இந்தியாவில் முகக்கவசம், கையுறை, சானிடைசர் விற்பனை 3 மாதத்தில் 316% அதிகரிப்பு!
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் முகக்கவசங்கள், சானிடைசர், கையுறை விற்பனையோடு, ஆயுர்வேத மருந்துகளின் விற்பனையும் கூடியுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் முகக்கவசங்கள், சானிடைசர், கையுறை ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.
உள்ளூர் மற்றும் உலகச் சந்தையில் இத்தகைய பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால் இந்தியாவில் இந்தப் பொருட்களைத் தயாரிக்கும் பணியில் தயாரிப்புத் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் காரணமாக 2,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 80,000 பேர் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சீனா மட்டுமல்லாது மேலும் சில நாடுகளிலும் மக்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்துவதால் இதற்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளது.
அதிகளவிலான மக்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து தங்களைக் தற்காத்துக்கொள்ள மருந்து கடைகளுக்குச் சென்று N95 அல்லது சர்ஜிக்கல் முகக்கவசம் வாங்குகின்றனர். இதை உணர்ந்த ட்ரேட்இந்தியா.காம், பீ சேஃப், டெட்டால் போன்ற துறைசார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தயாரிப்பு அளவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய நகரங்களில் இந்தப் பொருட்களுக்கான தேவை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் மறுவிற்பனை செய்யும் நோக்கத்துடன் வாங்கப்படுகிறது. முகக்கவசம் தயாரிக்கும் இயந்திரத்திற்கான தேவையும் 250 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் இதுபற்றி தெரிந்து கொள்ள Nanoclean Global சிஇஒ ப்ரதீக் ஷர்மாவிடம் யுவர்ஸ்டோரி கேட்டபோது,
“முகக்கவசத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து எங்களுக்கு ஆர்டர்கள் குவிகின்றன. அதனால் எங்கள் தயாரிப்பை அதிகரித்துள்ளோம். தற்போது ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முக மாஸ்குகள் விற்பனை செய்கிறோம்,” என்றார்.
உபகர்மா ஆயுர்வேதா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் விஷால் கௌசிக் கூறும்போது,
“கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது. இதன் ஆபத்தை உணர்ந்து நாங்கள் இதை எச்சரிக்கையுடன் அணுகுகிறோம். சிறந்த பலனளிக்கக்கூடிய ஆயுர்வேத மூலிகைகளைத் தொடர்ந்து உட்கொண்டால் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அச்சுறுத்தல் மிகுந்த பெரும்பாலான கொடிய தொற்றுநோய்களின் பிடியில் இருந்து தப்பிக்க இந்த நோய் எதிர்ப்பு சக்தி அவசியமானது.
“கடந்த இரண்டு மாதங்களில் மூலிகை மருந்துகளான ஷிலாஜித், அஷ்வகந்தா போன்றவற்றிகான தேவை 15% அதிகரித்துள்ளது. தற்சமயம் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
உள்நாட்டு சிகிச்சை முறைகளில் மக்கள் கவனம் செலுத்துவதால் ஆயுர்வேதத்திற்கு முக்கியத்தும் அளிக்கத் தொடங்கியுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள துளசி, சீந்தல் போன்ற ஆயுர்வேத மூலிகைகளை பரிந்துரை செய்கிறோம்,” என்றார்.
இதனிடயே இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கியுள்ளதால், அண்மையில் இந்திய அரசாங்கம் முகக்கவசத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. இதன் மூலம் இந்திய மக்களின் தேவைக்கு முக கவசம் எளிதில் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.