கார்கில் போரில் காலை இழந்து, செயற்கைக் காலுடன் மரத்தான் ஓடி லிம்கா சாதனை புரிந்த மேஜர்!
என்னைப் போன்றவர்களை பொதுவாக உடல் ரீதியான சவால் உடையவர்கள் (physically challenged) என்று அழைக்கிறார்கள். ஆனால், நாங்கள் எங்களை சாலஞ்சர்ஸ் என்றே நம்புகிறோம். நாங்கள் உடல் உறுப்புகளை இழந்தாலும், வாழ்க்கையில் அனைத்து தடைகளையும் உடைத்து, அச்சத்தை வென்று, சராசரி மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறோம்.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இமயமலையின் உயரமான பகுதியில் 1999ஆம் ஆண்டு மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது கார்கில் போர். அப்போது, தசைகள் பிய்ந்து தொங்க, எலும்புகள் நொறுங்கி, வயிறு கிழிந்து குடல்கள் வெளியே தெரிய 25வயதான மேஜர் தேவேந்தர்பால் சிங்கை, சக வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்து அங்கிருந்த ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரைப் பார்த்த ராணுவ மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்து, அவரது உடலை தற்காலிக சவக்கிடங்கில் வைக்குமாறு கூறினார்.
ஆனால், மேஜர் சிங் இறக்கவில்லை. அவர் இறக்கவும் விரும்பவில்லை. வாழவேண்டும். எப்படியாவது பிழைத்து விடவேண்டும் என அந்தச் சூழலிலும் நம்பிக்கையுடன் இருந்தார். நம்பிக்கை உடையவர்களை இறைவன் என்றும் கை விடுவதில்லை என்பதற்கிணங்க, அங்கு வந்த மற்றொரு மருத்துவர் மேஜர் சிங் உயிருடன் இருப்பதைக் கண்டறிந்தார்.
பொதுவாக, ராணுவ பீரங்கியின் குண்டு வீச்சில் 8 அடிக்குள் சிக்கிய யாரும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் மேஜர் சிங் உயிருடன் இருந்தார். அந்த குண்டு அவர் அருகே விழுந்து அவரை சின்னாபின்னமாக்கி புதைக்க முயற்சித்தது. ஆனால் அவர் முழு நம்பிக்கையுடன் எப்படியும் பிழைத்தெழ வேண்டும் என தீவிர நம்பிக்கைக் கொண்டார்.
தொடர்ந்து மேஜர் சிங்கிற்கு மருத்துவச் சிகிச்சை தொடங்கப்பட்டது. கிழிந்து தொங்கிய அவரது வயிற்றில் சிதைந்திருந்த குடல் பாகங்கள் அகற்றப்பட்டன. அவரது கால் முற்றிலும் சேதமடைந்திருந்ததால் வேறுவழியின்றி அகற்றப்பட்டது. இவ்வாறு பல்வேறு பாகங்களை அகற்றியும், தீவிர சிகிச்சையளித்தும் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது.
தொடர்ந்து 1 வருட காலம் மருத்துவமனையில் இருந்து மேற்கொண்ட தீவிர சிகிச்சையின் பலனாக மேஜர் சிங் பிழைத்துவிட்டார். ஆனால், அவரால் எழுந்து நடமாடத்தான் முடியுமா என்பது தெரியவில்லை என அவரது நண்பர்களும், உறவினர்களும் பேசிக் கொண்டனர்.
அப்போதுதான் மேஜர் சிங் தனது மனதில் உறுதிபூண்டார். நான் ஏன் எழுந்து நடக்கவேண்டும். நான் ஓட வேண்டும். சமுதாயத்தில் முன்னுதாரணமாக வாழவேண்டும் என நினைத்தார்... நினைத்ததை செய்தும் காட்டிவிட்டார்...
ஆம்…அவர் மரணத்தை வென்றது ஓர் ஆச்சரியமான கதை என்றால், இன்று அவர் 'இந்தியன் பிளேட் ரன்னர்' என்று அழைக்கப்படும் பிரபலமான மாரத்தான் ஓட்ட வீரர். 16 ஆண்டுகளாக பல்வேறு மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று வருகிறார். மேலும், அவர் ஓட்டத்தில் லிம்கா சாதனையும் படைத்துள்ளார்.
சூழ்நிலையை விரைந்து உள்வாங்கிக் கொள்ளும் அவரது குணமே அன்று அவர் உயிரைக் காப்பாற்றியது. இன்று அவரை ஓர் சாதனையாளராக மாற்றியுள்ளது. அவர் தற்போது தனது இரண்டாவது வாழ்க்கையை வெற்றிகரமாக வாழக் கற்றுக் கொண்டுள்ளார்.
நான் எனது நிலை குறித்து வருந்தி முடங்கியிருந்தால், வாழ்க்கை என்னை முடக்கியிருக்கும். நான் எனது உடலை ஓர் இயலாமை எனப் பார்க்கவில்லை. இதை ஓர் சவாலாகவே பார்த்தேன். இந்தியன் பிளேட் ரன்னரான எனது மாற்றம், ஓர் இரவில் நடைபெறவில்லை. நான் இவ்வாறு ஊனமுற்றதற்கு முன்பு திறமையான ஓட்டப் பயிற்சியாளரும் அல்ல. ஆனால் என் காயங்களுக்கு அப்பால் செல்ல, என்னை நானே ஊக்குவித்துக்கொள்ள ஓட விரும்பினேன் என்கிறார்.
மேலும், புரோஸ்தெடிக் காலால் (செயற்கை பிளேடு கால்) ஓடுவது மிகவும் வேதனையாக இருந்தது. அவ்வப்போது கீழே விழும்போதெல்லாம் அதனை ஓர் பாடமாகவும், எனது விடாமுயற்சிக்கு கிடைக்கும் சோதனையாகவும் எடுத்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் முயற்சித்தேன் என அவர் தனது ஊனத்தை விடாமுயற்சியால் வென்றது குறித்து நினைவு கூர்கிறார்.
இதுவரை அவர் 20 மாரத்தான்களுக்கு மேல் ஓடியுள்ளார். அவர் ஓடும்போது, பொதுவாக தனது செயற்கைக் காலை மறைக்கமாட்டார். பார்வையாளர்கள் ஆச்சரியத்தில் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தாலும், அது அவரை எந்தவொரு விதத்திலும் தொந்தரவு செய்யாது, நானும் உங்களை போல ஓர் சராசரி மனிதன் தான் என கருமமே கண்ணாக அவர் தனது ஓட்டத்தைத் தொடர்கிறார்.
மேலும் மேஜர் சிங் ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளர், இந்தியா முழுவதும் உள்ள ஊனமுற்றோரை தனது பேச்சால் அவர் ஊக்குவிக்கிறார். தி சேலஞ்சிங் ஒன்ஸ் என்ற ஓர் குழுவையும் உருவாக்கி, நிர்வகித்து வருகிறார்.
இதேபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் வாழும் மற்றவர்களை ஊக்குவிப்பதற்காகவே நான் இந்த குழுவைத் தொடங்கினேன். விளையாட்டு நம்பிக்கையை வளர்க்கவும், இயலாமையை வெற்றி கொள்ளவும் இது உதவுகிறது என்கிறார்.
மேலும், என்னைப் போன்றவர்களை பொதுவாக உடல் ரீதியான சவால் உடையவர்கள் (physically challenged) என்று அழைக்கிறார்கள். ஆனால், நாங்கள் எங்களை challengers என்றே நம்புகிறோம். நாங்கள் உடல் உறுப்புகளை இழந்தாலும், வாழ்க்கையில் அனைத்து தடைகளையும் உடைத்து, அச்சத்தை வென்று, சராசரி மனிதர்களின் வாழ்க்கையை வாழ்கிறோம் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
இவரைப் போன்ற வாழ்க்கையை வெல்ல வேண்டும் என்ற போராட்டக் குணம் உடையவர்களை இயற்கையே முடக்க நினைத்தாலும் முடியாது. இவர்கள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு செல்லும் காட்டாற்று வெள்ளம் போன்றவர்கள். தன் வாழ்க்கையையே உதாரணமாக்கி, சாலஞ்சர்ஸாக மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார் மேஜர் சிங்.
ஆங்கிலத்தில் மாலவிகா வேலயானிகல் | தமிழில் திவ்யாதரன்