அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா உள்ளதா? கண்டறிய உதவும் ஆப்!
கொரோனா வைரஸ் கண்காணிப்பிற்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஆப் எப்படி பயன்படுத்தலாம்? இதில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?
கொரோனா வைரஸ் கண்காணிப்பிற்காக மத்திய அரசு ஆரோக்கிய சேது (Aarogya Setu) என்கிற செயலியை உருவாக்கியுள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ‘ஆரோக்கிய சேது’ ஆப் ஆனது கொரோனா வைரஸ் பரவி வரும் இன்றைய இக்கட்டான சூழலில் முக்கிய சுகாதார சேவைகளுடன் பொதுமக்களை இணைக்கிறது.
“பொதுமக்களின் பங்களிப்பு மூலமாகவே நம்மால் கோவிட்-19 நோயை எதிர்த்துப் போராடமுடியும். இந்த செயலி இதை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாகும். ஆரோக்கிய சேது ஆப் மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குகிறது. இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள், சுய மதிப்பீடு டூல்கள், சூழலுக்கேற்ப ஆலோசனை ஆகியவை இதில் வழங்கப்படும்,” என்று அரசாங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆப் உங்களது மொபைலின் ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் அமைப்பைப் பயன்படுத்தி கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர் யாரேனும் உங்களிடமிருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் உங்களை எச்சரிக்கும். அந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள நோயாளிகளின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்ளும் விதம், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்த சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
ஆரோக்கிய சேது ஆங்கிலம், இந்தி உட்பட 11 மொழிகளில் கிடைக்கிறது. இந்தச் செயலியின் கட்டமைப்பு எளிதாக அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
ஆரம்பகட்டத்திலேயே இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது,” என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீங்கள் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு உங்கள் லொக்கேஷன் ஷேரிங் பகுதியை ‘Always’ என்று செட் செய்துகொள்ளவும். ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆன் செய்துகொள்ளவும். மிகவும் எளிமையாக முறையில் ஓடிபி சார்ந்த மொபைல் எண் பரிசோதனை மூலம் சைன்–இன் ஆகலாம்.
உங்கள் வயது, பாலினம், தொழில், பயணம் செய்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை நீங்கள் அளிக்கலாம்.
“உங்களது தரவுகள் இந்திய அரசாங்கத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ளப்படும். எந்த ஒரு தருணத்திலும் இந்த செயலியின் மூலம் உங்களது பெயரும் தொலைபேசி எண்ணும் மற்றவர்களுக்கு வெளியிடப்படாது,” என்று என்ஐசி உறுதியளித்துள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கட்டணமில்லா அரசாங்க ஹெல்ப்லைன்களும் இதில் வழங்கப்படும். இந்தச் செயலியில் உள்ள சாட் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். உங்களது அறிகுறிகளை வழங்கி உரையாடலைத் தொடங்கலாம். நீங்கள் பாதுகாப்பான நிலையில் இருக்கிறீர்களா அல்லது ஆபத்தான நிலையில் இருக்கிறீர்களா என்பதை மதிப்பிட இந்தச் செயலி உதவும்.
‘ஆரோக்கிய சேது’ ஒரு முழுமையான, ஊடாடும் வகையிலான செயலி. இந்த ஆப் பயனர்களை பொது சுகாதார ஆலோசகர்களுடன் இணைக்கிறது. அத்துடன் சுகாதார குறிப்புகள், செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாத செயல்கள் என பயனுள்ள தகவல்களை வழங்குகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோர் பட்டியலில் என்ஐசி,
“அரசாங்கத்தின், குறிப்பாக சுகாதாரத் துறையின் முயற்சிகளை முறையாக பயனர்களிடம் கொண்டு சேர்த்து கோவிட்-19 தொடர்புடைய ஆபத்துகள், சிறந்த நடைமுறைகள், நோய் தடுப்பு ஆலோசனைகள் போன்ற தகவல்களை வழங்குவதே இந்தச் செயலியின் நோக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளது.
“இது நோய்கள் இல்லாத ஆரோக்கியமான நாட்டை உருவாக்க பொது மற்றும் தனியார் துறைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார சேவை, இளம் சமூகத்தினரின் ஆற்றல் ஆகியவற்றை இணைக்கும் முயற்சியாகும். ஆரோக்கிய சேது மூலம் நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் நமக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாப்போம்,” என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் டவுன்லோட் செய்ய: Aarogya Setu
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா