'தடுப்பூசிச் சுற்றுலா’ - ஊசி போட்டுட்டு ஊர சுத்திப்பாருங்க: இந்தியர்களை அழைக்கும் ரஷ்யா!
20 நாள் சுற்றுலாவுடன் தடுப்பூசியும் எடுத்துக்கொள்ளலாம்!
கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகத்தில் முன்னெப்போதும் இல்லாத அழிவை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் நாம் வாழ்ந்த முறையை மாற்றியது. சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதால் சுற்றுலாத் துறையானது பாதிப்பை சந்தித்தது. இதனால் தற்போது உலகெங்கிலும் பயணம் செய்வது பலரின் தொலைதூர கனவாக மாறியது.
இந்த நிலையில், பல நாடுகளிலும் தடுப்பூசி இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருவதால், ஒரு புதிய வகை சுற்றுலாவாக ‘தடுப்பூசி சுற்றுலா’ ’Vaccine Tourism' தற்போது பிரபலமாகி வருகிறது. வெளிநாட்டு தடுப்பூசி சுற்றுலாவுக்கான வளர்ந்து வரும் தேவை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.
இதில், தற்போது முன்னணியில் இருக்கும் நாடு ரஷ்யா. சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வந்து ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை போட்டுக்கொள்ள ரஷ்ய அதிகாரிகள் சாத்தியமாக்கியுள்ளனர்.
இதற்காக,
துபாயை தளமாகக் கொண்ட டிராவல்ஸ் நிறுவனம் டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு 24 நாள் தொகுப்புப் பயணத்தை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன் கீழ், அவர்கள் பயணிகளை ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வார்கள். ரஷ்யா சென்றதும் பயணிகளுக்கு Sputnik-v தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திய பின்னர் அதற்கான சான்றிதழ்களையும் வழங்குவார்கள்.
ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்த 20 நாள் இருக்கும் கால இடைவெளியில் பயணிகள் நாட்டைச் சுற்றிபார்க்கலாம். இதற்கான மொத்த செலவு ரூ.1.29 லட்சம்.
இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் பேட்ச் மே 29க்கு புறப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 28 பயணிகளுடன் முன்பதிவு செய்துள்ளனர். அடுத்த பேட்ச் ஜூன் 7 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் புறப்படும் என்று ஏஜென்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 இரவு மற்றும் 25 நாள் தொகுப்பில் இரண்டு அளவு தடுப்பூசி, டெல்லி-மாஸ்கோ-டெல்லி விமான டிக்கெட்டுகள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 3 நட்சத்திர ஹோட்டலில் 4 நாட்கள் தங்குமிடம், மாஸ்கோவில் 3 நட்சத்திர ஹோட்டலில் 20 நாட்கள் தங்குமிடம், திரும்புவதற்கு டிக்கெட் உள்ளிட்ட செலவுகள் அடங்கும். ஒவ்வொரு ஸ்லாட்டிலும் 30 பயணிகளை அழைத்துச் செல்வோம் என்றும் ஏஜென்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா இதனை அதிகாரபூர்வமாக அனுமதிக்கிறது. ஆர்டி-பி.சி.ஆர் சோதனை முடிந்ததும் இந்தியர்கள் ரஷ்யா செல்லலாம். மாஸ்கோவிற்கு வந்த நாளில் பயணிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். தற்போது, இந்தியர்களை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் மிகச் சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: மலையரசு