20 இந்திய விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை!
இந்தியா வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் தெர்மல் சோதனை 20 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என கண்டறிய, இந்தியா வரும் பயணிகளிடம் மேற்கொள்ளப்படும் 'தெர்மல் சோதனை' 20 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.
பரிசோதனை மாதிரிகளை சோதிக்க, பூனேவில் உள்ள என்.ஐ.வி மையம் தவிர, மேலும் நான்கு ஆய்வுக்கூடங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், இது பத்தாக அதிகரிகப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த தகவலை அமைச்சர் டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். 2014ல் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக, எபோலா வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுத்தோம். இப்போதும் அதே போல அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது வரை எந்த ஒரு நபரும் பாதிக்கப்படவில்லை,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது, தில்லி, கொல்கத்தா, சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கொச்சி ஆகிய 7 விமான நிலையங்களில், கொரோனா வைரசுக்கான தெர்மல் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 35,000 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்,” என்றும் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து இந்தியர்களை நாட்டுக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம், அந்நாட்டு அரசுடன் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாவௌம் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் சீனாவுக்கு சென்று வந்தவர்கள், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
சீனாவுக்குச் சென்று வந்த மூன்று பயணிகள், ஆர்.எம்.எல் மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் உலக நாடுகளுக்கு பரவலாம் எனும் அச்சத்திற்கு நடுவே இந்தியாவின் தயார் நிலை குறித்து, பிரதமர் அலுவலகம் ஆய்வு நடத்தியுள்ளது.
சீனா செல்ல இருப்பவர்கள் அல்லது சீனாவில் இருந்து வருபவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பட்டியலையும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனாவில் இருக்கும் இந்தியர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு உள்ளானால், தங்கள் வாயை நன்றாக மூடிக்கொண்டு உடனடியாக மருத்துவ உதவி பெற்று, இந்திய வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்