5 லட்சத்தில் தொடங்கி ஒரே ஆண்டில் 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உள்ள க்ராப்ட் நிறுவனம்!
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைக் கண்டு உந்துதல் பெற்ற ஜெய்ப்பூர் தம்பதி கைவினைப் பொருட்கள் துறையில் வெற்றிகரமாக இயங்குகின்றனர்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைக் கண்டு உந்துதல் பெற்ற ஜெய்ப்பூர் தம்பதி கைவினைப் பொருட்கள் துறையில் செயல்படுகின்றனர்.
பூர்ணிமா சிங்கும் அவரது கணவர் சின்மய் பாந்தியாவும் தங்களது கார்ப்பரேட் பணியை விட்டு விலகி 'சுபம் கிராஃப்ட்ஸ்' (Subham Crafts) தொடங்கியுள்ளனர். இங்கு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் காகிதக்கூழ் (papier mache) தயாரிப்புகளையும் புல் கூடைகளையும் தயாரிக்கின்றனர்.
5 லட்ச ரூபாய் முதலீட்டுடன் தொடங்கப்பட்ட சுபம் கிராஃப்ட்ஸ் இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது.
சுபம் கிராஃப்ட்ஸ் நிறுவனர்களான பூர்ணிமா, சினமய் இருவரும் என்ஐடி குருக்ஷேத்ரா பொறியியல் பட்டதாரிகள். பூர்ணிமா பெட்ரோஃபேக் என்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணியாற்றியுள்ளார். சின்மய் Mu-Sigma நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார்.
“வீட்டில் பணிபுரிபவர், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பவர்கள் போன்றோருடன் நான் பேசுவது வழக்கம். அந்த உரையாடல்களின் வழியாக அவர்களது பணி மற்றும் வாழ்க்கை முறை குறித்து புரிந்துகொள்வேன். சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்படவேண்டும் என்று விரும்பினேன். இதுவே சுபம் கிராஃப்ட்ஸ் தொடங்கக் காரணம்,” என்றார் பூர்ணிமா.
இந்தத் தம்பதி காகிதக்கூழ் கொண்டு கைவினைப்பொருட்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தீர்மானித்தனர். கைவினைக் கலையில் பெண்களுக்குப் பயிற்சியளிக்க ராஜஸ்தானில் உள்ள ஒரு சில கிராமங்களைக் கண்டறிந்தனர். இந்தப் பெண்களுக்கு முதலில் திறன் பயிற்சியளிக்கப்பட்டு பின்னர் தயாரிப்புக் குழுவில் இணைக்கப்பட்டனர்.
“இந்த கிராமப்புறப் பெண்கள் மூலம் காகிதக் கூழ் தயாரிப்புக் கலை மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. கலைப்படைப்பு கைகளால் வரையப்படுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள கிராமவாசிகளிடம் காணப்பட்ட இந்தத் திறன் தொலைந்துபோயிருந்தது. இந்த முயற்சி இதை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது,” என்றார்.
பிளாஸ்டிக் அல்லது உலோகங்களுக்கான மாற்றாக இயற்கை புல் கூடைகள் மற்றும் டெரகோட்டா தயாரிப்புகள் உருவாக்கப்படுகிறது.
கிராமத்து பெண்களுக்கு சக்தியளிக்கப்பட்டது
மூன்று பெண்களுடன் தொடங்கப்பட்ட சுபம் கிராஃப்ட்ஸ் நிறுவனத்தில் இன்று ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பெண் கைவினைஞர்கள் 35 பேர் இணைந்துள்ளனர். இந்நிறுவனம் பி2பி வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. வீட்டு அலங்காரப் பொருட்கள் தொடர்புடைய மொத்த விற்பனையாளர்கள் மற்றும் பெரியளவில் செயல்படும் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறது.
பெண்களுக்கு சக்தியளிப்பதில் இந்நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பெண்கள் இன்று தங்களது திறனில் நம்பிக்கை கொண்டுள்ளனர். அத்துடன் நிதி சுதந்திரம் பெற்றுள்ளனர்.
“ஆரம்பத்தில் 20,000 ரூபாய் வருவாய் ஈட்டத் தொடங்கி ஒரே நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளோம். அரை மில்லியனுக்கும் அதிகளவிலான கழிவுகளைப் பயனுள்ள தயாரிப்புகளாக மாற்றியுள்ளோம். இந்தத் தயாரிப்புகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது,” என்றார் பூர்ணிமா.
இந்தத் தயாரிப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக பூர்ணிமா தெரிவிக்கிறார். சுபம் கிராஃப்ட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் ஐரோப்பா, கனடா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்கொரியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வர்த்தகம் செய்துள்ளது.
மனநிலையை மாற்றுதல்
கிராமப்புறப் பெண்களைத் தங்களது குறுகிய வட்டத்தில் இருந்து வெளிக்கொணார்ந்து அவர்களது மனநிலையை மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவிக்கிறார் பூர்ணிமா.
“அடிப்படை வசதிகளைப் பெறுவதும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. மின் இணைப்பு கிடைக்க மூன்று மாதங்கள் ஆனது. தினமும் மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் அலுவலகத்திற்குச் செல்வோம். மூலப்பொருட்களைத் தேடும்போதுதான் கழிவுகளும்கூட விலை உயர்ந்தவை என்பதை உணர்ந்தோம். அனைத்து இடங்களிலும் குழு இயங்குகிறது. அதனுள் நம்மால் எளிதாக இணையமுடியாது. ஆனால் கடின முயற்சியைத் தொடர்ந்து விற்பனையாளரைக் கண்டறிந்தோம்,” என்றார் பூர்ணிமா.
வருங்காலத்தில் அதிக வாய்ப்புகள் இருக்கும் என பூர்ணிமா தெரிவிக்கிறார். “ஒவ்வொரு கண்காட்சியின்போது எங்களது தயாரிப்புகளின் தொகுப்பை மாற்றியமைக்கிறோம். அதாவது கிட்டத்தட்ட 700 வெவ்வேறு வகைகள் மற்றும் பொருட்களுடன் காட்சிப்படுத்துகிறோம்.
வருங்காலத்தில் எங்களது குழுவை விரிவுபடுத்தவும் மேலும் பல்வேறு கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தவும் அதிக வருவாய் ஈட்டவும் மற்ற கிராமப்புறங்களில் எங்களது தயாரிப்பை விரிவுபடுத்தவும் விரும்புகிறோம்.
குழு, திறன், தயாரிப்பு அளவு போன்றவற்றை விரிவுப்படுத்தும் முயற்சியானது கூடுதல் வணிக அளவை எதிர்கொள்ளத் தயாராகி வருவதையே உணார்த்துகிறது,” என்றார்.
“வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து பயன்பாட்டில் இல்லாத சிறு கற்களைக் கொண்டு சிற்பங்கள் செய்து எங்களது தயாரிப்புத் தொகுப்பில் இணைத்துள்ளோம். அறுவடை சமயத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் அதிகளவில் எரிக்கப்படும் தாவரங்களின் தண்டுகளை புல் கூடைகள் தயாரிக்க பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா