கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவின் நிலை என்ன?
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலால் கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று மாணவர்கள் எப்படி இருக்கிறார்கள்?
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவ மாணவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மற்ற இருவருக்கும் வைரஸ் பாதிப்பு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருப்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
”உறுதியான முடிவுகள் வருவதற்காக காத்திருக்கிறோம். அவர்கள் நிலை சீராகவே உள்ளது. மெல்ல குணமடைந்து வருகிறார்கள். விரைவில் அவர்களும் வீடு திரும்புவார்கள்,” என்று வர்தன் குறிப்பிட்டார்.
பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில் அமைக்கப்பட்ட உயர்மட்ட அமைச்சர் குழு கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்ய இரண்டாவது சந்திப்பை ஏற்பாடு செய்தது.
இதுவரை 2,315 விமானங்களில் பயணம் செய்த 2,51,447 நபர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் வர்தன் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் 15,991 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 497 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாகவும் இவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வர்தன் தெரிவித்தார்.
மாலத்தீவைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட 645 பேர் சீனாவின் வூஹான் நகரில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவர்கள் இரண்டு சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வர்தன் குறிப்பிட்டார். இவர்கள் இரண்டு வார காலம் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமான பிறகே வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் வர்தன் தெரிவித்தார்.
மாலத்தீவில் ரத்த மாதிரிகளை சோதிக்கவும் பூடானில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தவும் இந்தியா உதவி வருகிறது. ரத்த மாதிரிகளை சோதனை செய்ய ஆப்கானிஸ்தானிற்கு ஆதரவளிப்பதாகவும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே வாக்குறுதி அளித்ததை அடுத்து கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருட்கள் சீனாவிற்கு அனுப்பப்படுகிறது.
சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகள் மட்டுமின்றி தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 21 விமான நிலையங்களில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதைக் கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர முக்கிய துறைமுகங்களிலும் எல்லைப் பகுதிகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,310-ஆக உயர்ந்துள்ளது. 48,206 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தகவல்: பிஐபி