காணாமல் போன 76 குழந்தைகளை கண்டுபிடித்து பதவி உயர்வு பெற்ற பெண் காவலர்!
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியின் மகளான சீமா டாக்கா டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த 76 குழந்தைகளை கண்டுபிடித்து பதவி உயர்வு பெற்றுள்ளார்.
டெல்லியில் உள்ள சமய்புர் பதலி காவல் நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக பணிபுரிகிறார் சீமா டாக்கா. இவர் காணாமல் போன 76 குழந்தைகளைக் கண்டுபிடித்ததற்காக இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்தன. இது தொடர்பான வழக்குகள் அதிகம் பதிவானதால் காவல்துறை ஒரு ஊக்கத்திட்டத்தை அறிவித்தது. இதன்படி காணாமல் போன குழந்தைகளில் குறைந்தது 50 குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என ஆகஸ்ட் மாதம் டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் பல குழந்தைகளை மீட்க முடிந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்கின்றனர்.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சீமா. விவசாயியின் மகளான இவருக்கு காவல்துறையில் சேரவேண்டும் என்பதே கனவு. 2006ம் ஆண்டு இவரது கனவு நனவாகும் வகையில் டெல்லி காவல்துறையில் சேர வாய்ப்பு கிடைத்தது. தென்கிழக்கு டெல்லியில் நியமிக்கப்பட்ட இவர் பாலியல் வன்முறை வழக்குகளையும் கையாண்டுள்ளார்.
தற்போது இவர் கண்டிபிடித்துள்ள 76 குழந்தைகளில் 56 குழந்தைகள் 14 வயதிற்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளும் இதில் அடங்குவர்.
சீமாவின் செயலைப் பாராட்டி அவருக்கு உதவி துணை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது முதல் இதன் மூலம் பலனடைந்து பதவி உயர்வு பெற்ற முதல் அதிகாரி சீமா என்பது குறிப்பிடத்தக்கது.
“என்னுடைய முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கிறது,” என்று ஊடகங்களிடம் சீமா தெரிவித்துள்ளார்.
இவரது சாதனையைப் பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA