கொரோனா பாதிப்பு: மாணவர்களுக்கு இலவசத் திறன் நுட்பப் பயிற்சி!
கொரோனா வைரஸ் அச்சத்தால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட மாணவர்கள், கேம்பஸ் நேர்காணலுக்குத் தயாராக சென்னை நிறுவனம், இலவச ஆன்லைன் ஐடி திறன் பயிற்சி வகுப்புகளை வழங்க உள்ளது.
ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான, ‘குவி’ (GUVI), கொரோனா வைரஸ் அச்சத்தால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு, கேம்பஸ் நேர்காணலுக்கு தயாராக உதவும் ஐடி திறன் பயிற்சி வகுப்புகளை ஆன்லைனில் இலவசமாக வழங்க உள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் இறுதி செமிஸ்டர் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மாணவர்கள் கேம்பஸ் நேர்காணலுக்குத் தயாராகி வருகின்றனர். இதற்காக பலரும் பயிற்சி நிலையங்களில் பயின்று வருகின்றனர்.
இதனிடையே கொரோரா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், தாய்மொழியில் மாணவர்கள் பயிற்சி பெற ஆன்லைன் வகுப்புகளை வழங்கி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான குவி (www.guvi.io) மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்புக்கான தகுதி பெறும் பயிற்சி வகுப்புகளை வழங்க முன் வந்துள்ளது.
நிறுவனத்தின் இணையதளம் மூலம் மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் கட்டணம் இல்லாமல் பயிலலாம். இது தவிர, கொரோனா தொடர்பாக வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள், இரண்டு வார காலத்திற்கு இதன் வகுப்புகளை இலவசமாக பயிலலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 100 தொழில்நுட்ப வல்லுனர்கள் நிறுவனங்கள் எதிர்பாக்கும் தொழில்நுட்பத் திறன் தொடர்பான 30 நாள் இணைய வகுப்புகளையும் வெபினார் வாயிலாக நடத்த முன் வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் ஆன்லைன் கோடிங் மேடையாக கோட் கதா (Code kata) மூலம் மாணவர்கள் ஆன்லைன் வழிகாட்டிகளின் ஆலோசனையை இலவசமாக பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே நேரத்தில், அவர்கள் வேலைவாய்ப்பை பிரகாசமாக்குவதற்கான திறன்களையும் அளிக்க வேண்டும். இந்த இலக்கை நோக்கி GUVI நிறுவனமும் தன் பங்கை செலுத்துகிறது. எங்கள் நிறுவன பங்குதாரர்களும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்,” என்று குவி இணை நிறுவனர், சி.இ.ஓ எஸ்.பி.பாலமுருகன் கூறியுள்ளார்.
இந்நிறுவனம், மாணவர்கள் வேலைவாய்ப்புக்கான தொழில்நுட்பத் திறன்கள் பெறுவதை உறுதி செய்யவும், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொழில்நுட்பத் திறன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது. யூடியூப் சேனலாக துவங்கப்பட்டு பின்னர் கல்வி நுட்ப பயிற்சி மேடையாக உருவானது. இதன் வீடியோக்கள் லட்சக்கணக்கான மாணவர்களால் பார்க்கப்பட்டுள்ளன.
ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் துவங்கப்பட்ட குவி நிறுவனம், பிராந்திய மொழிகளில் பயிற்சி அளிக்கும் கல்வி- தொழில்நுட்ப மேடையாக விளங்குகிறது. 1,000 பொறியியல் கல்லூரிகளுக்கு மேல் இருப்பைக் கொண்டுள்ள நிறுவனம் இது வரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு திறன் பயிற்சி அளித்துள்ளது. பைத்தான், இயந்திர கற்றல், ஜாவா உள்ளிட்டவற்றில் தாய் மொழியில் பயிற்சி அளித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு: www.guvi.io
தொகுப்பு: சைபர்சிம்மன்