மண் பாத்திரங்கள்; பாரம்பரிய சமையல் பொருட்கள் - ஃபேஸ்புக்கில் தொடங்கி ஆண்டுக்கு ரூ. 6 கோடி டர்ன் ஓவர் செய்யும் கயல்விழி!
பாரம்பரிய வாழ்க்கைமுறையை ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் கொண்டு வரும், வித்தியாசமான முயற்சியைத் தொழிலாக ஆரம்பித்து, இன்று வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகிறார் சென்னையைச் சேர்ந்த கயல்விழி.
அமெரிக்க வாழ்க்கையைத் துறந்து, பாரம்பரிய வாழ்க்கைமுறையை ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் கொண்டு வரும் முன்னெடுப்புடன், Essential traditions by Kayal என்ற
பாரம்பரிய பாத்திரங்களின் விற்பனையை ஆரம்பித்து, மக்கள் மத்தில் ஆர்கானிக் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, இந்த நிதியாண்டில் ரூ.6 கோடி டர்ன் ஓவர் செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கயல்விழி.
சென்னையில் பிறந்து வளர்ந்த கயல்விழி, இன்ஜினியரிங் முடித்த பிறகு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றார். பின்னர், அங்கேயே படித்து முடித்து, வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் திருமணம் முடிந்து, குழந்தையும் பிறந்து விட்டது. அப்போதுதான் இந்தியா திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அதிகமானது. இங்கு வந்து மற்றவர்களுக்கு உபயோகப்படும் படியான ஏதாவது ஒரு தொழிலை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் உண்டானது.
கயல்விழிக்கு மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயி
இந்தியா திரும்பிய கயல்விழி, திருநெல்வேலி அருகில் உள்ள புளியங்குடியில் உள்ள விவசாயி ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"அவரது தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அவரது வாகனத்திற்கு டீசல் மற்றும் சமையலுக்கு உப்பைத் தவிர, மற்ற அனைத்தையுமே அவர் தனக்காக அங்கே விளையச் செய்திருந்தார். அவரது அந்த வாழ்க்கைமுறை எனக்கு வியப்பை ஏற்படுத்தியது," என்றார் கயல்விழி.
ஆனால், இதேபோன்றதொரு ஆர்கானிக் வாழ்க்கைமுறையை வாழ வேண்டுமென்றால், கிராமத்தில் பண்ணையில்தான் கிடைக்குமா? அதைச் சென்னை மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி மாற்றினால் என்ன என்ற யோசனை அங்குதான் உதித்தது. அதனைத் தொடர்ந்துதான்,
”நமது நகர வாழ்க்கைமுறைக்கு ஏற்ப, நம் அடுப்படிக்குத் தேவையான ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வது என முடிவெடுத்தேன். அப்படி பத்து ஆண்டுகளுக்கு முன்பு உருவானதுதான் ‘வேர்’ என்ற ஆர்கானிக் ஸ்டோர்,” என தன் ஆரம்ப நாட்களை நினைவு கூர்கிறார் கயல்.
ஃபேஸ்புக்கில் ஆரம்பித்த பயணம்
புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டான காலகட்டத்தில், தனியாக கடையோ அல்லது வெப்சைட்டோ தொடங்கும் அளவிற்கு நிலைமை தங்களுக்குச் சாதகமான சூழல் இல்லாததால், ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து, அதன் மூலம் தனது விற்பனையை ஆரம்பித்திருக்கிறார் அவர்.
“உருளைக்கிழங்கு, தக்காளி என தினமும் எங்களுக்குக் கிடைத்த நான்கைந்து காய்கறிகளைக் கொண்டு, ஆர்கானிக் காய்கறிகளை விற்பனை செய்யும் ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை 2013ம் ஆண்டு ஆரம்பித்தோம். ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் மற்றும் போன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்வார்கள். அதனை நாங்களே நேரில் கொண்டு போய் டெலிவரி செய்தோம்.“
இப்படி ஆர்கானிக் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தபோதுதான், அதிக விலை கொடுத்து அவற்றை வாங்கினால் மட்டும் போதாது. அவற்றை முறைப்படி சமைத்தால்தான் அதன் பலன்களை நாம் சரியாகப் பெற முடியும் என்ற விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம்.
