ரயிலில் பயணித்த குழந்தையின் பசியை போக்க வீட்டிலிருந்து பால் எடுத்து வந்த பெண் காவலர்!
ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் பயணித்த நான்கு மாத குழந்தைக்கு பால் வேண்டும் என்று குழந்தையின் அம்மா கேட்டதால் வீட்டிற்கு விரைந்து பால் கொண்டு வந்து கொடுத்துள்ளார் சுஷீலா பாதாயிக்.
வெளிமாநில தொழிலாளர்களும் தினக்கூலிகளும் ஊரடங்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து இவர்கள் வீடு திரும்ப அரசு 'ஷ்ரமிக்’ சிறப்பு ரயில் ஏற்பாடு செய்தது.
பெங்களூரு-கோரக்பூர் வழித்தடத்தில் சென்ற இந்த ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் நான்கு மாத குழந்தைக்குத் தாயான மெஹருன்னிசா பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ரான்சியில் உள்ள ஹதியா ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் குழந்தைக்கு பால் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அன்று காலை நேரத்தில் ஏஎஸ்ஐ சுஷீலா பாதாயிக் பணியில் இருந்தார். அவர் இந்தத் தாயின் தேவையைப் புரிந்துகொண்டார். உடனே குழந்தைக்காக எப்படியாவது பால் கொண்டு வரத் தீர்மானித்தார் சுஷீலா. தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று ஒரு பாட்டிலில் பால் எடுத்து வந்துள்ளார்.
“குழந்தை அழுதுகொண்டிருந்தது. நான் பால் எடுத்துவர வீட்டிற்கு விரைந்தேன்,” என்று `ஜீ நியூஸ்’ வீடியோ பதிவில் பாதாயிக் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே அமைச்சகம் இதுகுறித்து ட்வீட் செய்துள்ளது. டிவிஷனல் ரயில்வே மேலாளர் ட்வீட் செய்கையில்,
“2020 ஜூன் மாதம் 14-ம் தேதி பெங்களூருவில் இருந்து கோராக்பூர் சென்று கொண்டிருந்த ரயில் எண்.06563 ஷ்ரமிக் சிறப்பி ரயில் காலை 6 மணியளவில் ஹதியா ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பெண் பயணி ஒருவர் தன்னுடைய நான்கு மாதக் குழந்தை பசியுடன் இருப்பதாகவும் பால் வேண்டுமென்றும் பாதாயிக்கிடம் கேட்டுள்ளார். இதைக் கேட்ட சுஷீலா பாதாயிக் தன் வீட்டிற்குச் சென்று பால் கொண்டு வந்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்,” என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் மக்கள் உடலால் விலகியிருப்பதை வலியுறுத்தினாலும் இதுபோன்ற மனிதநேயமிக்க செயல்கள் உள்ளத்தால் ஒருவரோடொருவர் நெருக்கமாக இருப்பதையே உணர்த்துகிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA