வர்தா; வெள்ளம்; கஜா; இப்போ கொரோனா: 1500 பேர் படையுடன் போரிடும் ‘கொரோனா வாரியர்’ ஹரி கிருஷ்ணன்!
தமிழக அரசு வார் ரூம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் வார் ரூம் தொடங்கி, கொரோனா பாதிப்பு தெரிந்ததுமுதல் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பும் வரை, ஓருவேளை அவர் உயிரிழந்தால் இறுதிச் சடங்கு வரை அனைத்தையும் செய்ய 12 குழுக்களை அமைத்து பணிபுரிந்து வருகிறோம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன்.
கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸார், தூய்மைப் பணியாளர்கள் போன்றோர் அரசுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சத்தமேயில்லாமல் ஓர் தன்னார்வலர் படையும் கொரோனாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் முழுவீச்சில் போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு வார் ரூம் தொடங்குவதற்கு முன்பே நாங்கள் வார் ரூம் தொடங்கி, கொரோனா பாதிப்பு தெரிந்தது முதல் பாதிக்கப்பட்டவர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பும் வரை, ஓருவேளை அவர் உயிரிழந்தால் இறுதிச் சடங்கு வரை என அனைத்தையும் மேற்கொள்ள 12 குழுக்களை அமைத்து பணிபுரிந்து வருகிறோம், என்கிறார் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் ஹரிகிருஷ்ணன்.
MBA, MSW படித்துள்ள ஹரி கிருஷ்ணன், பிசினஸ் பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் கன்சல்டன்டாக பணியாற்றி வருகிறார். ஆனால் 2016ஆம் ஆண்டு முதல் சமூக செயற்பாட்டாளராக சேவை புரிந்து வருகிறார். இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்தபோது,
நான் தொடக்கத்தில் 2016ஆம் ஆண்டு சமூக சேவையில் காலடி எடுத்து வைத்தபோது, நாளிதழ்களில் வரும் எனது புகைப்படங்கள் மற்றும் புகழுக்காகச் செய்து வந்தேன். இதனால், விழிப்புணர்வு நடைப் பயணங்கள், தூய்மைப்படுத்தும் பிரசாரங்கள் போன்றவற்றில் பங்கேற்று வந்தேன், ஆனால் நாளடைவில் என்னை அறியாமலேயே எனது குறிக்கோள் அடித்தட்டு மக்களின் நலன் மற்றும் அவர்களின் மேம்பாடு குறித்து பயணிக்கத் தொடங்கிவிட்டது.
இதையடுத்து, வர்தா புயல் (2016), கேரள வெள்ளம் (2018), மற்றும் கஜா புயல் (2018) போன்ற பேரிடர் காலங்களில் நான் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன். இவை எனக்கு சமூக சேவையின் மீது ஓர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை நான் செய்யும் சேவைகளுக்கான ஒவ்வொரு பைசாவும் எனது சொந்த பணமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறேன் என்கிறார்.
நாளடைவில் முழுநேர சமூக செயல்பாடுகளில் இறங்கிவிட்ட ஹரி, இதுவரை சமூக சேவைகளுக்கென யாரிடமும் 1 ரூபாய் கூட பெற்றதில்லையாம். தனது சுயசம்பாதியத்தை மட்டுமே செலவு செய்து வருகிறார். யாராவது பணம் கொடுக்க முன் வந்தாலும், அவர்களையே அவர்களது பணத்தில் அச்சேவைப் பணியை செய்யுமாறு பணிந்து விடுவாராம். இதன்மூலம் அவர்களுக்கும் ஓர் திருப்தி, ஓர் ஆர்வம் ஏற்பட்டு அவர்களும் தன்னார்வலர்களாக களமிறங்கி விடுகின்றனர்.
இதன் மூலம் தன்னார்வலர் படையைப் பெருக்கி, சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது இவரோடு இணைந்து சுமார் 1500 தன்னார்வலர்கள் தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வருகின்றனர். இதனை 10 ஆயிரமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன் என்கிறார் இவர்.
அரசு, கொரோனா வார் ரூம் தொடங்குவதற்கு முன்பே, ஹரிகிருஷ்ணன் ஓர் வார் ரூம் தொடங்கி, கொரோனா தொற்றாளர்களுக்கு அறிவுரை வழங்க குழு, மருத்துவமனை, படுக்கை இருப்பு குறித்து தெரிவிக்க ஓர் குழு, தனிமைப் படுத்தியவர்களுக்கு உணவு வழங்க குழு, வீடற்றவர்களுக்கு சேவை செய்ய குழு, ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு உதவ ஓர் குழு, ரத்த தானத்துக்கு குழு என சுமார் 12 குழுக்களை உருவாக்கி, அவர்கள் மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமானவர்களுக்கு உதவி செய்துள்ளார்.
கோரோனா சேவைப் பணிகள் குறித்த தனது அனுபவங்களாக அவர் தெரிவித்ததாவது, மார்ச் 27, 2020 அன்று சென்னையில் உள்ள ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து எனக்கு மருந்துகள் தேவை என ஓர் கோரிக்கை வந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோதுதான் அங்கு மருந்து மட்டுமன்றி மளிகை சாமான்கள் உள்பட பல்வேறு தேவைகள் இருப்பதை அறிந்தேன். இதேபோன்ற இல்லங்களின் பட்டியலைத் தயார் செய்து அவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கத் தொடங்கினேன்.
அப்போது பார்வையற்ற ஓர் தம்பதி தங்களது கஷ்டமான வாழ்வாதாரம் குறித்தும், தங்களைப் போன்றோர் படும் துயரங்கள் குறித்தும் எனக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து சுமார் 1500 பார்வையற்றவர்களின் பட்டயலைப் பெற்ற நான், அதில் 200 பேருக்கு மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க திட்டமிட்டேன். இதற்காக தினசரி காலை 7 மணிக்கு கிளம்பும் நான் நாளொன்றுக்கு 180 கீ.மீட்டர் வரை பயணிப்பேன்.
