Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'நடிப்பசுரன்' தனுஷ் வெற்றிக்கு வித்திட்ட 10 காரணங்கள்!

'நடிப்பசுரன்' தனுஷ் வெற்றிக்கு வித்திட்ட 10 காரணங்கள்!

Sunday July 28, 2019 , 5 min Read

தனுஷ்... 'மாஸ்' காட்டுவதில் மட்டுமின்றி 'க்ளாஸ்' லெவலில் முத்திரைப் பதிக்கும் நடிகர். இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், திரைக்கதையாசிரியர் மற்றும் 'பொயட்டு' என திரைத்துறையில் பன்முகம் கொண்டவர்.


தமிழ் சினிமாவை இந்திய அளவில் கவனம் பெறவைப்பதில் முனைப்புக் காட்டும் கலைஞர்களில் முதல் வரிசையில் இருக்கும் தனுஷ், தன் திரை வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை உறுதியோடு எதிர்கொள்பவரும்கூட. தற்காலிகப் பின்னடைவுகளைத் தகர்த்து எப்போதும் முன்னிலை வகிக்கும் தனுஷின் வெற்றிக்குப் பின்னால் 10 காரணிகள் இருக்கின்றன. அவற்றை உற்று நோக்கினால் எத்துறையைச் சேர்ந்தவர்களும் பின்பற்றத்தக்க வெற்றிச் சூத்திரங்கள் நிச்சயம் கிட்டும்.

dhanush

1. சார்ந்திருக்கத் தவற வேண்டாம்


தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. படிப்பில் பெரிதாக ஈடுபாடு இல்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம். அப்பா கஸ்தூரி ராஜா - அண்ணன் செல்வராகவனின் பங்களிப்புடன் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' தான் முதல் படம். பர்சனலோ, புரொஃபஷனலோ தனியாக நிமிரும் வரையில் உறவுகள், நட்புகளைச் சார்ந்திருப்பதே சரி எனும் விதமாக திரைத்துறையில் தடம் பதிக்கத் தொடங்கினார் தனுஷ்.


முதல் படம் மிகப் பெரிய வெற்றி. இரண்டாவதாக, அண்ணன் செல்வராக தன் பெயருடன் நேரடியாக இயக்கிய 'காதல் கொண்டேன்' படமும் மகத்தான வெற்றி. அதன் பின்னரே, தனித்து இயங்க ஆரம்பித்தார் தனுஷ்.


2. புறத்தைப் புறம் தள்ளலாம்


"உங்கள் அழகுதான், உங்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவியக் காரணமாக இருந்ததா?" என்று ஒருமுறை மோனிகா பெல்லூசியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்: "அழகு என்பது ஐந்து நிமிட ஈர்ப்பு விஷயம். அவ்வளவுதான். திறமைதான் மேட்டர்" என்றார் சிம்பிளாக. ஆம், தனுஷை முதல் படத்தில் பார்த்தவர்கள் "இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா நடிக்க வந்துடுச்சு" என்ற நக்கல்கள் எழுந்தன. அவர்களே 'காதல் கொண்டேன்' கண்டதும் "என்னமா பின்றான்யா!" என்று வாய்ப்பிளர்ந்தனர்.


தனுஷ் அடிக்கடி சொல்வதுபோலவே அவரே பார்க்கப் பார்க்க அழகாக மாறியவர்தான். புறம் ஒரு விஷயமே இல்லை எனப் புறந்தள்ளிவிட்டு, திறமை எனும் அகத்தை மட்டுமே நம்பி முன்னுக்கு வந்தவர் தனுஷ்.


3. தனித்து நிற்கப் பழகு


இரண்டு படங்களில் வெற்றிகளை உறுதி செய்த பிறகே நம்பிக்கையுடன் தனித்து இயங்கத் தொடங்கினார் தனுஷ். மூன்றாவதாக வெளியான 'திருடா திருடி'யும் வசூலைக் குவித்தது. அத்துடன், பக்கத்துவீட்டுப் பையன்போன்ற நெருக்கத்தை தமிழக மக்களிடம் கொடுத்தது. அதில் இடம்பெற்ற 'மன்மதராசா' பாடலுக்கு தனுஷ் ஆடிய நடனம் தெறிக்கவிடும் ரகம். வெற்றி - தோல்விகள் எனத் தட்டுத் தடுமாறினாலும் தனித்து நிற்கப் பழகிக்கொண்டார் தனுஷ்.