அதன் தொடர்ச்சியாக, வெறும் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வதோடு, அவற்றைச் சமைத்துச் சாப்பிட பாரம்பரிய சமையல் பாத்திரங்களையும் சேர்த்து விற்பனை செய்தால் என்ன, என்ற யோசனையும் உண்டானது.
‘எசன்ஷியல் டிரெடிசன்ஸ் பை கயல்’ (Essential Traditions by kayal)
புது ஐடியா வந்தவுடன் உடனே அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தோம். முதலில் சிறிய அளவில், ‘எசன்ஷியல் டிரெடிசன்ஸ் பை கயல்’ என எங்களது கடையிலேயே சிறப்பு விற்பனை ஒன்றை ஒரு வார இறுதிநாளில் அறிவித்தேன். எனது அம்மாவிடம் இருபதாயிரம் ரூபாய் கடனாகப் பெற்று, சிறிய அளவில் பொருட்களை வாங்கி விற்பனைக்கு கொண்டு வந்தேன். அந்த நிகழ்வுக்கென பெரிய விளம்பரம்கூட எதுவும் செய்யவில்லை.
"எனது ஃபேஸ்புக் பக்கம் மூலமாக மட்டுமே மக்களிடம் அதனைக் கொண்டு போய் சேர்த்தேன். ஆனால் நானே ஆச்சர்யப்படும் அளவிற்கு, ஒரே நாளில் எங்களது அனைத்து பாத்திரங்களும் விற்றுத் தீர்ந்து விட்டது. ஒரே நாளில் நான் வாங்கிய கடனை என் அம்மாவிடம் திருப்பிக் கொடுத்தேன். அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியும், நம்பிக்கையும்தான் மேற்கொண்டு இந்தத் தொழிலில் என்னை அதிக ஆர்வத்துடன் இயங்க வைத்து வருகிறது,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் கயல்.
மண் பாத்திரம், கல் சட்டி, இரும்பு, பித்தளை, ஈயம், மூங்கில், மரம் என அந்தக் காலத்தில் உங்கள் பாட்டி வீட்டில் எதையெல்லாம் பார்த்திருப்பீர்களோ, அதெல்லாம் இங்கு தனது 'எசன்ஷியல் டிரெடிசன்ஸ் பை கயல்’ கடையில் கிடைக்கும், என்கிறார் கயல்.
“ஒரு பாத்திரத்தை வாங்கினால் மட்டும் போதாது. அதனை எப்படி பயன்படுத்தினால் அதன் பலன்களை முழுமையாகப் பெற முடியும் என்ற தெளிவும் மக்களுக்குத் தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டேன். அதனால்தான், நாங்கள் விற்பனை செய்யும் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதில், எப்படி சமைக்க வேண்டும், எப்படிப் பாதுகாக்க வேண்டும் என அனைத்து தகவல்களையும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் தந்து விடுகிறோம். இதையும் எங்களது பிராண்ட் வெற்றி பெற ஒரு முக்கியக் காரணமாக நான் பார்க்கிறேன்."
கொரோனா லாக்டவுன்
எந்தவொரு தொழிலிலுமே ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யும். கொரோனா லாக்டவுன் காலகட்டம் எங்களுக்கும் அப்படித்தான் இருந்தது. அந்த சமயத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தனர். முன்பைவிட அப்போது தங்களது உடல் ஆரோக்கியத்தின்மீது அவர்களுக்கு அக்கறை அதிகமாகி இருந்தது.
அந்த சமயத்தில், எங்களது பொருட்களை நேரடியாகவோ, கூரியர் மூலமாகவோ விற்க முடியாவிட்டாலும், அந்தச் சூழ்நிலையையும் நாங்கள் எங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டோம். நிறைய லைவ் செய்தோம். மக்களுடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களது தேவைகள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டோம்.
அதேமாதிரி, எங்களது பொருட்களின் சிறப்புகளை அவர்களிடம் கொண்டு சேர்த்தோம். இதனால் மக்கள் நிறைய முன்பதிவு செய்தனர். கொரோனா லாக்டவுன் தளர்வு ஆரம்பித்ததும் உடனடியாக மக்கள் ஆர்டர் செய்தவற்றை அவர்களது கையில் கிடைக்கும்படி செய்தோம், என்கிறார் கயல்.