அப்போது ஓர் நாள் ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் இருந்த அம்பத்தூர் போலீஸார் எனது பயணத்துக்குத் தடை விடுத்து, எனது வாகனத்தை பறிமுதல் செய்தனர். நன்கொடை என்ற பெயரில் பணமோசடி செய்யும் கூட்டத்தில் ஓருவனா என கேலி செய்தனர். இதனால் நான் மிகுந்த வேதனைக்கு ஆளானேன்.
இதுகுறித்து நான் தமிழக முதல்வருக்கும், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு, எனது சேவைப் பணி குறித்த ஆதாரங்களை இணைத்து கடிதங்களை அனுப்பினேன். அடுத்த இரு தினங்களில் எனக்கு சென்னை மாநகராட்சியில் இருந்து அழைப்பு வந்தது.
எனது சேவையைப் பார்த்து சென்னை மாநகராட்சி எனக்கு சென்னை தன்னார்வலர்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பணி வழங்கி சுமார் 15 மண்டலங்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கியது. அரசு ஓர் தனி மனிதனின் சேவையைப் பாராட்டி இத்தகைய பொறுப்பை வழங்கியது இதுவே முதல் முறை. தற்போதும் அதே பணியை மேற்கொள்ள மாநகராட்சி எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அன்றுமுதல் நான் பகுதி வாரியாக தன்னார்வலர்களைப் பிரித்து அங்குள்ள வீடற்றவர்கள், முதியவர்கள், குழந்தைகளைக் கணடறிந்து அவர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மருத்துவத் தேவைகள் போன்றவற்றை, அவர்களில் தேவை இருப்பவர்களுக்கு கோரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 10 ஆயிரத்து 300 வீடற்றவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி வருகிறோம். இந்த கோரோனா சேவைப் பணியில் 450 நாளைக் கடந்து பணியாற்றி வருகிறேன், என்கிறார் ஹரி கிருஷ்ணன்.
கடந்த ஆண்டு மட்டும் கோரோனா சேவைப் பணிக்காக தனது சொந்த பணத்தில் ரூ. 6 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார் ஹரிகிருஷ்ணன். இதில், அவர் தனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த தொகையும் அடக்கம். நிகழாண்டில் தற்போது வரை சுமார் ஒன்றரை லட்சம் வரை செலவு செய்திருப்பதாக சொல்லும் இவர்,
பணம் சம்பாதிப்பது எளிதானதுதான். ஆனால் மக்களுக்குத் தேவையுள்ள நேரத்தில் அதனை செலவு செய்வதுதான் மிக முக்கியமானது என்கிறார்.
நாங்கள் எங்கள் தன்னார்வலர்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் பணிபுரிய வைக்கிறோம். கொரோனா தொற்றாளர்களின் தேவைகள், மருத்துவமனை விவரங்கள், ஆக்ஸிஜன் படுக்கை விவரங்கள் மற்றும் அவர்களின் சந்தேகங்களை எங்களின் ஆன்லைன் தன்னார்வலர்கள் பார்த்துக் கொள்ள, ஆப்லைனில் களப் பணியாற்றும் தன்னார்வலர்கள் மருத்துவமனையில் உள்ள தொற்று பாதித்தவர்களுக்கு, வீட்டுத் தனிமையில் உள்ளவர்களுக்கு, சாலையோர மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர், என்கிறார்.
நான் இதுவரை ஏராளமான மாநில, தேசிய, சர்வதேச அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆனால் அதில் ஓன்று கூட நான் விண்ணப்பித்தது கிடையாது. யாரேனும் என் நண்பர்கள் அல்லது நலம் விரும்பிகள் விண்ணப்பித்து, அதில்தான் எனக்கு விருது கிடைத்துள்ளது.
ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான குடும்பங்களை நான் வென்றுள்ளேன். அவர்கள் குடும்பத்தில் என்னை ஒருவனாக கருதுகின்றனர். சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதுவே நான் வாழ்க்கையில் பெற்ற மிகப் பெரிய விருதாக கருதுகிறேன் என்கிறார்.
மேலும், எதிர்காலத்தில் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை தமிழக அளவில் 10 ஆயிரமாக உயர்த்தி, ஒவ்வொரு அரசு மருத்துவமனைக்கும், ஓர் தன்னார்வலரை நியமித்து கொரோனா தொற்றாளர்களின் விவரங்களை பெறவும், மற்ற மருத்துவமனை தகவல்களை பெறவும் தற்போது திட்டமிட்டு வருகிறார்.
இதற்காக தற்போது தமிழக அரசை தொடர்பு கொள்ள முயன்றுவரும் ஹரிகிருஷ்ணன், தற்போது சிறிய அளிவில் மேற்கொண்டு வரும் திட்டத்தை அனைவரும் ஓத்துழைத்தால் குறிப்பாக தமிழக அரசு உதவினால் 10 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் ஓருங்கிணைத்து 6 மாதத்தில் செய்ய வேண்டிய பணிகளை ஒரே மாதத்தில் முடித்து, விரைவில் தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றலாம் என தனது ஆதங்கத்தையும், தனது திட்டத்தையும் தெரிவிக்கிறார்.
ஹரிகிருஷ்ணனோடு இணைந்து தன்னார்வலர்களாகப் பணிபுரிய விரும்புவோர் அவரது செல்போன் எண்ணை (97911 26662) அழைத்தோ, அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தன்னார்வலர்களாக பணிபுரியலாம் எனத் தெரிவித்துள்ளார்.