ஜூன் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை: பாரத் பயோடெக் தீவிரம்!
ஜூன் 1 முதல் சோதனைகளைத் தொடங்க வாய்ப்பு!
பாரத் பயோடெக் தனது கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருத்துவப் பரிசோதனைகளை ஜூன் முதல் குழந்தைகளிடமிருந்து தொடங்கலாம் என்று அந்நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஃபிக்கி லேடீஸ் ஆர்கனைசேஷன் (எஃப்.எல்.ஓ) உறுப்பினர்களுடன் மெய்நிகர் உரையாடலில் பாரத் பயோடெக்கின் தலைமை வணிக மேம்பாடு மற்றும் சர்வதேச வக்கீல் ரேச்ஸ் எல்லா கலந்துகொண்டு பேசினார். ‘தடுப்பூசிகள் அனைத்தையும் பற்றி' என்ற தலைப்பில் பேசிய அவர்,
“100 சதவிகித பாதுகாப்பை வழங்கவில்லை. ஆனால், கொரோனா தொடர்பான பொருத்தமான நடத்தை மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தடுப்பூசியின் செயல்திறனை 100 சதவிகிதம் வரை மேம்படுத்த முடியும்," என்றார்.
தொடர்ந்து பேசியவர்,
“ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவாக்சின் மருத்துவப் பரிசோதனைகளைத் தொடங்க உள்ளோம். இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக் அனுமதி பெற்றுள்ளது, மேலும் இது ஜூன் 1 முதல் சோதனைகளைத் தொடங்கக்கூடும். 18 வயதுக்குள் உள்ள இரண்டு நபர்களைக் கொண்டு சோதனை நடைபெறும். சோதனை வெற்றி அடையும் பட்சத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் செலுத்துவதற்காக பாரத் பயோடெக் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உரிமம் பெறலாம். இருப்பினும்தடுப்பூசியின் சில பக்க விளைவுகள் பொதுவானவை,” என்றார்.
தடுப்பூசி நன்றாக வேலை செய்வதாலும், உயிர்களைக் காப்பாற்றுவதாலும் எங்கள் கடின உழைப்பு சிறப்பாகச் செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு நாளும் வேலையிலிருந்து வீடு திரும்பும் போது இந்த நல்ல உணர்வை நமக்கு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் உற்பத்தித் திறனை 700 மில்லியன் அளவுகளாக உயர்த்துவோம்," என்றார்.
மேலும், ”தற்போது, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்க அனுமதிக்கப்படவில்லை. இந்த குழுக்களில் தனித்தனி மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவை நிரூபிக்கப்பட்டவுடன் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கப்படலாம். தற்போதைய தடுப்பூசிகள் போதுமான அளவு சிறப்பாக செயல்படுகின்றன, ஆனால் ஒரு பூஸ்டர் டோஸின் தேவை வைரஸின் எதிர்கால மாறுபாடுகளைப் பொறுத்தது," என்று பேசினார்.
இந்தியாவில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. பின்பு அரசியல்வாதிகள், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட தடுப்பூசி திருவிழா தொடங்கி நடத்தப்பட்டு வந்தது.
தற்போது நிலவி வரும் இரண்டாம் அலையில் இளைய சமுதாயத்தினர் அதிகம் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்ட நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்தநிலையில் பாரத் பயோடெக் தனது கோவிட் -19 தடுப்பூசியான கோவாக்சின் மருத்துவ பரிசோதனைகளை ஜூன் முதல் குழந்தைகளிடமிருந்து தொடங்க இருக்கிறது.