கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்: சேலம் மண்டலத்தில் தொடங்கியது பணி!
கொரோனா நோய் பரவல் இந்தியாவில் 3ம் கட்டத்தில் உள்ள நிலையில் சிகிச்சையில் தொய்வு ஏற்படாத வகையில் ரயில் பெட்டிகள் தனி வார்டுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொத்து கொத்தாக உயிர் பலி கொடுத்துக் கொண்டிருக்கும் உலக நாடுகளை கருத்தில் கொண்டு இந்தியாவில் கொரோனா தனது ஆட்டத்தை தொடங்கும் முன்னர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊடரங்கு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க தமிழக அரசு அறிவித்ததன் பேரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். இதையும் மீறி கோவிட்- 19 தாக்குதலுக்கானவர்கள், அறிகுறிகள் இருந்து நோய் உறுதிசெய்யப்பட்ட 62 பேருக்கு தமிழகம் முழுவதிலும் மருத்துவமனைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிவார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்தியாவில் கொரோனா நோய் பரவல் சமூகத் தொற்றான 3வது கட்டத்தில் இருக்கிறது கடந்த 2 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைபடுத்தி வைக்க தனி வார்டுகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் 25 சதவிகித வார்டுகள் கொரோனா வார்டுகளாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவல் இடம்பெயர்தல் மூலம் அதிகம் நடக்கும் என்பதால் இந்திய ரயில்வே வரலாற்றிலேயே முதல்முறையாக நாடு முழுவதும் ரயில் ஓட்டமானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் நாட்டு மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் முன்னே வருவது ரயில்வே துறை தான் என்பதை இந்த எமெர்ஜென்சி காலத்திலும் நிரூபித்துள்ளது.
கழிவறையுடன் கூடிய ரயில் பெட்டிகளை நன்கு சுத்தப்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்தார்.
ஐ.சி.யூ வார்டு மாதிரியான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு டெல்லியில் மாதிரி ரயில் பெட்டியானது தனி வார்டாக மாற்றப்பட்டது. ஏ.சி பெட்டிகளில் கிருமி நாசினி போக்குவதில் சிரமம் இருக்கும் என்பதால் சாதாரண பெட்டிகளே தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. நோயாளிகளுக்குத் தனி வார்டுகள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவர்களுக்கு தனி இடம் என மருத்துவமனை போன்றே திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளன ரயில் பெட்டிகள்.
மருத்துவமனைகள் இல்லாத இடங்களில் இந்த ரயில் பெட்டிகள் உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் தேவைக்கு ஏற்ப ரயில் பெட்டிகளை கொரோனா தனிவார்டுகளாக மாற்றப்பட உள்ளன. இதே போன்று சென்னை ஐ.சி.எஃபில் வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் மின்சார மிதவேக ரயிலை உருவாக்கிய ஐ.சி.எஃப்பிற்கு வென்டிலேட்டர்களை உருவாக்குவது எளிது என்றாலும், அதை பயன்பாட்டு அளவில் மேம்படுத்துவதில் சவால்கள் இருக்கின்ற போதும் அதனை ஏற்று வென்டிலேட்டர்கள் உற்பத்தியில் ஐ.சி.எஃப் ஈடுபட்டுள்ளது.

ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் திட்டம் இறுதி செய்யப்பட்ட நிலையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கோவை பணிமனையில் மூன்று ரயில்களின் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணியை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் மூன்று பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.