கிரெடிட் கார்டு பயன்பாடு மூலம் அதிக பலன் பெறுவதற்கான வழிகள்...
கிரெடிட் கார்டுகள், ரிவார்டு புள்ளிகள், தள்ளுபடி, கேஷ் பேக் என பலவிதமான சலுகைகளை அளிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதன் பயன்பாட்டில் கட்டுப்பாடு இல்லை எனில் கடன் வலையில் சிக்கிக் கொள்ள நேரலாம்.
இந்தியா அதிக கிரெடிட் கார்டு பயனாளிகளைக் கொண்டிருக்கிறது. தற்போது, நாட்டில் 46.1 மில்லியன் கிரெடிட் கார்டு பயனாளிகள் உள்ளனர். அதே நேரத்தில், மிகை செலவுக்கு அஞ்சி கிரெடிட் கார்டை பயன்படுத்தும் அச்சம் கொண்டோரும் கணிசமானவர்கள் இருக்கின்றனர்.
கிரெடிட் கார்டுகள், ரிவார்டு புள்ளிகள், தள்ளுபடி, கேஷ் பேக் என பலவிதமான சலுகைகளை அளிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதன் பயன்பாட்டில் கட்டுப்பாடு இல்லை எனில் கடன் வலையில் சிக்கிக் கொள்ள நேரலாம்.
கடன் வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, கிரெடிட் கார்டை திறம் பட பயன்படுத்துவதற்கான வழிகள் இதோ:
முழுத்தொகை செலுத்தவும்
கிரெடிட் கார்டை கடனை அடுத்த சுழற்சிக்கு கொண்டு செல்லாமல் முழுவதும் செலுத்தும் பழக்கம் கொண்டிருக்க வேண்டும். நிலுவைத்தொகையை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு தாமதிப்பது, அதிக மாதந்திர வட்டிக்கு வழி வகுக்கும். இது 2.5 முதல் 4 சதவீதமாக இருக்கலாம். மேலும் ஒவ்வொரு கார்டுக்கும் வட்டியில்லா காலம் உண்டு. நீங்கள் மாதந்தோறும், முழுத்தொகையும் செலுத்தினால், இந்த சலுகை தொடரும். ஆனால், கடனை செலுத்த தவறும் போது, எஞ்சியுள்ள தொகை மீது வட்டி சேர்வதுடன், கார்டு கொண்டு மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனை மீதும் அமையும். எனவே, நீங்கள் வாங்கியதை விட அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, மாதந்தோறும் கிரெடிட் கார்டு தொகையை செலுத்துவது அவசியம்.
ரொக்க விலக்கல் வேண்டாம்
டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரொக்கப்பணம் எடுப்பது வேறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். டெபிட் கார்டு மூலம் பணம் விலக்கிக் கொள்ளும் போது மாதம் சில இலவச பரிவர்த்தனைகளை பெறலாம். ஆனால் கிரெடிட் கார்டு மூலம் ரொக்கம் எடுத்தால், இரண்டு வகைக் கட்டணங்கள் பொருந்தும். ஒரு முறை கட்டணம் மற்றும் வட்டி தொகை செலுத்த வேண்டும். எனவே, கிரெடிட் கார்டு வாயிலாக ரொக்க பணம் விலக்கி கொள்வதை வேறு வழியில்லாத நிலையில் தான் நாட வேண்டும்.
ரிவார்டு புள்ளிகள்
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பலவித ரிவார்ட் புள்ளிகள் அளிக்கின்றன. ஒரு சில கார்டுகள் விமான நிலையங்களில் பயன்படுத்தக்கூடிய கிப்ட் வவுச்சர்கள் அளிக்கின்றன. வேறு சில கார்டுகள், கேட்கெட் வாங்க தள்ளுபடி அளிக்கின்றன. ஒரு சில தள்ளுபடி புள்ளிகள் தருகின்றன. கிரெடிட் கார்டு பயனாளியாக இருக்கும் போது, இந்த புள்ளிகள் மூலம் அதிக பலன் பெறுவது எப்படி என அறிந்திருக்க வேண்டும். பலர் தங்கள் ரிவார்டு புள்ளிகளை அடிக்கடி கண்காணிக்க தவறிவிடுகின்றனர். இதனால் புள்ளிகள் காலாவதியாகிவிடலாம். இது தவறவிடும் வாய்ப்பாகிவிடலாம்.
கிரெடிட் கார்டு கடன்
கிரெடிட் கார்டுகள் ஈட்டுறுதி இல்லாத கடன் அளிக்கின்றன. எனினும் அவசர நிலையில் மட்டும் தான் இத்தகைய கடனை அணுக வேண்டும். இதற்கான வட்டி விகிதம் அதிகம். கடன் பெறுவதற்கு முன் விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டு அறிக்கை
கிரெடிட் கார்டு அறிக்கையில் நீங்கள் வாங்கிய ஒவ்வொரு பொருட்கள் மற்றும் அவற்றுக்கான விலையை சரி பார்க்கவும். சரியான தொகையை தான் செலுத்தியிருப்பதை இது உறுதி செய்யும். பொருட்களை வாங்கிய ரசீதையும் கைவசம் வைத்திருப்பது நல்லது. ரசீதை தவறவிட்டால் அல்லது மறந்து வைத்துவிட்டால், கிரெடிட் கார்டு அறிக்கையில் கீழ்கண்ட விஷயங்களை சரி பார்க்க வேண்டும்.:
• ஏதேனும் அதிகக் கட்டணம்
• இரட்டைக் கட்டணம்
•நேரடி டெபிட் பிரிவில் கட்டணம்
பணம் செலுத்துதல்
உங்கள் வங்கிக் கணக்குடன், கிரெடிட் கார்டு கணக்கை இணைப்பதன் மூலம், மாதத்தொகையை உரிய நேரத்தில் தானாக செலுத்தப்படுவதை உறுதி செய்யலாம். சில நேரங்களில் குறித்த காலத்தில் பணம் செலுத்த மறந்துவிடலாம் என்பதால், தாமத கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, இது கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். தானாக பணம் செலுத்தும் வசதி மூலம் இதை தவிர்க்கலாம். இவ்வாறு செலுத்தப்படும் தொகை, குறைந்த பட்ச தொகையைவிட அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சேமிப்பு அவசியம்
அவசர காலம், கையில் பணம் இல்லை எனில், கிரெடிட் கார்டு செலவுகளை சமாளிக்க கைக்கொடுக்கலாம் என்றாலும், நீண்ட கால நோக்கில் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இது போன்ற நேரங்களில் கிரெடிட் கார்டை நாடாமல் இருக்க சேமிப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.
வேறு என்ன?
கிரெடிட் கார்டு ஒருவரது வாங்கும் சக்தியை அதிகமாக்குவதாக சொல்லப்பட்டாலும், மிகை செலவு மற்றும் தாமதமாக பணம் செலுத்துவது குடும்ப பட்ஜெட்டை பாதிக்கலாம். எனவே தான், உங்கள் செலவு பழக்கத்திற்கு பொருத்தமான பலன்களை அளிக்கும் கார்டை தேர்வு செய்வது முக்கியம். அப்போது தான் கிரெடிட் கார்டு மூலம் அதிக பலன் பெறலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: கவுரவ் குப்தா, நிறுவனர், மைலோன்கேர்.இன்
தமிழில்: சைபர்சிம்மன்