4. சுயபரிசோதனை முக்கியம்


தன்னை ஒரு வெற்றி நாயகனாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று நினைத்து, கண்மூடித்தனமாகக் களமாடுவது தவறு என்பதை ஆரம்பக் காலத்திலேயே உணர்ந்துகொண்டார் தனுஷ். அதை அவருக்கு உணர்த்திய படம் 'சுள்ளான்'.


தன்னுடைய பலமே இயல்பான களத்தில் யதார்த்தம் மீறாத நடிப்புதான் என்பதை உணர்த்தியது சுள்ளானின் மிகப் பெரிய தோல்வி. அதன்பின் பாலு மகேந்திராவின் 'அது ஒரு கனாகாலம்' வணிக வெற்றியைப் பெறாவிட்டாலும், தனுஷின் நடிப்புத் திறனுக்குத் தீனியாகவே அமைந்தது. அதேபோல், அப்போது பெரிதாக கவனிக்கப்படாமல் இன்று வரை சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் 'புதுப்பேட்டை'யும் தனுஷின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றானது.


5. பின்பற்றத்தக்க 'பேலன்ஸ்'


ஒரு பக்கம் 'க்ளாஸ்' பெர்ஃபார்மன்ஸ்களைக் கொடுத்து நடிப்பில் தனித்துவம் காட்டுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் மறுபுறம் 'மாஸ்' காட்டி வர்த்தக ரீதியில் வெற்றிகளைப் பெற வேண்டியதும் அவசியம். தீவிர சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, எளிய ரசிகர்கள் படையைத் திரட்டிவைப்பதுதான் தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனான தொடர்ந்து வலம்வர வழிவகுக்கும் என்பதை உணர்ந்து ப்ரொஃப்ஷனலில் 'பேலன்ஸ்' காட்டுவதில் கச்சிதமாக செயல்பட்டார் தனுஷ்.


'திருவிளையாடல் ஆரம்பம்' தொடங்கி மாரி சீரிஸ் வரை மாஸ் காட்டுவது ஒரு பக்கமும், 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன', 'வட சென்னை' என மறுபக்கம் க்ளாஸ் பெர்ஃபார்மன்ஸ்களை வெளிப்படுத்துவதும் தனுஷ் தன் இடத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்குப் பெருந்துணை புரிந்திருக்கிறது.


சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதன் விளைவுதான் மொழிகள் கடந்து இந்தியில் 'ராஞ்சனா'வும், அமிதாப் உடன் 'ஷமிதாப்'பிலும் அசத்த முடிந்தது. அந்தப் பயணம், ஆங்கிலத்தில் 'எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' வரை தனுஷை அழைத்துச் சென்றது.


6. 'மல்டிடாஸ்க்' நிர்வகித்தல்


எந்த ஒரு துறையிலும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது அசாத்திய முன்னேற்றத்தை தந்துவிடாது. ஆம், சினிமாவில் மல்டி டாஸ்க் என்பது நிச்சயம் தேவை. இதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தனுஷ் அவ்வப்போது தயாரிப்பு, இயக்கம், திரைக்கதையாக்கம், பாடல்கள் இயற்றுதல், பாடுவது என பன்முகத் தன்மையை நிறுவி வருகிறார்.


வெவ்வேறு விஷயங்களை வெறுமனே தொடுவது மட்டுமே போதாது; அவற்றில் முழுமையாக ஆற்றலை வெளிப்படுத்தினால்தான் பலன் கிடைக்கும் என்பதற்கு தனுஷின் ஆளுமையே சான்று. 'ஒய் திஸ் கொலவெறி' உலக அளவில் உலா வந்ததும் 'பொயட்டு' தனுஷின் வியத்தகு வேட்கையின் விளைவு. 'பா.பாண்டி' எனும் படைப்பு, எதிர்காலத்தில் ஆகச் சிறந்த இயக்குநர் ஒருவர் தமிழில் தடம் பதிப்பார் என்ற கணிப்புக்கான அடித்தளம்.


