைந்த நிலையில் இந்த அமைப்பை உருவாக்கினார். புதிய திறன்களை கற்றுக்கொண்டு பெண்கள் தொழில்நுட்பத் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
டிஜிட்டல் நிறுவனத்தில் பாலின பாகுபாட்டை உணர்ந்ததாலேயே பெண்களுக்கான தொழில்நுட்ப ஆதரவு அமைப்பை துவக்க தீர்மானித்தார். இதன் பின்னரே, முழுக்க முழுக்க தொழில்நுட்பத்தில் பெண்கள் எனும் கருத்தின் அடிப்படையில் செயல்படவும் தீர்மானித்தார். புற்றுநோய் பாதிப்பால், 2003ல் மரணம் அடையும் வரை இந்த பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு பின்னும் இந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு பெண்களுக்கு தொழில்நுட்ப துறையில் வழிகாட்டி வருகின்றன.
எதிர்காலத்தில் பெண்கள் தங்களுக்கான அர்த்தமுள்ள இடத்தை பெற வேண்டும் எனில், தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும் என்பதே அனிதா போர்கின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது.அவரது செயல்பாடுகளும் இந்த நோக்கிலேயே அமைந்திருந்தன.
(கம்ப்யூட்டர் பெண்கள் தொடர் அடுத்த இதழில் நிறைவடையும்).