கொரோனா சமயத்தில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் ஆப்!
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது சந்தேகங்களுக்கு மகப்பேறு மருத்துவர், ஊட்டச்சத்து, யோகா நிபுணர், மன நல நிபுணர் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான நிபுணர்களின் உதவியை இதில் இலவசமாக பெறலாம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாகப் பரவுவதால் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நோய்ப் பரவலைத் தடுக்க மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதால் ஏராளமானோர் கவலைக்குள்ளாகி பதட்டத்துடன் உள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்கு செல்லமுடிவதில்லை. உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனைகள் பெற முடிவதில்லை. இதனால் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.
இந்த 21 நாட்கள் ஊரடங்கு சமயத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ முன்வந்துள்ளது iMumz செயலி. இந்தத் தளத்தில் நேரலையில் கேள்விகள் கேட்டறியும் அமர்வுகள் (AMA sessions) ஏற்பாடு செய்யப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது சந்தேகங்களுக்கு மகப்பேறு, ஊட்டச்சத்து நிபுணர், யோகா நிபுணர், மன நல நிபுணர் உள்ளிட்ட 100-க்கும் அதிகமான நிபுணர்களின் உதவியுடன் தெளிவுபெறலாம்.
முழுமையான ஆரோக்கியத்தில் கவனம்
தற்போதை சூழலில் இந்தியாவில் குறைந்தபட்சம் 28 மில்லியன் கர்ப்பிணிப் பெண்கள் இருப்பார்கள் என இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ள Pruoo Health Tech Pvt Ltd நிறுவனம் குறிப்பிடுகிறது.
இந்தச் ஆப் தாய், சேய் இருவரின் முழுமையான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் தங்களையும் தங்களது குழந்தைகளையும் பராமரிக்க உதவும் வகையில் தகவல்களை வழங்குகிறது.
மகப்பேறு காலத்தில் தாயின் நடவடிக்கைகள் குழந்தையின் ஆளுமைத்திறன் மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. பேறுகாலத்திற்கு முந்தைய காலகட்டம், வருங்காலத்தில் ஏற்படும் நோய்கள், மன நலம் ஆகியவற்றுக்கிடையே தொடர்பு இருப்பதை சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வு முடிவுகளை ஆமோதிக்கும் வகையில் Pruoo நிறுவனத்தின் இணை நிறுவனர் டாக்டர் ஜெய்தீப் மல்ஹோத்ரா கூறுகையில்,
“தாயின் கருவிலிருந்தே பெரும்பாலான நோய்கள் உண்டாகிறது என்பதை நாம் அறிவோம். பெரியவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு, ஹைப்பர்டென்ஷன், உடல் பருமன், பல வகையான புற்றுநோய்கள் போன்றவை கருவிற்கு ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்திருப்பதாலும் டெலிவரி குறித்து பெண்கள் அதிக கவலைகொள்வதாலும் குழந்தையுடனான பிணைப்பு இருப்பதில்லை. இது குழந்தையின் ஆளுமைத் திறன் மேம்பாட்டை பாதிக்கிறது. அனைத்துமே கர்ப்பகாலத்தின் ஆரம்பகட்டத்திலேயே தொடங்குவதால் இந்தப் பயணம் முழுமையாக இருக்கவேண்டியது அவசியமாகிறது,” என்றார்.
டாக்டர் ஜெய்தீப் மகப்பேறு மருத்துவர். 10,000-க்கும் அதிகமான பிரசவம் பார்த்த அனுபவமிக்கவர். இந்திய மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவச் சங்கங்களின் கூட்டமைப்பின் (FOGSI) தலைவராக பதவி வகித்துள்ளார்.
இவர் பெண்கள் கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கவும் மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் முறையை மாற்றியமைக்கவும் விரும்பினார். எனவே இந்தக் கூட்டமைப்பின் தலைமைப்பொறுப்பில் இருந்த காலகட்டத்தில் ‘அத்பூத் மாத்ருத்வா’ என்கிற திட்டத்தைத் தொடங்கினார்.
இந்நிறுவனத்தை ஐஐடி வாரனாசி முன்னாள் மாணவர்களான ரவி தேஜா அகோண்டியா மற்றும் மயூர் துர்பாதே, வாழ்க்கையின் இலக்கை எட்ட உதவும் பயிற்சியாளர் மற்றும் தியான நிபுணரான ராஜேஷ் ஜகாசியா, டாக்டர் ஜெய்தீப் மல்ஹோத்ரா ஆகியோர் ஒன்றிணைந்து தொடங்கியுள்ளனர்.
ரவியும் மயூரும் 2017ம் ஆண்டு ஐஐடி-யில் பட்டப்படிப்பை முடித்தனர். இவர்கள் தொடர்ந்து தியானத்தில் ஈடுபட்டு வந்தனர். வாழும் கலை மையங்களில் தன்னார்வப் பணிகளில் இணைந்துகொண்டதன் மூலம் முழுமையான சுகாதார நடைமுறைகளில் ஈடுபட்டனர்.
இதனால் சுகாதாரப் பிரிவில் செயல்படும் நோக்கத்துடன் தங்களது கார்ப்பரேட் பணியை விட்டு விலகினர். இந்த நடைமுறைகளில் உள்ள நன்மைகளைக் கண்டு இத்தகைய முழுமையான அணுகுமுறை பற்றிய தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்க விரும்பினார்கள்.
மகப்பேறு மருத்துவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உளவியலாளர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களுடன் உரையாடிய பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும் நோக்கத்துடன் 2019-ம் ஆண்டு iMumz தொடங்கத் தீர்மானித்தனர். ஒரு குழந்தையின் எதிர்கால வளர்ச்சிக்கு கர்ப்பகாலம் மிகவும் முக்கியமானது என்பதை அவர்கள் ஆய்வுகளின் மூலம் தெரிந்துகொண்டனர்.
கோவிட்-19 – உதவி
“கோவிட்-19 காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளுக்குச் செல்லமுடியவில்லை. இதனால் அவர்கள் கவலையடைந்து பல கேள்விகள் கேட்கின்றனர். அவசரச் சூழல் இருந்தால் மட்டுமே நேரடியாக வருமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். அவர்களால் வெளியே செல்லமுடியவில்லை. உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. இதனால் அவர்களது மன நலனும் பாதிக்கப்படுகிறது,” என்றார்.
அழுத்தம் நிறைந்த இந்த பதட்டமான சூழலில் பெண்களுக்கு உதவ தினமும் அதன் யூட்யூப் சானலில் மகப்பேறு மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், மன நல சிறப்பு நிபுணர்கள் போன்றோருடன் நேரடி அமர்வுகளை வழங்குகிறது. அதுமட்டுமின்றி காலை நேரத்தில் 6-7 மருத்துவர்களுடன் தினமும் தியான பயிற்சிகளையும் ஏற்பாடு செய்கிறது. இந்த சமயத்தில் தினமும் 200-க்கும் அதிகமான சந்தேகங்கள் இந்தச் செயலியில் கேட்கப்படுகிறது. இந்த சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தச் செயலியில் பெண்கள் தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ளலாம். இதில் மன நலன் சார்ந்த பயிற்சிகள், இசை தெரபி, மூச்சுப்பயிற்சி, ஊட்டச்சத்து ஆலோசனைகள் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் கர்ப்பிணிப் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் சிறப்பாக பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் அவர்களது அழுத்தமும் கவலைகளும் வெகுவாகக் குறையவும் உதவுகிறது.
iMumz தற்போது 15,000 பயனர்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் இந்தத் தளத்தில் 1200 கர்ப்பிணிப் பெண்கள் இணைகின்றனர். நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக நம்பத்தன்மைமிக்க தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு ப்ரீமியம் பதிப்பையும் அறிமுகப்படுத்த உள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கான அறிவுறுத்தல்கள்
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சமூகப் பரவல் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அனைவரின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் ஜெய்தீப் கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுறுத்தும் வகையில்,
“கர்ப்ப காலத்தல் நோய் எதிர்ப்பு சக்தியானது வழக்கத்தை விடக் குறைவாக இருக்கும். எனவே கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் நோய்தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். தாய்க்கு நோய்தொற்று ஏற்பட்டால் அது குழந்தையை பாதிக்காது என்று சமீபத்திய காலம் வரை சொல்லப்பட்டது. ஆனால் தொற்று குழந்தைக்கு பரவும் அபாயம் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. எனவே நாம் நிலைமையைப் புரிந்துகொள்ளவேண்டும்,” என்றார்.
கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் ஜிங்க் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். அதிக காய்ச்சலோ, இருமலோ இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்றார்.
இது கடினமான காலகட்டம் என்றபோதும் சமூக விலகலைப் பின்பற்றி மருத்துவ ஆலோசனைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம். வைரஸ் தொற்று பரவலைத் தடுப்போம்.
ஆப் டவுன்லோட செய்ய: iMumz
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கௌதமன் | தமிழில்: ஸ்ரீவித்யா