’நுகர்வோர் எனும் ஏமாளி’- இப்படித்தான் ஒவ்வொரு முறையும் விற்பனையாளர்களால் ஏமாற்றப்படுகிறோம்...
இதுவரை சூப்பர் மார்க்கெட், பிராண்டட் ஷோரூம், ஓட்டல்கள், , துணிக்கடைகள் இன்னும் பல நீங்கள் சென்ற இடங்களில் எங்கெல்லாம் பில்லுக்கும் அதிகமாக பணம் செலுத்தியுள்ளீர்கள் என்று எண்ணுங்கள்! உங்களது பணம் இக்கட்டுரையில் உள்ள காரணங்களுக்காக வசூலிக்கப்பட்டுள்ளது எனில், நீங்களும் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள்...
ஏமாறுபவர்கள் இருக்குவரை ஏமாற்றுபவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்வார்கள். அதற்கு, ஏமாறுபவர்கள் முதலில் விழித்துக்கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்து கடைகளில், பேருந்துகளில், ஆன்லைன் விற்பனையகங்களில் என நித்தம் நுகர்வு எனும் வடிவில் ஏமாற்றப்படுகிறோம். அப்படி ஏமாற்றப்பட்ட மூவர்கள் தொடர்ந்து போராடி, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தண்டனை பெற செய்ததின் நிகழ்வினை அறிந்து கொண்டு, நுகர்வோராக நம் உரிமைகள் மூன்றினை கற்றுக் கொள்வோம்.
இனி, கடைகளில் வழங்கும் துணிப்பைகளுக்கு காசு கொடுத்தால் தெரிந்தே ஏமாறுறீர்கள் என்று அர்த்தம்...
ஷாப்பிங் மால்களுக்கும், சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வீசின கை வெறுங்கையுமாக நுழைந்து வெளிவருகையில், காசு கொடுத்து பை வாங்கி வருகிறீர்கள் எனில்... நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்பான சம்பவம் இது.
ஒவ்வொரு முறை பெரிய கடைகளில் பை நிறைய பொருள் வாங்குகையில், பையிலுள்ள பொருள்களை உத்து கவனித்து வாங்குவோமே, தவிர பையினை பார்ப்பதுகூட இல்லை. அதன் விளைவே ஒவ்வொரு ஷாப்பிங்கிலும் 3ரூபாய் முதல் 10ரூபாய் வரை கடைக்காரரிடம் செலுத்தி பையினை பெற்று, ஏமாளியாகி வந்துள்ளோம். ஆம், காசு கொடுத்து வாங்கும் பையில் கொட்டை எழுத்தில் அந்நிறுவனத்தின் லோகோ இருக்குமாயின், அது அந்நிறுவனத்திற்கான விளம்பரம். பின்னே, எதற்காக காசு கொடுத்து பையினை வாங்க வேண்டும்..?
நாம் என்றுமே இதைப்பற்றி சிந்தித்தில்லை. ஆனால், சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் என்பவர், கடந்த பிப்ரவரி 5ம் தேதி பாட்டா ஷோரூமுக்கு சென்று ஷூ வாங்கியுள்ளார். ரூ399 ஒன்லி மதிப்பு கொண்ட ஷூவை ஒரு பையில் போட்டு வழங்கி, பைக்கு 3ரூபாய் வசூலித்து, ஆக மொத்தம் பில் தொகை ரூ402 எனக் கூறியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த தினேஷ், நுகர்வோர் நீதிமன்றத்தில் பாட்டாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.
“பேப்பர் பையில் பட்டா அதன் பிராண்ட்டை விளம்பரப்படுத்தும் விதமாக அதன் பெயரை அச்சிட்டுள்ளது. அதற்காக வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்பது நியாயமில்லை. நான் செலுத்திய 3ரூபாயை திருப்பியளிப்பதுடன், சேவை குறைப்பாட்டை கருத்தில் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே பையினை வழங்கவேண்டும். தினேஷ் பிரசாத்தின் 3 ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டும். அதனுடன், இந்த வழக்குக்கு அவர் செலவு செய்ததற்கு இழப்பீடாக 1000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் கொடுத்ததற்கு 3000 ரூபாய் கொடுக்க வேண்டும். மாநில நுகர்வோர் மறுவாழ்வு ஆணையத்தின் சட்ட உதவி கணக்கில் ரூ.5,000 அபராதமாகச் செலுத்த வேண்டும். ஆகமொத்தம் ரூ.9000 பாட்டா நிறுவனம் அபராதமாகச் செலுத்த வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சுற்றுச்சூழல் நலன் மீது அக்கறை உடைய நிறுவனம் எனில் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பைகளை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
இந்த நுகர்வோர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியா முழுவதுமுள்ள அனைத்து கடைகளுக்கும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் இந்த விதியை நுகர்வோர்கள் மேற்கோள் காட்டலாம். கடைக்காரர்கள் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத ஈகோ-ப்ரண்ட்லி பைகளை அளித்தாலும் விற்பனையாளர்கள் பையுக்கு கூடுதல் தொகை வசூலிக்க முடியாது” என்று ஹிந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் டில்லியை சேர்ந்த வழக்கறிஞர் சாகர் சக் சானா.
ஜிஎஸ்டி குளறுபடியால் ரயில்வே அமைச்சக கஜானாவை
அடைந்தது 9 லட்சம் பயணிகளின் 3.34 கோடி ரூபாய் பணம்!
அடிச்சு பிடிச்சு ஐஆர்சிடிசி வெப்சைட்டுக்குள் நுழைந்து, மின்னல் மனிதன் 100மீ ஒட்டப்பந்தய போட்டியின் ரெக்கார்ட்டையே உடைக்கும் அளவிற்கு வேகமாய் செயல்பட்டு டிக்கெட்டை புக் செய்யவும், டிரிப் டிராப் அவுட்டாகியதும் டிக்கெட்டை கேன்சல் செய்வதிலும் மக்கள் பிசியாகியதின் விளைவு,
9 லட்சம் பயணிகளின் 3.34 கோடி ரூபாய் பணம் ரயில்வே துறைக்குச் சென்றுள்ளது. அதிலொருவர், 2 ஆண்டுகளாய் போராடி அவருக்கு சேர வேண்டிய 33ரூபாயை திரும்பப் பெற்றுள்ளார்.
ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த 30 வயது பொறியாளாரான சுஜித் ஸ்வாமி, கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி கோட்டாவில் இருந்து டெல்லி செல்வதற்காக இருமாதங்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த டிக்கெட்டை கேன்சல் செய்தார். அவர் புக் செய்த டிக்கெட்டின் கட்டணம் 765ரூபாய். சேவைக் கட்டணமாக 100ரூபாய் பிடித்தம் செய்துவிட்டது மீதம் 665ரூபாயை அவருடைய வங்கிக் கணக்கில் டெபாசிட்டாகி உள்ளது.
“டிக்கெட் கேன்சிலேஷனுக்கு ரூ65 தான் பிடித்தம் செய்திருக்க வேண்டும். மாறாக 100ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. 2017ம் ஆண்டிலிருந்து இவ்வழக்கை பின்பற்றி வருகிறேன். உங்கள் தொகை திருப்பி அளிக்கப்படும் என்ற உத்ரவாதம் மட்டுமே அளிக்கப்பட்டது,” என்றார் சுஜித். ஜிஎஸ்டி அமலுக்கு முன்பே டிக்கெட் ரத்து செய்யப்பட்ட போதிலும் கூடுதல் கட்டணமாய் ரூ35 எதற்காக பிடித்தம் செய்யப்பட்டது என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான தகவல் ஆணையத்தில் சுஜித் மனு கொடுத்தார். அதற்கு பதில் அளித்த ரயில்வே நிர்வாகம்,
“சுஜித் டிக்கெட் பதிவு செய்தபோது ஜிஎஸ்டி இல்லை என்றும், பின்னர் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி அமல் படுத்தப்பட்டதாகவும் அதனால் ஜிஎஸ்டிக்கான கட்டணம் 35 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் கூறியது. ஆனால், சுஜித்தோ, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்பே டிக்கெட் எடுத்த ஒருவருக்கு எப்படி ஜிஎஸ்டி பிடிக்கலாம்? என்று விடாமுயற்சியுடன் பல இடங்களில் அழுத்தம் தந்திருக்கிறார். ஒரு வழியாக சுஜித்துக்கு மறுவிளக்கம் கிடைத்தது.
“ரயில்வே அமைச்சகத்தின் வணிக சுற்றறிக்கை எண் 43ன் படி, ஜிஎஸ்டி அமலுக்கு முன்பாக முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ஜிஎஸ்டி அமலுக்கு பின் ரத்து செய்கையில் அதற்காக பிடித்தம் செய்யப்பட்ட சேவை வரியை திரும்பப் பெற இயலாது. அதனால், ரூ100 பிடித்தம் செய்யப்பட்டது.” என்று பதிலளித்துள்ளது. பின்னர், ஜூலை 11ம் தேதி தங்களது முடிவை மாற்றிக்கொண்டு ரயில்வே நிர்வாகம், ஜிஎஸ்டி அமலுக்கு முன்பாகவே ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பிடித்தம் செய்த சேவை வரியை திருப்பிதர முடிவு எடுத்துள்ளது.
கடந்த மே 1ம் தேதி , சுஜித்தின் வங்கிக்கணக்கிற்கு அவருடைய மீதி பணமான ரூ35-ல் இன்றைய தேதிக்கான ஜிஎஸ்டி வரியாக 2ரூபாயை பிடித்துக் கொண்டு 33 ரூபாயை செலுத்தியுள்ளது. முன்னதாக, லோக் அதாலத்தில் அவர் தொடுத்த மனு கடந்த ஜனவரி மாதம், இவ்வழக்கு அவர்களுடைய அதிகார எல்லைக்குள் இல்லை என்றுக் கூறி மனுவை நிராகரித்தனர்.
