‘எச்சரிக்கை’ - கொரோனா வைரஸ் மெயில்கள் மூலம் பரவும் கம்ப்யூட்டர் வைரஸ்...
கொரோனா வைரஸ் அச்சத்தை பயன்படுத்தி, ஹேக்கர்கள் தாக்குதல்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் தொடர்பான பீதியை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு மால்வேர் உலா வருவதாக இணைய வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
கோரோனா வைரஸ் அச்சத்தை பயன்படுத்தி மால்வேர் மென்பொருளை ஊடுருவ வைக்கும் ஸ்பேம் மெயில்களை ஹேக்கர்கள் அனுப்பி வருவதாக ஐபிஎம் எக்ஸ் போர்ஸ் மற்றும் காஸ்பெர்ஸ்கி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மெயில்கள், கொரோனா வைரஸ் தொடர்பான உண்மையான தகவல்கள் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கின்றன. ஜப்பானில் உள்ள பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மெயில்கள், அங்குள்ள மக்களை நுரையீரல் நோய் பாதித்திருப்பதாகவும், மேற்கொண்டு தகவல்களை அறிய மெயிலை திறந்து பார்க்குமாறும் கூறுகிறது.
பயனாளிகள் மெயிலை திறந்தால், மோசடி மால்வேர் மென்பொருள் இயக்கம் பெற்று தனிப்பட்ட தகவல்களை திருடுகிறது.
"கடந்த காலங்களில் இதே போன்ற முயற்சியைப் பார்த்திருக்கிறோம். இப்போது, சீனாவில் கொரோனா வைரஸ் பீதியை பயன்படித்திக்கொள்ள முயல்கின்றனர்,” என்று ஐபிஎம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஹேக்கர்கள், சமகால நிகழ்வுகள் மற்றும் தூண்டுதலான வார்த்தைகளைப் பயன்படுத்தி மக்களை மெயில்களை திறக்க வைத்து, இணைப்புகளை கிளிக் செய்ய வைக்கின்றனர். இப்போது கொரோனா வைரஸ் பேசுபொருளாக இருப்பதால், மோசடி நபர்கள், இதை பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஹேக்கர்கள், மெயில்கள் எந்த அளவு வாசிக்கப்படுகின்றன என்பதை கவனித்து, அதற்கேற்ப தங்கள் உத்திகளை வகுத்துக் கொள்கின்றனர் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐபிஎம் அறிக்கை, இத்தகைய மெயில்கள் ஜப்பானில் அதிக அளவில் பரவி இருப்பதாகவும், அமெரிக்காவிலும் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கிறது.
இந்த மால்வேர் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிகளையும் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்:
எச்சரிக்கை தேவை: இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ் வாயிலாக வரும் சந்தேகமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். சந்தேகத்திற்கு உரிய அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம்.
போலி செயலிகள் உஷார்: கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் பெயரிலான போலி செயலி மால்வேரை பரப்பியது. அதிகாரப்பூர்வ செயலியா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவும்.
பாஸ்வேர்டு பாதுகாப்பு: வலுவான பாஸ்வேர்டை பயன்படுத்தவும். இரண்டு அடுக்கு பாஸ்வேர்டு முறையை நாடவும்.
வைரஸ் தடுப்பு மென்பொருள்: ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டரில் வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்தவும்.
தொகுப்பு: சைபர்சிம்மன்