'தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீங்க, அது ஒண்ணுதான் நம்ம மூலதனம்' - கல்லூரி மாணவர்களிடம் பேசிய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன்
நம்மால் இதைச் செய்ய முடியுமா என்று சந்தேகித்தால் நிச்சயமாக உங்களால் அதனை செய்ய முடியாது. சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இந்த அளவிற்கு வந்திருக்கிறேன்.
சேலத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் தன்னை வளர்த்தெடுத்த நல்ல விஷயங்களைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
"நம்மால் இதைச் செய்ய முடியுமா என்று சந்தேகித்தால் நிச்சயமாக உங்களால் அதனை செய்ய முடியாது. சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இந்த அளவிற்கு வந்திருக்கிறேன். அதற்குக் காரணம் என்னுடைய தன்னம்பிக்கையும் உழைப்பும் தான். அதே போல, நீங்கள் பெரிய அளவிற்கு வந்துவிட்டால், நீங்கள் கடந்து வந்த பாதையை என்றும் மறந்து விடக்கூடாது,"என்றார்.
தான் நன்றி மறவாமல் இருப்பதால்தான் இவ்வளவு நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருப்பதாகவும், என்றுமே பழசை மறக்க மாட்டேன். நீங்களும் இந்த நல்ல குணத்தை கல்லூரி பருவத்திலே விதைத்துக் கொள்ளுங்கள், என்று ஊக்கம் தந்தார்.
ஐபிஎல்-இல் பஞ்சாப் அணிக்கு நான் முதன் முதலில் ஆடச்சென்ற போது தமிழ் தவிர வேற எனக்கு எந்த லாங்குவேஜும் தெரியாது. இப்ப நான் பாட் கமின்ஸ் கூட 20 நிமிடம் பேசுகிறேன். என்ன காரணம், விளையாட விளையாட என்னிடம் நம்பிக்கை அதிகரிக்கிறது. தப்போ சரியோ பேசிப்பேசித்தான் பழகினேன்.
அதனால்தான் சொல்றேன் இங்கிருந்தே நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். இங்கிருந்தே நல்ல கேரக்டர், நல்ல குணங்கள் கொண்டாங்க.
ஆனால், இன்னொண்ணு என்னன்னா, தன்னம்பிக்கையை மட்டும் என்னிக்கும் இழந்துராதீங்க. ஏன்னா அது ஒண்ணுதான் நம்மளோட மூலதனம்.
நம்ம கிட்ட இருக்கற இன்னொரு விஷயம் என்னன்னா நம்மளோட திறமை, நம்மளோட பலம், நம்ம கிட்ட இருக்கறத வச்சு மேலே வர்றது. இதெல்லாம் ஒரு பிரச்னை என்று நினைத்து ஒதுங்கியிருந்தால் இன்று என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆரம்பத்தில் பேசவே மிகவும் தயங்கினேன். அதனால் நீங்கள் தொடக்கத்தில் இருந்தே தயக்கமின்றி பேசக் கற்றுக் கொள்ளுங்கள், என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முத்துக்களை உதிர்த்து இளையோருக்கு உத்வேகம் அளித்துள்ளார் ‘யார்க்கர்’ நடராஜன்.