உயிர்க் கொல்லி ‘கொரோனா வைரஸ்’ உஷாராய் இருக்க என்ன செய்ய வேண்டும்?
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
தவறு செய்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நாட்டாமை பஞ்சாயத்துகளை பார்த்திருக்கிறோம், வைரஸ் தொற்றால் சீனாவிலுள்ள முக்கிய நகரமே மக்கள் தொடர்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நோயை கட்டுப்படுத்துவதற்காக பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதோடு விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. உணவகங்களும் இயங்காததால் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 2000ம் ஆண்டு உயிர்பயத்தை காட்டிய சார்ஸ் வைரஸ் குடும்ப வகையைச் சார்ந்ததாக இந்த கொரோனா வைரஸ் கருதப்படுகிறது. மத்தியச் சீனாவின் ஹுபே மாகாணத்தின் தலைநகரான உஹான் மற்றும் ஷென்சென் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இருக்கிறது.
உஹானில் உள்ள கடல் உணவு மற்றும் உயிருள்ள விலங்கு சந்தையில் இருந்து இந்த வைரஸானது பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வைரஸ் தாக்கிய 5 நாட்களில் மனித உயிரை பலிவாங்கும் கொடிய தொற்றுநோய் இது. கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் அதற்குள் கொரோனா எத்தனை உயிரை பலி வாங்கப் போகிறது என்று தெரியவில்லை. தற்போது வரை சீனாவில் 40 உயிர்களை கொரோனா வைரஸ் பரித்துள்ளதாகத் தெரிகிறது. சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ் ஆசிய நாடுகள், ஐரோப்பா, ஐக்கிய நாடுகள் வரை பரவி விட்டது. உலகம் முழுவதும் சுமார் 1500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜலதோசம் தான் முதல் அறிகுறி. சளி, இருமல், தும்மலில் இருந்து தொடங்கி தீவிர காய்ச்சலாக மாறி 5 நாட்களுக்குள்ளாக உயிரைப் பறித்துவிடும் கொடூரன் கொரோனா.
நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றவர்கள் தொடுவதன் மூலம் இந்த நோயானது எளிதில் பரவுகிறது. கொரோனா வைரஸ் மூக்கு வழியாக உள்ளேச் சென்று முதலில் சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தி, உடலினுள் புகுந்ததும் செல்களை அழித்து பன்மடங்காக பரவிவிடும். 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் மனித உடலில் வீரியம் பெற்று உள்உறுப்புகளின் செயல்பாடுகளை மங்கச் செய்து 3 அல்லது 4 நாட்களிலேயே அபாய நிலைக்கு தள்ளிவிடும்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள்: மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த் தொற்றுகளைப் போலவே, கொரோனா அறிகுறியும் ஒத்திருக்கின்றன, எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமாகிறது. இருமல் மற்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை அடையாளம் காண உடனடியாக ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அதி தீவிர நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க உஹான் நகர மக்கள் உடலை முழுவதும் மூடிய உடைகள் மற்றும் முகமூடி அணிந்து கொண்டே வெளியில் செல்கின்றனர். நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக உஹான் உள்ளிட்ட 13 நகரங்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மருத்துவமனைகளில் ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் முழு பாதுகாப்புடனேயே சிகிச்சையளித்து வருகின்றனர்.
சீனாவில் இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். உஹானில் தங்கி படித்து வரும் இவர்கள் தங்களை எப்படியாவது இந்தியா அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன்ர். ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பயம் மற்றொரு பக்கம் உணவு கிடைக்கவில்லை என்று அல்லல்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தங்கள் நாட்டிற்குள் நுழைந்து விடாமல் இருக்க அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் விமான நிலையங்களில் சிறப்புப் பரிசோதனைகளை செய்யத் தொடங்கியுள்ளன.
சீனாவில் இருந்து இந்தியாவிற்கு 20,000 பேர் பயணித்து வந்திருக்கின்றனர். கேரளாவிற்கு வந்த 80 பேரில் 73 பேருக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை, எஞ்சிய 11 பேருக்கு லேசான சளி மற்றும் காய்ச்சல் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர்கள் தனிப்பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். மேலும் மும்பை மருத்துவமனையில் 2 பேரும் பெங்களூரு, ஹைதராபாத்தில் தலா ஒருவரும் தனி கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. சளி, தும்மல், இருமலால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். தற்போது கொரோனா வைரஸிற்கு நிமோனியா காய்ச்சலுக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸானது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே அசைவ உணவு மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்த பின்னர் உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சளி, இருமலுக்கான சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் உயிருள்ள விலங்குகளின் சந்தை மற்றும் மாமிசப் பொருட்களை கையாளாமல் இருப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். உடல்நலமில்லை என்று தோன்றினால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாய் மற்றும் மூக்கை முகமூடி அணிந்து மறைத்து தும்மவோ இருமவோ வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களில் இருக்கும் விஷக்கிருமிகளை நீக்க நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.