மக்களுக்கு உதவிட மாஸ்க் தயாரிக்கும் சிறைக் கைதிகள்!
கொரோனா நோய் பரவலால் மாஸ்க் தட்டுப்பாடா? மக்களுக்கு உதவ கோவை மத்திய சிறைக்கைதிகள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்.
இந்தியாவில் கொரோனா நோய்ப்பரவல் 2வது கட்டத்தில் இருக்கிறது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவிட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் அவசரப் பணியில் இருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக மாஸ்க் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்படும் நிலை நிலவுகிறது. இதனைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தனியார் அமைப்புகள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியானது தொடங்கியுள்ளது.
சுய தனிமையில் இருப்பவர்கள் மட்டுமின்றி சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்களும் தங்களால் முயன்ற உதவியை இந்த நேரத்தில் மக்களுக்கு செய்ய முன் வந்துள்ளனர்.
இதன்படி கோவை மத்தியச் சிறையில் உள்ள கைதிகள் முகக்கவசங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறைக்கைதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சிறையில் தொழில் கூடங்கள் இருக்கின்றன. இங்கு தையல்கலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதன் மூலம் தையல் கற்றுக் கொண்டவர்களை வைத்து காவலர்கள் மற்றும் கைதிகளுக்கான உடைகளும் தைக்கப்படுகின்றன.
கொரோனாவால் தற்போது முகக்கவசத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் 20 கைதிகளைக் கொண்டு நாளொன்றிற்கு 2 ஆயிரம் அளவில் சுகாதாரமான முறையில் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன.
3 லேயர்கள் அடங்கிய ஒரு முறை பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் தனியார் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு மாஸ்க் தைக்கப்படுகிறது.
முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகள் ஆர்வத்துடன் இந்தப்பணியை செய்து வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய இந்த முகக்கவசங்கள் கோவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளன.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி