சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவளிக்கும் தாபா உரிமையாளர்!
ஆதித்யா ராஜ் தாபா தினமும் 500 முதல் 700 பேருக்கு இலவசமாக உணவளிக்கிறது.
ஊரடங்கு காரணமாக வருவாயின்றி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியின்றி நடந்தே சொந்த ஊர் திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடலும் மனதும் சோர்ந்துபோன நிலையில் இவர்கள் பசியால் வாடுவது மேலும் வேதனையளிக்கிறது.
இவர்களது நிலையைக் கண்டு பலரும் இவர்களுக்கு உதவி வருகின்றனர். அந்த வகையில் பீஹார் மற்றும் உத்திரப்பிரதேச எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தாபா ஒன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறது.
சரண் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதித்யா ராஜ் தாபா தினமும் சுமார் 500 முதல் 700 பேருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. இந்த தாபாவின் உரிமையாளர் பசாந்த் சிங் அனைவருக்கும் இலவச உணவு வழங்குவதற்காக தாபாவில் பணம் செலுத்தும் இடத்தை பூட்டியே வைத்துள்ளார்.
இவர் சாலையோரத்தில் அமைந்துள்ள தனது தாபாவில் சாப்பிடுபவர்களிடம் பணம் வாங்குவதில்லை. உணவகத்தில் முறையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்கிறார். இவர் மக்களுக்கு நிறைவான உணவு வழங்குவதுடன் பயணத்தின் இடையே சாப்பிட ஸ்நாக்ஸ் வகைகளையும் கொடுத்து அனுப்புகிறார்.
“ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் உத்திரப்பிரதேசம் வழியாக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் பீஹார் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளுக்கு வருகின்றனர். பணமின்றி தவித்த சில தொழிலாளர்கள் சில நாட்களுக்கு முன்பு என்னை அணுகி சாப்பாடு கேட்டனர். அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியபோது மனம் நிறைவாக இருந்தது. அப்போதிருந்து இதுபோன்று இலவசமாக உணவளிக்கத் தொடங்கினேன்,” என்று IANS-இடம் பசந்த சிங் தெரிவித்துள்ளார்.
காலையில் இங்கு வரும் தொழிலாளர்களுக்கு வெல்லம் கலந்த ‘குர்-சிவாடா’ என்கிற உணவு வகை கொடுக்கப்படுகிறது. மதியம் மற்றும் இரவு வேளைகளில் சாதம், பருப்பு, காய்கறிகள் என முழுமையான உணவு பரிமாறப்படுகிறது. இங்கு சமையல் செய்பவர்கள்கூட சேவை நோக்கோடு பணிபுரிவதால் சம்பளம் வாங்க மறுத்துவிட்டனர்.
ஜார்கண்டின் பலமு மாவட்டத்தின் சன்பூர் பகுதியைச் சேர்ந்த மோகன் டெல்லியில் இருந்து வந்துள்ளார். வரும் வழியில் பலர் பூரி, கச்சோரி மற்றும் இதர ஸ்நாக்ஸ் வகைகளை கொடுத்துள்ளனர். சிங் நடத்தும் தாபாவில் மட்டுமே சாதம், பருப்பு என முழுமையான உணவு வழங்கப்பட்டதாக இவர் தெரிவிக்கிறார். இவர் 25 பேர்களுடன் சொந்த கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
“சிங் கொடுத்த உணவு மிகவும் சுவையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு சுவையான உணவை சாப்பிட்டேன்,” என்று Edex Live-இடம் மோகன் தெரிவித்துள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA