70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த மகாராணி எலிசபெத் மரணம் : ஆப்ரேஷன் "லண்டன் பிரிட்ஜ்" என்றால் என்ன தெரியுமா?

By Chitra Ramaraj
September 09, 2022, Updated on : Fri Sep 09 2022 05:07:19 GMT+0000
70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த மகாராணி எலிசபெத் மரணம் : ஆப்ரேஷன் "லண்டன் பிரிட்ஜ்" என்றால் என்ன தெரியுமா?
பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்தவர் என்ற பெருமைக்குரிய, இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். சுமார் 70 ஆண்டுகள் மகாராணியாக அரியணையை அலங்கரித்தவர் எலிசபெத். அவரது மரணத்தைத் தொடர்ந்து ஆப்ரேஷன் லண்டன் பிரிட்ஜ் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது பிரிட்டன்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

உலகம் முழுவதும் சுமார் மூன்று தலைமுறைக்கும் மேற்பட்டவர்களுக்கு மகாராணியாக அறியப்பட்டவர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத். உலகத்தில் இவரைத் தெரியாதவர்களேஎ இருக்க முடியாது. அந்தளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமானவர் இவர். 96 வயதில் தன் நடை, உடை, நடவடிக்கைகளில் ராணிக்கே உரிய மிடுக்குடன் வலம் வந்தவர்.


queen elizabeth

இந்நிலையில் நேற்று (வியாழன்), பக்கிங்ஹாம் அரண்மனை திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், எலிசபெத் மகாராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள்ளாகவே, எலிசபெத் மகாராணி உயிரிழந்து விட்டதாக அடுத்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலே, எலிசபெத் மகாராணி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவால் நடக்கவும், நிற்கவும் அவர் சிரமப்படுவது வெளிப்படையாகவே தெரிந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். தன் உடல்நலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சையை பெற்று வந்த நிலையில்தான், உடல்நிலை மேலும் மோசமாகி அவர் உயிரிழந்துள்ளார்.


பால்மோர் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


இந்தச் சூழ்நிலையில், மகாராணி எலிசபெத் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்...


- கடந்த 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி.

elezabeth

- இந்தியாவின் கடைசிப் பேரரசர் எனக் குறிப்பிடப்படும் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மகள்தான் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத். ஜார்ஜ் மன்னரின் மறைவைத் தொடர்ந்து, 1952ம் ஆண்டு தனது 25ம் வயதில் எலிசபெத் மகாராணியாகப் பொறுப்பேற்றார்.


- இவர் லிலிபெட்' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.


- 1952 முதல் தற்போது வரை 70 ஆண்டுகள் இங்கிலாந்து மகாராணியாக இருந்தவர் எலிசபெத். இதன்மூலம்  இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்டகாலம் ராணியாக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் விக்டோரியா மகாராணியார் 63 ஆண்டுகள் இங்கிலாந்து ராணியாக இருந்திருக்கிறார்


- இவருக்கு இரு பிறந்தநாள்கள் உண்டு. ஒன்று ஏப்ரல் 21 , இன்னொரு ஜூன் மாதம் 2ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ பிறந்தநாளாகும். அன்றைய தினம் பெரிய ஊர்வலத்துடன் ராணியின் பிறந்தநாள் களைகட்டும்.

elizabeth

- எலிசபெத் தனது கணவரான பிலிப்பை முதன்முதலில் தனது 8 வயதில் சந்தித்தார். கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசராக இருந்த பிலிப்பிடம், தனது 13வது வயதில் காதலை வெளிப்படுத்தினார் எலிசபெத். இதையடுத்து இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர்.


அதன்பிறகு ஜூலை 1947ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ல் திருமணம் நடந்தது. இந்த திருமணம் சர்வேதேச நிகழ்வாக இருந்தது.


- ராணியாகப் பதவியேற்ற சமயத்தில் எலிசபெத் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என மொத்தம் ஏழு சுதந்திர நாடுகளுக்குத் தலைவராக இருந்தார். மரணமடையும் சமயத்தில் பிரிட்டன் தவிரக் கனடா, ஜமைக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அவர் தலைவராக இருந்தார்.


