Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'பிரியாவிடை கொடுக்க வந்துருக்காங்க' - ஐபிஎல் ஓய்வு குறித்த சஸ்பென்ஸை உடைத்த தல தோனி!

அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டேன் என்பதை தோனி மறைமுகமாக தெரிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'பிரியாவிடை கொடுக்க வந்துருக்காங்க' - ஐபிஎல் ஓய்வு குறித்த சஸ்பென்ஸை உடைத்த தல தோனி!

Monday April 24, 2023 , 2 min Read

'அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டேன்,' என்பதை தோனி மறைமுகமாக தெரிவித்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல்-இல் எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் குவிந்துவிடுவது வழக்கமானது. சிஎஸ்கே என்றாலே கிரிக்கெட் மீது ஆர்வம் இல்லாத ரசிகர்கள் கண் முன்பு கூட மஞ்சள் ஜெர்சியில் நிற்கும் தல தோனியின் முகம் தான் நினைவுக்கு வரும்.

சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள் என அத்தனை விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தோனி ஐபிஎல்-இல் மட்டுமே ஆடி வருகிறார்.

தற்போது நடைபெற்று வரும் சீசன் தோனியின் கடைசி சீசன் என்றும், ஐபிஎல் 2023க்குப் பிறகு அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என்றும் பல தகவல்கள் வெளியாகின.

கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, சிஎஸ்கே அணியின் வீரர்களில் ஒருவராக தொடர்ந்து வருகிறார்.

மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து தான் தல தோனி சிஎஸ்கே அணியில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின.

அதுவும் கடந்த இரண்டு சீசன்களில் தோனியின் பேட்டிங் சரியில்லை என அவரது ரசிகர்களே விமர்சிக்கும் அளவிற்கு விளையாடினார்.

தோனியிடம் பழைய ஸ்டாமினா இல்லை, நல்ல ஃபார்மில் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், தோனி தனது ஐபிஎல் ஓய்வு குறித்து சூசகமாக பேசியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நான்கு விக்கெட்டுக்கு 235 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி, பரிசளிப்பு விழாவில் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

dhoni

ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியால் நிறைந்திருப்பது தொடர்பாக தல தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

"இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி. இவர்களெல்லாம் அடுத்தப் போட்டியில் தங்களின் சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என நம்புகிறேன்,” எனக்கூறினார்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் தான் ஆட்டத்தை அமைத்துக் கொடுத்தனர் என்றும், இறுதி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதை சிறப்பாக பின்பற்றினார்கள் என்றும் புகழ்ந்தார்.

"வேகப்பந்து வீச்சாளர்கள் பவர்ப்ளேயில் அவர்களின் வேலையைச் சரியாகச் செய்துவிட்டார்கள். ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களைப் பார்த்துக் கொண்டார்கள். மைதானத்தின் ஒரு பக்க பவுண்டரி குறைவான தூரத்தைக் கொண்டதாக இருந்தது. அதற்கேற்ப நாங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டோம்,” என்றார்.

இதேபோல், கடந்த வெள்ளிக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சன்ரைஸ் ஐதராபாத் உடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேசமயம், டெவன் கான்வே ஆட்டமிழக்காமல் 77 ரன்கள் எடுத்து சேப்பாக்கத்தில் கூடியிருந்த ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

அதன் பின்னர், ரசிகர்களிடையே பேசிய தோனி, இது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டம் என்றும், மெகா இந்தியன் பிரீமியர் லீக்கில் எவ்வளவு காலம் விளையாடினாலும் அதை அனுபவிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

“என்ன சொன்னாலும் செய்தாலும், இது என் கேரியரின் கடைசிக் கட்டம், எவ்வளவு நேரம் விளையாடினாலும். அதை அனுபவிப்பது முக்கியம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரசிகர்கள் இங்கு வந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்கள் கூட்டம் எங்களுக்கு நிறைய அன்பையும் பாசத்தையும் கொடுத்தது. பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அதுபற்றி எந்த புகாரும் வரவில்லை,” என பேசியிருந்தார்.

சென்னையில் மறைமுகமாக தனது ஓய்வை அறிவித்த தோனி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வெளிப்படையாகவே ஐபிஎல் ஓய்வு குறித்து பேசியுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.