30 பங்களாக்களை கொரானா சிகிச்சைக்கு வழங்கிய தொழிலதிபர்: ரூ.50 லட்சத்துக்கு அரிசி வழங்கிய கங்குலி!
கொரானாவால் மனிதர்கள் விலகியிருந்தாலும், மனிதநேயம் நம்மை பிணைத்துக் கொண்டேதான் இருக்கும் என்பதையே இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானாவுக்கு தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைக்கு நோய் தொற்றைத் தடுக்க மக்களைத் தனிமைப்படுத்துதல் ஓன்றே வழி. இதனால் இந்தியாவில் ஏப். 15ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவை பிறப்பித்து நோய் தொற்றைத் தடுக்க இந்திய அரசு திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.
ஊரடங்கு உத்தரவையடுத்து மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆனால் சாலைகளே வீடுகளாக வசிப்போர்களுக்கும் உணவு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு அரசுடன் கைகோர்த்துக் கொண்டு மக்கள் நலப் பணிகளான உணவு, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கொரானா விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தமிழகம் உள்பட பல்வேறு மாநில எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் அவசரகால நிதி போன்றவற்றை கொரானா விழிப்புணர்வு பணிக்காக செலவழித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளுக்குநாள் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரானா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிக்காக மேற்குவங்கத்தைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர், கொரோனா சிகிச்சைப் பணிகளுக்காக தனது 30 சொகுசு பங்களாக்களை அரசு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா. இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈட்டுபட்டு வரும் முன்னணி தொழிலதிபர் ஆவார். இவருக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்கள் கொல்கத்தாவில் உள்ளன.
இவர் தனக்குச் சொந்தமான 'தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள 30 பங்களாக்களை, கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவர்களை தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்படுபவதற்காக தங்க வைக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவு வசதிகளையும், அந்த பங்களாக்களில் தூய்மைப் பணிகளையும் அவரே மேற்கொண்டு செய்து தருவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
கொரானா ஓழிப்பு நடவடிக்கையில் தனது சமூகப் பங்களிப்பாக இதனை செயல்படுத்த முன்வந்த தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியாவின் கோரிக்கையை பரிசீலித்த மேற்குவங்க அரசு, அவரின் பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது,
இவரைப் போலவே கொல்கத்தாவைச் சேர்ந்தவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, தனது பங்களிப்பாக வசிக்க வீடுகள் இன்றி, சாலையோரத்தில் வசித்து வரும் நலிவடைந்த மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரசியை வழங்க முடிவெடுத்துள்ளார்.
வளர்ந்த நாடுகளே கொரானாவை கட்டுப்படுத்தத் தள்ளாடும் வேளையில், வளரும் நாடான இந்தியா கொரானாவை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், அதற்கு நிறைய உதவிகள் தேவைப்படுகின்றன.
21 நாள் மக்கள் ஊரடங்கை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க, வீடற்ற, சாலையோர வாசிகளோ அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்படும் என்பதால், வீடுகள் இன்றி மேற்குவங்க அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை வழங்க பி.சி.சி.ஐ., தலைவர் சவுரவ் கங்குலி திட்டமிட்டுள்ளதாகவும், இப்பணியை விரைவில் ஓர் தனியார் அமைப்பிடம் அவர் ஓப்படைப்பார் என்றும் மேற்குவங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைபோல, சில தினங்களுக்கு முன் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ரிசார்ட்டுகளை அரசு கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்திக் கொள்ள அறிவித்தார். நடிகரும் அரசியல்வாதியுமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்குப் பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்,” என்று பதிவிட்டார்.
இப்படி தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக நல அறக்கட்டளைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இத்தகையோருக்கு தேடிச் சென்று உணவு, பாதுகாப்பு முகக் கவசம் உள்ளிட்டவைகளை அளித்து வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
கொரானாவால் மனிதர்கள் விலகியிருந்தாலும், மனிதநேயம் நம்மை பிணைத்துக் கொண்டேதான் இருக்கும் என்பதையே இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.