செம்பருத்தி பூவில் இருக்கும் ஐந்து இதழ்களைக் குறிக்கும் வகையில், 2021ம் ஆண்டு சென்னை ஈசிஆரில் பிரதானப் பகுதியில், 'ஹைபிஸ்கஸ்' என்ற கஃபே ஒன்றை ஆரம்பித்துள்ளார் கயல். சமையல் பாத்திரங்கள், ஆர்கானிக் ஸ்டோர், சில்க் ஸ்டோர், கஃபே மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தளம் என இந்த ஐந்தும் சேர்ந்ததாக இந்த ஹைபிஸ்கஸ் உள்ளது. தற்போது இதில் கூடுதலாக முற்றம் என்ற பாரம்பரிய உணவகமும், பேக்கரியும் இணைந்துள்ளது.
சக்சஸ் ஃபார்முலா
“நான் இந்தத் தொழிலை ஆரம்பித்த புதிதில் இதை மார்க்கெட்டிங் செய்வது பற்றியோ, போட்டியாளர்கள் பற்றியோ, எப்படி இதில் லாபம் சம்பாதிப்பது என்றோ கொஞ்சம்கூட சிந்திக்கவில்லை.
"எனக்கு நான் பார்த்த வேலை மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பாத்திரங்களில் சமைத்து நான் பெற்ற அனுபவங்களையே மற்றவர்களுக்குப் பகிர நினைத்தேன். அதுதான் எனது வளர்ச்சிக்கான சக்சஸ் ஃபார்முலாவாக நான் பார்க்கிறேன்.“
அதோடு, 2015ம் ஆண்டு நான் இந்தத் தொழிலை ஆரம்பிக்கும் போது, நான் பாத்திரங்கள் வாங்கிய சமயத்தில் இருந்ததைவிட, தற்போது அந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மாறி இருக்கிறது. நாங்கள் தொழிலில் வளர்ந்தது மாதிரியே, அவர்களும் தற்போது வளர்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக மாவுக்கல் பாத்திரங்கள் பற்றிச் சொல்வதென்றால், ஆரம்பத்தில் அந்தக் கிராமத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அந்த கிராமம் முழுவதுமே இதனைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். அழிவுநிலையில் இருந்த தொழில்கள் தற்போது நல்ல வளர்ச்சியை அடைந்திருக்கின்றன.
”விரைவில் தாங்களே இந்தத் தொழிலை விட்டுவிடலாம் என நினைத்திருந்தவர்கள்கூட, தற்போது தங்களது அடுத்த தலைமுறையையும் இந்தத் தொழிலில் ஈடுபடத் தூண்டி வருகின்றனர். இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே எனது தொழிலின் மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்,” எனப் பூரிப்புடன் கூறுகிறார் கயல்.
ரூ.6 கோடி டர்ன்ஓவர்
இரண்டு, மூன்று மண்சட்டிகள், பாத்திரங்கள், இரும்பு தோசைக்கல் என இவற்றை மட்டுமே கொண்டு, இந்த பாரம்பரிய சமையல் பாத்திர விற்பனையை ஆரம்பித்த `எசன்ஷியல் பை கயல்`, இன்று சென்னையில் பல கிளைகள் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் என முக்கிய நகரங்களில் நேரடிக் கடைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
இதுதவிர, ஆன்லைன் மூலமாக உலகம் முழுவதும் தங்களது தயாரிப்புகளைக் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
மொத்தமாக 55 ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த 2024-25ம் நிதியாண்டில் சுமார் 6 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்துள்ளது.
“புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இது ஒன்றுதான். எந்தவொரு விசயத்தில் உங்களுக்கு அதீத ஆர்வம் இருக்கிறதோ, நம்பிக்கை இருக்கிறதோ, துணிந்து அதில் இறங்கி விடுங்கள். அந்தத் தொழிலில் உள்ள சாதக பாதகங்களை நினைத்துக் கொண்டே, எப்போதும் அதிகப்படியாக சிந்தித்துக் கொண்டிருந்தால், நிச்சயம் அதில் ஜெயிக்க முடியாது. நம்பிக்கையுடன் செயல்பட்டு, கடினமாக உழைத்தால் நிச்சயம் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறலாம்,” என நம்பிக்கையுடன் முடிக்கிறார் கயல்.