கொரோனா வைரஸ் தாக்கம்: இந்தியாவில் டிவி விலை 10% உயர வாய்ப்பு!
டிவி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பேனல்கள் உற்பத்தி சீனாவில் பாதிக்கப்பட்டிருப்பதால் டிவி விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, டிவிகளுக்கான பேனல்கள் அந்நாட்டில் இருந்து வருவது பாதிக்கப்பட்டிருப்பதால், டிவி விலை 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
டிவி தயாரிப்பில் டிவி பேனல் முக்கியப் பாகமாக அமைகிறது. இதன் விலை டிவி விலையில் 60 சதவீதமாகவும் அமைகிறது. இவை பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
நிறுவனங்கள் டிவி பேனல்களை சீன புத்தாண்டை முன்னிட்டு கையிருப்பு வைத்திருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கம், இதன் தயாரிப்பை பாதித்துள்ளது. இதன் காரணமாக, டிவி பேனல்கள் விலை 20 சதவீதம் உயர்ந்திருப்பதாக இத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக ஒரு காலாண்டு ஆகும் என்றும், இதன் காரணமாக விலை உயரலாம் என்றும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
"2020 மார்ச் மாத வாக்கில், சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உதிரிபாகங்கள் தட்டுப்பாடு மற்றும் டிவி பேனல்கள் விலை உயர்வினால், டிவி விலை 10 சதவீதம் உயரலாம்’ என்று இந்தியாவில் தாம்சன் டிவிகளை விற்பனை செய்யும் பிரத்யேக டீலரான எஸ்.பி.பி.எல் சி.இ.ஓ அவ்னீத் சிங் மார்வா கூறினார்.
தற்போதைய சூழல் காரணமாக, 30 முதல் 50 சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதே போன்ற கருத்தை, ஹயர் இந்தியா தலைவர் எரிக் பிரகன்சா தெரிவிக்கிறார்.
“மார்ச் மாதக் காலத்தில் டிவி விலை அதிகரிக்கும். இதே போல ஏசி மற்றும் பிரிட்ஜ் விலையும் உயரும். டீப் பிரிசர்கள் விலை ஏற்கனவே 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது,” என்கிறார் அவர்.
பெரும்பாலான நிறுவனங்கள் ஏசி மற்றும் பிரிட்ஜ்களுக்கான கம்பிரஸர்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன.
டிவி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஓபன் செல் பேனல்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தைவான், தாய்லாந்து மற்றும் வியட்னாமில் இருந்தும் தருவிக்கப்பட்டு இந்தியாவில் அசம்பிள் செய்யப்படுகின்றன.
பானசோனிக் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர், சி.இ.ஓ மனிஷ் சர்மாவும், டிவி விலை அதிகரிக்கும் என்கிறார்.
“சீனாவில் பேனல் விலை அதிகரிக்கிறது. ஏப்ரல் முதல் சூழ்நிலைக்கு ஏற்ப பேனல்கள் விலை அப்படியே இருக்கலாம் அல்லது 3 முதல் 5 சதவீதம் அதிகரிக்கலாம்,” என்கிறார் அவர்.
ஆதாரம்: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்
-