7. உங்கள் துறையை உயர்த்துக


ஒரு துறையில் வெற்றி பெறுகிறோம் என்றால், அந்தத் துறையின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் பங்கு வகிப்பதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில், திரைத்துறையில் கோலோச்சத் தொடங்கிய தனுஷ், தமிழில் நல்ல படைப்புகளைத் தயாரிக்க பணம் முதலீடு செய்ய முன்வந்தார். நல்ல படைப்புகளும் கிடைத்தன; அதற்கான அங்கீகாரும் அவருக்குக் கிடைத்தது. 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற தனுஷ், 'காக்கா முட்டை' படத்துக்காக சிறந்த சிறார் திரைப்படத்துக்கான தேசிய விருதையும், 'விசாரணை' படத்துக்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் தயாரிப்பாளர் என்ற முறையில் வென்றார். ஒருபக்கம் நல்ல சினிமாவைத் தயாரிப்பவர், சிவகார்த்திகேயன் போன்றோருக்கு தமிழ் சினிமாவில் சிவப்புக் கம்பளம் விரிக்கவும் தவறவில்லை. 


8. போட்டியை சமாளித்தல்


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் உதிப்பதும் உயர்வதும் தானாக அமையும் அல்லது ரசிகர்களால் கட்டமைக்கப்படும் போட்டியின் அடிப்படையில்தான். அதனைப் பக்குவமாக அணுகுவதில் புதைந்திருக்கிறது ஒரு ஸ்டாரின் நீடித்த வெற்றி. ஆம், எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய் வரிசையில் தனுஷ் - சிம்பு என்ற போட்டிக்களம் உருவெடுத்ததும், அதை நேர்த்தியாக அணுகியதும் தனுஷின் வெற்றிக்கு உறுதுணைபுரிந்தது. இந்த ஒப்பீட்டில் மாஸ் - க்ளாஸ் பெர்ஃபார்மன்ஸ்களால் முந்துவது மட்டுமின்றி, தன் போட்டியாளரான சிம்புவை நேரில் நேர்த்தியாக சமாளிப்பதிலும் தனுஷ் பக்கா.


9. அமைதி காத்திடு


எந்த ஒரு பிரச்னையும் நம்மால் உருவானாலும் சரி, பிறரால் உருவாக்கப்பட்டாலும் சரி... நிதானமாக எதிர்கொள்ளாத பட்சத்தில் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். தனுஷ் சந்தித்த சங்கடங்களில் மிக முக்கியமானது, ஒரு வயதான தம்பதி, தனுஷை தங்கள் மகன் எனக் கோரி தொடுத்த வழக்கு. அதுகுறித்து பொதுவெளியில் பேசாது அமைதி காத்து, மிக நிதானமாக சட்ட ரீதியாக தனுஷ் எதிர்கொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.


அதேபோல், 'சுச்சி லீக்ஸ்' சர்ச்சையும் அந்தரங்கப் படங்களும் வெளியானபோது, பொதுமக்களிடையே தன் இமேஜுக்குப் பங்கம் வராத வகையில், அமைதி காத்து மெளனம் சாதித்தே சிக்கலை எதிர்கொண்டது தெளிவான அணுகுமுறை. சர்ச்சை எழுந்து சீக்கிரமே ஓய்வதற்கு தனுஷின் பேரமைதியும் பெருந்துணைபுரிந்தது.


தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருந்தாலும், பொது வாழ்க்கையில் தன் இமேஜ் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வதிலும், சமூக வலைதளங்களைக் கையாள்வதிலும் தனுஷ் நிச்சயம் நேர்த்தியானவர்தான் என்பதில் சந்தேகமில்லை. 


10. அர்ப்பணிப்புதான் அடையாளம்!


"என் வாழ்க்கையில் எல்லாமே நானாகக் கற்றுக்கொண்ட ப்ராக்டிகல்தான். ஒரு விஷயத்தை முழுமையாக நம்ப வேண்டும். நம்பி இறங்கினால், அதிர்ஷ்டம் எல்லாம் தானாகப் பின்னால வரும்..."

இதுவே தனுஷின் வாழ்க்கை வாக்கியங்கள். 'நமக்குப் பிடிச்ச வேலையை செய்யணும்; இல்லாட்டி செத்துரணும்' என்று 'மயக்கம் என்ன' கார்த்தி சொல்வார். அப்படித்தான் தனுஷும் எதையும் அர்ப்பணிப்புடன் செய்வதில் உறுதியாக இருப்பவர். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அதுகுறித்து ஹோம் ஒர்க் செய்வது தொடங்கி உடல் மொழிகளைக் கற்பது வரையில், அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்வதற்கான அத்தனை வேலைகளையும் செய்வார். அந்த அர்ப்பணிப்புதான் 'ரஜினியின் மருமகன்' என்ற அடையாளத்தை மக்கள் மறந்திடக் காரணம். ஆம், தனுஷ் எப்போதும் தனுஷ்தான்!