கொரோனா: N99 மாஸ்க், உடல் கவசம் தயாரித்துள்ள DRDO!
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள உதவும் வகையில் வெண்டிலேட்டர், மாஸ்க், உடல் கவசம் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு ஆய்வு அமைப்பு உருவாக்கியுள்ளது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாடு அமைப்பான டி.ஆர்.டி.ஓ ( DRDO) பல அடுக்கு மேம்பட்ட முகமுடி, உடல் கவசம் உள்ளிட்டவற்றை தயாரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக செய்திகள் வெளியாகத் துவங்கியதில் இருந்து, டி.ஆர்.டி.ஓ அமைப்பு அதன் பரவலை கவனித்து வருகிறது.
"மார்ச் முதல் வாரத்தில், இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான முடிவை எடுத்தது. அப்போது இந்தியாவில் 30 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். முக்கிய மருத்துவ உபகரணங்களை பெரிய அளவில் தயாரிப்பதற்கான வழிகளையும் டி.ஆர்.டி.ஓ யோசிக்கத்துவங்கியது,” என்கிறார் டி.ஆர்.டி.ஓ மூத்த அதிகாரி ஒருவர்.
இந்தத் தீவிர அணுகுமுறை காரணமாக, கொரோனாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தக்கூடிய நான்கு சாதனங்களை இந்த அமைப்பு வருவாக்கியுள்ளது.
கைகழுவ கிருமி நாசினி, வென்டிலேட்டர், என்99 (N99) மாஸ்க் மற்றும் உடல் கவசம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மார்ச் மூன்றாவது வார காலத்தில், சானிடைசர் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, தில்லி பகுதியில் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்பட்டது. ராணுவம், விமானப்படை மற்றும் ராணுவ மருத்துவ பிரிவுக்கு 4,000 லிட்டர் சானிடைசர் அனுப்பி வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 1,500 லி, நாடாளுமன்றத்துகு 3,00 லி, மற்ற பாதுகாப்பு அலுவலகங்களுக்கு 5,000 லி சானிடைசர் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், தில்லி காவல்துறைக்கும் சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது.
"கொரோனா வைரஸ் சுவாச செயல்பாடுகளை பாதிப்பதால், எதிர்கால தேவை மனதில் கொண்டு டிஆர்டிஓவின் எஸ்பிஎம்டி திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு வென்டிலேட்டர் கருவி உருவாக்கப்பட்டது. தற்போது, ஒரே கருவி மூலம் பல நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிக்கும் வகையிலான நுட்பத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு வார காலத்தில் இது சாத்தியமாகும்,” என அதிகாரி தெரிவித்தார்.
என் 99 மாஸ்க், இரண்டு நுண் அடுக்குகளுடன் 5 அடுக்குகள் கொண்டது. வைரசை தடுக்க இவை முக்கியம் என்றும் அதிகாரி தெரிவித்தார். அதே போல டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உடல் கவசம் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துணை பணியாளர்கள் பயன்படுத்துவதற்கான உடல் கவசமும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.
செய்தி: பிடிஐ | தமிழில்:சைபர்சிம்மன்