மக்கள் கூடும் இடங்களில் தொற்றுக் காய்ச்சல் உள்ளவர்களைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம்!
நிறுவனங்கள், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில் காய்ச்சல் இருப்பவர்களைக் கண்காணிக்கவும் அவர்களது தொடர்புகளைத் திறம்பட அறியவும் இந்த தெர்மல் ஸ்க்ரீனிங் முறை பயன்படும்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதும் அவர்களது தொடர்புகளைக் கண்டறிவதும் சவாலாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நடவடிக்கையானது படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதால் மக்கள் தங்களது பணிகளைத் தொடர இருக்கும் சூழலில் இந்தத் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
எனவே நோய்பரவல் அதிகரிக்காமல் தடுக்க மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நோய்தொற்றின் அறிகுறி இருப்பவர்களைக் கண்டறிவதும் அவர்களது தொடர்புகளைக் கண்டறிவதும் அவசியமாகிறது. தற்போது பின்பற்றப்படும் ஸ்கிரீனிங் முறைகளில் நோய் தொற்று ஏற்பட சாத்தியமிருப்பவர்களைக் கண்டறிவது கடினமாக உள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கோவிட்-19 பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கக்கூடியவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த உதவுகிறது ThirAI.
மக்கள் அதிகளவில் காணப்படும் இடங்களில் காய்ச்சல் இருப்பவர்களைக் கண்காணிக்கவும் அவர்களது தொடர்புகளைத் திறம்பட அறியவும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
காய்ச்சல் அறிகுறி கொண்ட நோய்தொற்றிற்கு இந்தத் தீர்வுகள் சிறப்பாக பலனளிக்கும். அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஷாப்பிங் மால், சில்லறை வர்த்தகக் கடைகள், சுரங்கப்பாதைகள் என மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு இந்தத் தீர்வுகள் உகந்ததாக இருக்கும்.
ThirAI செய்வது என்ன?
கோவையைச் சேர்ந்த Neunets technologies என்ற நிறுவனம் கோவிட்-19 பரவலைத் தடுக்க உருவாக்கியதே இந்த ஸ்க்ரீனிங் தொழில்நுட்பம். நிறுவனர்கள் ஜெய் கீர்த்தி, அருண் குலசேகரன் மற்றும் அர்விந்த் சுபரமணியம் அடங்கிய குழு தற்போதைய சூழ்நிலைக்கான தீர்வை நோக்கி கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் நுட்பத்தை உருவாக்கியதே ThirAI.
ThirAI ஆண்ட்ராய்ட் சார்ந்த கேமரா மற்றும் செயலிகள், சிசிடிவி கேமராவிற்கு இணக்கமான வலை பயன்பாடுகள், க்ளௌட் சார்ந்த தீர்வுகள் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
நோய் அறிகுறி இருப்பவர்களின் தொடர்புகளைக் கண்டறிய உதவுவதுடன் சட்டரீதியான இணக்க அறிக்கைகளை நிர்வகிக்கும் அம்சமும் கொண்டுள்ளது.
மொபைல் சார்ந்த தெர்மல் கேமராவுடன் ThirAI இணைக்கப்படுகிறது. தற்சமயம் Flir மற்றும் Seek சார்ந்த ஆண்ட்ராய்ட் ப்ளக்-இன்களில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் மொபைலில் ப்ளக் செய்யக்கூடிய தெர்மல் கேமராக்களுடன் இணைக்கும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி மற்றும் ஐபி சார்ந்த தெர்மல் கேமராக்களுடன் இணைப்பதற்காக டெஸ்க்டாப் சார்ந்த வெர்ஷன்களையும் இக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர்.
இதில் செயற்கை நுண்ணறிவு கொண்டு முக அடையாளம் காணப்பட்டு வெப்பநிலையும் கண்காணிக்கப்படும். உடலில் உள்ள காய்ச்சல் அளவை நிகழ்நேரத்தில் தானியங்கு முறையில் இது கண்காணிக்கும். உடலில் வெப்பம் இருந்தால் எச்சரிக்கை விடப்படும். அதே போல் இது சிசிடிவி உடன் இணைக்கப்படுவதால், காய்ச்சல் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. இடத்தைக் கண்காணிக்கும் வசதி இருப்பதால் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அந்த குறிப்பிட்ட இடத்தைத் தனிமைப்படுத்துவது சாத்தியமாகிறது.
வழக்கமாக சந்தையில் கிடைக்கும் தெர்மல் கேமராக்களில் ஒட்டுமொத்த ஃப்ரேம் அல்லது திரையின் குறிப்பிட்ட புள்ளிகளில் வெப்பநிலையைக் கண்டறிய முடியும். ThirAI செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்குவதால் ஒவ்வொரு ஃப்ரேமிலும் முகங்களைக் அடையாளம் கண்டு குறிப்பிட்ட இடத்தில் வெப்பநிலையை அளவிடமுடியும்.
அதுமட்டுமின்றி அந்த குறிப்பிட்ட நபர் எங்கு சென்றார் என்பதையும் கடந்த 30 நாட்களில் அவரைக் கடந்து சென்றவர்களையும் கண்டறிய இது உதவும்.
யார் இதை பயன்படுத்தலாம்?
தற்போதைய சூழலில் மக்கள் கூடும் இடத்தில் ஸ்க்ரீனிங் செய்து கொரோனா அறிகுறிகள் உள்ளதா என கண்காணிக்க தொழில்நுட்பத் தீர்வினை பலர் எதிர்நோக்கியுள்ளனர். அதனால் தேவைப்படுவோர் இதை பயன்படுத்தலாம்.
- 25-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள்
- நாள் முழுவதும் அதிக தொழிலாளர்கள் வந்து செல்லும் நிறுவனங்கள்/தொழிற்சாலைகள்
- பணிச்சூழலில் நோய்தொற்று பாதிப்பு இருக்ககூடியவர்களை தனிமைப்படுத்துவதில் அக்கறை காட்டும் நிறுவனங்கள்
எங்கு பயன்படுத்தலாம்?
ThirI பல பொது இடங்கள், நிறுவனங்களில் பயன்படுத்தலாம். குறிப்பாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு திறக்கப்படும் அனைத்து இடங்களிலும் இதை நிறுவினால், அங்கு வருபவர்களின் வெப்ப அளவை கண்காணித்து தனிமைப்படுத்த முடியும்.
- அலுவலகம் மற்றும் வணிக வளாகங்கள்
- அபார்ட்மெண்ட்ஸ் மற்றும் குடியிருப்பு வளாகங்கள்
- விமான நிலையங்கள்
- ரயில்வே நிலையம், பஸ் நிலையங்கள்
- மால்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள்
- சுரங்கப்பாதை, பொது இடங்கள்
தற்போது தமிழகத்தில் 3 மாவட்டங்களில்; கோவை, கரூர் மற்றும் நாமக்கலில் பைலட் முறையில் செயல்பட இவர்களுக்கு அரசிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது. அங்கு
வருங்காலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உடல் வெப்பத்தைத் தொடர்ந்து கண்காணித்து கட்டாயமாகப் பதிவு செய்துவரவேண்டும் என்று அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆவணங்கள் முறையாக நிர்வகிக்கப்பட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் போது சமர்ப்பிக்கப்படவேண்டும். இதனால் இதுபோன்ற தேவைகளுக்கு ThirAI தீர்வுகள் சிறந்த பலனளிக்கும்.
கட்டுரையாளர்: ஸ்ரீவித்யா