“நான் ஆர்டிஐ மூலம் இவ்வழக்கை பின் தொடர்ந்து வந்தேன். உண்மையில், நீண்ட போராட்டமாக இருந்தது. டிசம்பர் 2018ம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை நான் பதிவு செய்த ஆர்டிஐ ஒன்றிலிருந்து மற்றொரு துறை என 10 அரசுத் துறைகளுக்கு அனுப்பப்பட்டது. கடைசியில், என்னுடைய 33ரூபாய் திரும்பக் கிடைத்தது. ஐஆர்சிடிசி எனக்கு ரூ35 திரும்ப அளிப்பதாய் கூறியிருந்தது. எனவே, மீண்டும் நான் மீண்டும் வழக்கு தொடர்வேன்” என்றார்.
ஜிஎஸ்டி குளறுப்படியால் சுஜித் மட்டுமில்லை சுமார் 9 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆம், சுஜித் தாக்கல் செய்த மற்றொரு ஆர்டிஐ-க்கு கிடைத்த பதிலில், ஜிஎஸ்டி அமலுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு, பின்பு ஜூலை 1ம் தேதி- 11ம் தேதிக்குள் ரத்து செய்த 9லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயணிகளிடமிருந்து ரூ3.35 கோடி சேவை வரியாய் வசூலிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகளுக்கு இதை அறிந்திருக்கமாட்டர். பலரும் மறந்திருப்பர்,” என்றார்.
எம்ஆர்பி விலையைவிட 3ரூபாய் கூடுதலாக விற்றதால் 68,000 ரூபாய் அபராதம் கட்டிய ரெஸ்டாரண்ட்!
எப்பொருள் யார்யார் எங்கெங்கு வாங்கினும், அப்பொருளின், எம்ஆர்பி, எக்ஸ்பைரி காண்பதறிவு. பக்சே, அவசரத்து பிறந்தவர்களாகிய நாம், ஹை கிளாஸ் கடைகளில் கேட்கும் காசை வாரி இறைத்துவிட்டு, பூக்காரம்மாவிடம் அஞ்சு ரூபாயுக்கு மல்லுக்கு நிற்போம். ஆனால்,
எம்ஆர்பி விலையை விட கூடுதலாக ஒரு பொருளுக்கு காசு வசூலித்தால் அது குற்றமே!
ஆம், கடந்த மூன்று ஆண்டுகளாய் எம்ஆர்பி விலையை விட மூன்று ரூபாய் அதிகம் பெற்ற ஓட்டல்காரர் மீது புகார் அளித்து கடந்த மே 1ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பின்மூலம் வெற்றிகண்டுள்ளார் மதுரையைச் சேர்ந்த எஸ். சுமேஷ். 2016ம் ஆண்டு மதுரை பழங்காநத்தத்தில் இயங்கும் பேச்சியம்மன் பால் டிப்போ உணவகத்தில் ரூ22 மதிப்புள்ள 200மி.லி பிஸ்தா பால் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் பில்லில் ரூ25 என குறிப்பிட்டு வசூலித்துள்ளது. இதற்கு தீர்வு காண மாவட்ட நுகர்வோர் பிரச்னைகள் குறைப்பு தீர்ப்பு மன்றத்தை(டிசிடிஆர்எஃப்) நாடினார் சுமேஷ்.
நுகர்வோர் தீர்வு மன்றத்தின் விசாரணையின்போது, உணவகம் அளித்த எழுத்துவடிவ பதிலில், “இது நவீன வசதிகளுடன் கூடிய நல்ல சுகாதாரணமான உணவினை வழங்கக்கூடிய உணவகம். அதனால் பராமரிப்பிற்காக பெரும் அளவிலான பணம் செலவழிக்கப்படுகிறது. மேலும், உணவு மற்றும் பானங்களைக் காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் குளிர்சாதனப்பெட்டியைப் பராமரிக்கும் செலவினங்களை சரிகட்ட பால் போன்ற பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும், எம்ஆர்பி விலைக்கு விட அதிகமாக பணம் வசூலிக்க உணவகத்திற்கு உரிமை இல்லை என்றும் இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை எனக் கூறிய டிசிடிஆர்எஃப், உணவகத்தின் செயலால் ஏற்பட்ட மன வேதனைக்கு இழப்பீடாக சுமேஷிற்கு ரூ15,000த்துடன் அவருக்கு வழங்க வேண்டிய 3ரூபாயும், கூடுதல் கட்டண குற்றசாட்டுக்காக ரூ3,000 மற்றும் பிரதிவாதியை தண்டிக்கும் விதமாய் ரூ50,000-ஐ ‘மாநில நுகர்வோர் நல நிதி’க்கு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
‘நுகர்வோர்கள் நம்முடைய வாடிக்கையான விருந்தாளிகள். அவர்களை சார்ந்தே நாம் இருக்கிறோமே... தவிர, அவர்கள் நம்மை சார்ந்தில்லை’ என்பதை பொருளையோ சேவையோ வழங்கும் நிறுவனத்தார்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்...
தகவல் உதவி : ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்