கோவிட்-19 சமயத்தில் கர்ப்பிணிகள் பாதுகாப்பும்; பராமரிப்பும்
கொரோனா சமயத்தில் கர்ப்பிணிப்பெண்களை அங்கன்வாடி பணியாளர்கள் பாதுகாத்து காப்பாற்றுவது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் பலரும் பலவிதமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வைரஸ் தொற்றுப் பரவலாலும் அதையொட்டி பிறப்பிக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்காலும் கர்ப்பிணிப் பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் கர்ப்பகாலத்தில் மனஅழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் குழந்தை வளர்ச்சி சீராக இருக்கும்.
ஆனால் கொரோனா நெருக்கடி கர்ப்பிணிகளுக்கு பலவிதமான மனப் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது. வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரப் பிரச்சனை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருத்தல், தேவைப்படும் போது மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல முடியாத சூழல், மருத்துவமனைக்குப் போகவே பயப்படும் நிலைமை என கர்ப்பிணிகள் மனரீதியாக பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று, பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று என நாள்தோறும் வரும் செய்திகள் கவலையை அதிகரிக்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் எய்ட்ஸ் நோய்த் தொகுப்பு ஏற்படக் காரணமான எச்.ஐ.வி என்ற வைரஸ் கிருமி கர்ப்பிணிகளிடம் இருந்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தொற்றாமல் இருக்க எடுக்கப்பட்ட பல முயற்சிகள் (தாய்-சேய் மேவா திட்டம்) இந்தச் சூழலில் நினைவுக்கு வருகின்றன.
கொரோனா தொற்றுக்கு அதிக அளவில் ஆளாகக்கூடிய வாய்ப்புள்ள முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளை அதிகக் கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. கர்ப்பிணி என்பவர் தனிநபர் அல்ல. அவர் மற்றொரு உயிரை சுமந்து கொண்டுள்ளார். எனவே கருவில் வளரும் குழந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் அதன் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்கவும் கர்ப்பிணி அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆனால் கோவிட்-19 சூழ்நிலை கர்ப்பிணிகளை ஊரைவிட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து, தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு என அனைத்தும் தடைபட்டன.
இந்தச் சூழலில்தான் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் கிராமங்களில் பணிபுரியும் அங்கன்வாடிப் பணியாளர்கள் கர்ப்பிணிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்து வருகின்றனர். ஊரடங்கில் நடமாட்டம் தடைசெய்யப்பட்டு இருந்த போது அங்கன்வாடி பணியாளர்கள்தான் தங்கள் பகுதிகளில் இருந்த கர்ப்பிணிப் பெண்களோடு தினமும் மொபைல் போனில் உரையாடினர்.
அவ்வப்போது வீடியோ அழைப்பு மூலமும் ஆலோசனைகளை வழங்கினர். கர்ப்பகால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வுத் தகவல்களை வீடியோவாக பதிவு செய்து அதை கர்ப்பிணிகளை இணைத்து உருவாக்கிய வாட்ஸ்-அப் குழுவில் பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை அங்கன்வாடிப் பணியாளர்கள் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கே சென்று சத்துமாவு கொடுத்ததோடு எடை எடுத்தும் வந்தனர். கர்ப்பிணிகளும் தங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் அங்கன்வாடிப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டனர்.
இத்தகைய முன்னெடுப்புகளால் தன்மேல் அக்கறைக் கொள்ளும் ஒருவர் எப்போதும் நம் அருகில் இருக்கின்றார் என்ற நம்பிக்கை கர்ப்பிணிக்கு கோவிட்-19 காலகட்டத்தில் ஏற்பட்டு உள்ளது. அங்கன்வாடிப் பணியாளர்களுடனான பரஸ்பரத் தொடர்பும், அவர்கள் காட்டிய அக்கறையும் கர்ப்பிணிப் பெணகளுக்கு கொரோனா பயத்தை வெல்ல உதவின.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்தின் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.ஜெகதீஸ்வரி கூடுதலாக வல்லம் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய பொறுப்புகளையும் வகிக்கின்றார். அங்கன்வாடிப் பணியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு இப்போதுதான் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு முன்பு நான்கு ஊரடங்கு காலகட்டத்திலும் அங்கன்வாடிப் பணியாளர்கள்தான் கர்ப்பிணிகளை அரவணைத்து ஆலோசனை வழங்கி நம்பிக்கை அளித்து பார்த்துக் கொண்டார்கள் என ஜெகதீஸ்வரி பெருமையுடன் கூறுகின்றார்.
வானூர் ஒன்றியத்தில் 179 அங்கன்வாடி மையங்களும் 1154 கர்ப்பிணிகளும் அதே போன்று ஒலக்கூர் ஒன்றியத்தில் 113 மையங்களும் 615 கர்ப்பிணிகளும் வல்லம் ஒன்றியத்தில் 125 மையங்களும் 648 கர்ப்பிணிகளும் உள்ளனர் என்று தெரிவித்த ஜெகதீஸ்வரி இந்த கொரோனா பெருந்தொற்று காலம் ஏற்படுத்தி இருக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையிலும் கர்ப்பிணிகளைப் பிரசவத்திற்குத் தயார் நிலையில் ஆரோக்கியமாக வைத்திருப்பதுதான் அங்கன்வாடிப் பணியாளர்களின் முக்கியமான சேவை என்றும் தெரிவித்தார்.
வானூர் ஒன்றியம் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி, வல்லம் ஒன்றியம் அவியூர் கிராமத்தின் பத்மா மற்றும் ஒலக்கூர் கீதா ஆகிய 3 கர்ப்பிணிப் பெண்களும் பால்வாடி டீச்சர் (அங்கன்வாடி பணியாளர்) தங்களை கொரோனா காலகட்டத்தில் நன்றாகப் பார்த்துக் கொண்டதாகவும் கர்ப்பக்கால ஆலோசனைகளை முறையாக வழங்கியதாகவும் கொரோனா வைரஸ் பயத்தை போக்கி நம்பிக்கை ஊட்டியதாகவும் தெரிவிக்கின்றனர்.
அங்கன்வாடி பணியாளர்கள் கவிதா (குன்னம்) திலகம் (அவியூர்) மற்றும் ஷகினா (ஒலக்கூர்) ஆகிய மூவரும் கொரோனா காலகட்டத்திலும் கர்ப்பிணிகளுக்கான சேவையை எந்தத் தடையுமின்றி திறம்பட ஆற்றினோம் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.
மக்களோடு மக்களாக இணைந்து இருக்கின்ற இந்த அங்கன்வாடி பணியாளர்களின் சேவையைக் கொரோனா வைரசால் நிறுத்திவிட முடியவில்லை என்பது பெரிய சாதனைதான்.