- 53 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவரும் ஆவார்


- தான் மகாராணியாக இருந்த காலகட்டத்தில், இங்கிலாந்தில் இதுவரை 15 பிரதமர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் எலிசபெத். கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ் மரியாதை நிமித்தம் எலிசபெத் மகாராணியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் லிஸ் ட்ரஸை புதிய பிரதமராக அறிவித்தார் மகாராணி.

with kamal

- மகாராணி எலிசபெத் இதுவரை 1961, 1983 மற்றும் 1997 என முறையே மூன்று முறை இந்தியா வந்துள்ளார். இதில் 1997ம் ஆண்டு கமலின் மருதநாயகம் படத் தொடக்கவிழாவில் கலந்து கொண்டார்.


- பிரிட்டனில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவதற்கான அதிகாரம் பெற்றிருந்த ஒரே நபர் ராணி எலிசபெத் மட்டுமே.


- இவருக்கு பிடித்தமான நாய் இனம் கோரிஸ் (Corgis) ஆகும். தான் வளர்த்த கோரி எனும் நாயையும் தனது சகோதரி இளவரசி மார்க்ரெட்டின் டச்ஹூண்ட் என்ற நாயுடன் இனப்பெருக்கம் செய்ய வைத்து டோர்கி என்ற ஒரு புதிய இனத்தை உருவாக்கினார்.


- ராணி எலிசபெத்திற்கு புறா பந்தயம், புட்பால் விளையாடுவது, குதிரை ஓட்டுவது உள்ளிட்டவை பொழுதுபோக்குகள் ஆகும்.


- மகாராணியாக ஆட்சி செலுத்துவது ஒருபுறம் இருக்க, பேஷன் உலகிலும் பலரது கவனத்தை ஈர்த்தவை அவரது உடைகள். ஒவ்வொரு விழாவிற்கும் ஒவ்வொரு மாதிரி விதவிதமான உடை அணிந்து வருவதில் எலிசபெத்திற்கு ஆர்வம் அதிகம். இப்படி உடைகளை மாற்றி மாற்றி அணிந்தாலும் கூட, கடந்த 60 ஆண்டுகளாகவே அவர் ஒரே மாதிரியான ஹேண்ட் பேக்கையே பயன்படுத்தி வந்தார் எலிசபெத்.


- உலக நாடுகளுக்கு எங்குச் சென்றாலும் அவர், அந்த ஒரே சிறிய கருப்பு நிற ஹேண்ட் பேக்கையே பயன்படுத்தி வந்தார். அந்த மாடல் அவரது தாயார் அவருக்குப் பரிசளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

handbag

- ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


- கூடவே, தற்போது இருக்கும் பிரிட்டன் தேசிய கீதம் "God Save the Queen" என்பதிலிருந்து "God Save the King" என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், இனி பிரிட்டன் நாட்டின் ஆட்சி மகாராணி (எலிசபெத்) கையில் இருந்து, மன்னர் (சார்லஸ்) கைக்கு மாற்றமடைந்துள்ளது.


- மகாராணி எலிசபெத் காலமானால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த திட்டத்தை 1960களில் இருந்தே பிரிட்டன் அரசு திட்டமிட்டு வைத்துள்ளது. இதனை ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று குறிப்பிடுகின்றனர்.


- எலிசபெத் உயிரிழந்தால், அதனை முதலில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது அந்த திட்டத்தில் ஒன்று. அதன் பின்னர் அது அவரது தனிப்பட்ட செயலாளருக்குத் தெரிவிக்கப்படும். அவர் பாதுகாப்பான தொலைப்பேசி இணைப்பில் பிரதமரைத் தொடர்பு கொண்டு, "லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்" என்ற வாக்கியத்தைத் தெரிவிப்பார். அதன் பின்னர் அமைச்சரவை செயலாளர் மூலம் மற்ற அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்படும்.


- மகாராணி எலிசபெத் மறைவு குறித்து இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பிரிட்டன் ராணி நம் காலத்தில் வாழ்ந்த மிகுந்த மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். தனது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தலை சிறந்த ராணியாக பொறுப்பேற்றிருந்தார். பொது வாழ்க்கையில் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடித்து வந்தார். அவருடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கும் , இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


- ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனத் தெரிகிறது. முதலில் விஐபிக்களும், அதனைத் தொடர்ந்து 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.


மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படும்.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற