IMDb 'டாப் 10 இந்திய திரை நட்சத்திரப் பட்டியல்' - நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்தது எப்படி?
இந்தியாவில் 2022-ம் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய திரைப்பட நட்சத்திரங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது ஐஎம்டிபி (IMDb) தளம். இதில், தமிழ் நடிகரான தனுஷ் முதலிடம் பிடித்திருக்கிறார்.
உலக அளவில் சினிமா, வெப் சீரிஸ், திரை நட்சத்திரங்கள் தொடர்பான தகவல்களையும் தரவுகளையும் வழங்கும் தளம்தான் ஐஎம்டிபி. வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் இந்தத் தளம் வெளியிடும்.
அந்த வகையில், 2022-ம் ஆண்டின் மிகவும் பிரபலமான டாப் 10 இந்திய திரை நட்சத்திரங்களின் பட்டியலை IMDB வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் முதலிடம் வகித்துள்ளார்.
டாப் 10 நட்சத்திரங்கள் பட்டியல்
- தனுஷ்
- ஆலியா பட்
- ஐஸ்வர்யா ராய்
- ராம் சரண்
- சமந்தா
- ஹ்ரித்திக் ரோஷன்
- கியாரா அத்வானி
- ஜூனியர் என்.டி.ஆர்
- அல்லு அர்ஜுன்
- யஷ்
மதிப்பிடப்படுவது எப்படி?
எந்த அடிப்படையில் ஆண்டின் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது என்பதையும் ஐஎம்டிபி தளம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
“ஐஎம்டிபியில் 2022 ஆண்டு முழுவதும் வாராந்திர தரவரிசைப் பட்டியலில் தொடர்ச்சியாக முன்னிலை வகிக்கும் நட்சத்திரங்களின் அடிப்படையில் டாப் 10 பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசைகள் என்பது 20 கோடி எண்ணிக்கையிலான மாதாந்திர பயனர்களின் மூலம் பேஜ் வியூஸின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது,” என்று ஐஎம்டிபி தெரிவித்துள்ளது.
அதாவது, உலக அளவில் தேடுதல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஐம்எம்டி தளத்தில் எந்தெந்த இந்திய திரை நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள், தரவுகள் அதிக அளவில் பார்க்கப்பட்டுள்ளன, கருத்துகள், பட ரேட்டிங்கும் பயனர்களால் இடப்பட்டுள்ளன உள்ளிட்ட அம்சங்களும் இங்கே கருத்தில் கொள்ளப்படுகின்றன.
தனுஷ் முதலிடம் எப்படி?
இந்த டாப் 10 பட்டியலைப் பார்க்கும்போது, ‘பான் இந்தியா’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர்களே அதிகம் இடம்பெற்றுள்ளதை கவனிக்கலாம். ராம் சரண், சமந்தா, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் மற்றும் யஷ் ஆகியோர் அனைவருமே பான் இந்தியா படங்கள் மூலம் 2022-ல் கவனம் ஈர்த்தவர்கள். இவர்களின் படங்கள் மீதான இந்திய அளவிலான எதிர்பார்ப்பும் எகிறியிருந்தன; பாக்ஸ் ஆபிஸிலும் வசூலைக் குவித்து வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆலியா பட் பொறுத்தவரையில் இந்த ஆண்டு கங்குபாய், ஆர்ஆர்ஆர், பிரம்மாஸ்திரா, டார்லிங்ஸ் என நான்கு படங்களில் நடித்துள்ளார். இதனால், எளிதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் ஆச்சரியமளிக்கும் வகையில் மூன்றாம் இடத்தில் வகிக்கிறார் ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது இதற்கு முக்கியக் காரணம்.
சமந்தாவின் கரியரைப் பொறுத்தவரையிலும் 2022-ல் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் பான் இந்தியா படமான ‘யசோதா’வில் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு ஜூனில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ சீரிஸும் சமந்தாவை ஓடிடி மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய நடிகர்கள் பலரும் பான் இந்தியா மூலம் தேச அளவில் தடம் பதிக்க முற்பட்ட சூழலில், தமிழ் நடிகரான தனுஷ் ஹாலிவுட்டுகே பறந்தார். ‘தி கிரே மேன்’ ’The Gray Man' படம் மூலம் உலக அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். அந்தப் படத்தில் தனுஷ் செய்தது ஓர் உறுதுணை கதாபாத்திரம்தான் என்றாலும், அதன் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பும், தனுஷின் அசால்டான நடிப்பாற்றலும் ஹாலிவுட்டில் ‘யார்றா இது?’ அசரடித்தது.
இதனால், இந்தியாவைத் தாண்டியும் ரசிகர்கள் அதிகம் தகவல்களைத் தேடிப் படித்தது இவர் குறித்துதான். இதுவும் ஐஎம்டிபி தளத்தில் முதலிடம் வகிக்க முதன்மைக் காரணம்.
தமிழில் ‘மாறன்’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், ‘திருச்சிற்றம்பலம்’ வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் தனுஷுக்கு மிகப் பெரிய ஹிட்டடித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
டாப் 10 கூகுள் தேடலில் ‘விக்ரம்’
இதனிடையே, 2022-ம் ஆண்டு கூகுள் தளத்தில் இந்திய ரசிகர்கள் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
- பிரம்மாஸ்திரா: பாகம் 1 - சிவா
- கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2
- தி காஷ்மீர் ஃபைல்ஸ்
- ஆர்ஆர்ஆர்
- காந்தாரா
- புஷ்பா
- விக்ரம்
- லால் சிங் சத்தா
- த்ரிஷ்யம் 2
- தோர்
Edited by Induja Raghunathan