’அண்டர்ப்ளே' நாயகன்: தமிழ் சினிமாவின் 'முதல்'வன் விஜய் ஆண்டனி!
| ஜூலை 24 - விஜய் ஆண்டனி பிறந்தநாள் சிறப்புப் பதிவு |
சவுண்ட் இன்ஜினீயராக திரைத்துறையில் அடியெடுத்து வைக்கிறார். தன்னுள் புதைத்துவைத்த இசை ஆர்வத்தை திறமையாக வளர்க்கத் தொடங்குகிறார். தன்னை ஓர் இசையமைப்பாளராக மேம்படுத்திக்கொண்ட பிறகும் முதல் பட வாய்ப்புக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்கிறார். ஒரு படத்தில் இசையமைக்க வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்துக்காக அனைத்துப் பாடல்களும் தயாராகிவிட்டது. தயாரிப்பு தரப்பில் இருந்தும் பாடல்களுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில், அந்தப் படத்துக்கு வேறொருவரை இசையமைப்பாளராக அறிவிக்கின்றனர்.
ஆம், இப்படி தோல்வியில்தான் தொடங்கியது திரைக் கலைஞர் விஜய் ஆண்டனியின் சினிமா வாழ்க்கை. ஆரம்பக்கட்ட தோல்விகளால் மன அழுத்தம். எனினும், கலை மீதான தாகத்துடன் மீண்டெழுந்து பயணித்ததன் விளைவு இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அங்கீகாரம்.
தெறிப்பிசைக் கலைஞர்
'சுக்ரன்' மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இதுவரை 35-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். எந்த சாயலும் இல்லாமல் தனித்துவ இசையை வழங்குவதில் முனைப்பு காட்டும் இவரது தெறிப்பிசைக்கு உலகமே தாளம்போட்டு நடனமாடியது.
'நாக்க முக்கா' பாடலை மறக்க முடியுமா என்ன?
கேன்ஸ், உலகக் கோப்பை கிரிக்கெட் என சர்வதேச அரங்கிலும் அதிரவைத்தது இப்பாடல். மறைந்த கவிஞர் அண்ணாமலையின் துடிப்பான பாடல் வரிகளில், விஜய் ஆண்டனியின் துள்ளலிசை தமிழ் சினிமாவில் தனி கெத்துக் காட்டியது. தெறிப்புகள் மட்டுமின்றி மெலடிகளை மீட்டுவதிலும் விஜய் ஆண்டனி வல்லவர். 30-க்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
நடிப்பில் கவனம் செலுத்திய பிறகும், தனது படங்களுக்குத் தானே இசையமைக்கவும் செய்தார். ஆனால், நடப்பாண்டு முதல் இசைக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிட்டு, நடிப்பில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் காரணம் இல்லாமல் இல்லை.
பல்கலை வித்தகர்
2012-ல் 'நான்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்'. இம்மூன்று படங்களுமே கவனித்தக்க வெற்றியைப் பெற்றன. நான்காவதாக வெளியான 'பிச்சைக்காரன்' வசூலை வாரி வழங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அம்மா சென்டிமென்ட் ரசிகர்களுக்கு உணர்வுமேலிடச் செய்தது.
ஆனால், அதன்பின் வெளியான 'சைத்தான்', 'எமன்', 'அண்ணாதுரை', 'காளி', 'திமிரு பிடிச்சவன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை ஈட்டவில்லை. எனினும், சமீபத்தில் வெளியான 'கொலைகாரன்' மீண்டும் தெம்பூட்டும் விதமாக அமைந்தது.
தான் நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு தயாரிப்பு, இசை, படத்தொகுப்பு என பல துறைகளையும் கவனித்தவர் விஜய் ஆண்டனி. வேலைப்பளு, நேரமின்மையின் காரணமாகவே இப்போது நடிப்பில் மட்டும் அதிகக் கவனம் செலுத்துவது என முடிவு செய்திருக்கிறார் போலும்.
விஜய் ஆண்டனி தெரிவு செய்து நடிக்கும் அனைத்துப் படங்களுமே வெற்றி - தோல்விகளைத் தாண்டி, வித்தியாமான அணுகுமுறையால் ஈர்க்கவல்லவை. அது, படத்தின் தலைப்பில் தொடங்கி காட்சி அமைப்புகள் வரையிலும் விரியும். சைக்கோ - க்ரைம் - த்ரில்லர், ரொமான்டிக் காமடி, சென்டிமென்ட், ஆக்ஷன் த்ரில்லர், பொலிட்டிகல் டிராமா என வெவ்வேறு ஜானர்களையும், கதைக்களமும் கொண்டவை.
கதைக்கும், திரைக்கதைக்கும் மட்டுமே விஜய் ஆண்டனி முக்கியத்துவம் கொடுப்பதை கவனிக்க முடிகிறது. இதுவே, தன்னை ஓர் நடிகராக நிலை நிறுத்திக் கொள்ளும் பக்குவமான உத்தியாகவும் கருதலாம்.
'அண்டர்ப்ளே' நாயகன்
விஜய் ஆண்டனி படங்களை விமர்சிக்கும்போது, அவரது நடிப்பாற்றலை குறைகூறுவதை கவனிக்க முடிகிறது. வித்தியாசமான பாவனைகளின்றி ஒரே மாதிரி உடல்மொழிகளுடன் ஒரே மாதிரியான மாடுலேஷனுடன் நடிக்கிறார் என்று தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார்.
ஆனால், இதிலும் ஒருவித தெளிவை அவரிடம் பார்க்க முடிகிறது. தனக்கு செட் ஆகக் கூடிய 'அண்டர்ப்ளே' நாயகனைக் கொண்ட கதைகளையே தேர்ந்தெடுத்து, நடிப்பில் தன்னால் எவ்விதமான டெலிவரியைத் தர இயலுமோ, அதை நிறைவாகத் தருவது என்பதில் உறுதியுடன் இருக்கிறார். அதைத்தான் செய்கிறார்.
எனவேதான், இந்த ஏழு ஆண்டுகளில், "விஜய் ஆண்டனி நடித்த படமா, நம்பிப் போகலாம்... ஏதோ ஒண்ணு வித்தியாசமான ட்ரீட் இருக்கும்" என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே அவரால் விதைக்க முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் அவரிடம் இருந்து மேம்பட்ட நடிப்புத் திறனை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
'முதல்'வன் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி தன் திரைப்படங்களில் காட்ட முனையும் அம்மா பாசம் வெறும் கவன ஈர்ப்புக்கான சென்டிமென்ட் ஆயுதம் அல்ல. தனது ஏழு வயதிலேயே தந்தையை இழந்தார். அப்போது அவரது தங்கைக்கு வயது ஐந்து. அந்தச் சூழலில், குழந்தைகளைக் குறையின்றி வளர்ப்பதிலேயே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார் விஜய் ஆண்டனியின் அம்மா. அந்தப் பேரன்புதான் விஜய் ஆண்டனியின் தாய்ப்பாச சென்டிமென்ட்டில் எதிரொலிப்பதை உணரலாம்.
திருச்சியில் இளங்கலைப் படிப்பை முடித்தபின்னர் சென்னையில் விஸ்காம் பயின்றார். பின்னர், சவுண்ட் இஞ்சினீயர், இசையமைப்பாளர் என படிப்படியாக முன்னேறி இப்போது கவனத்துக்குரிய நடிகராக வலம் வருகிறார். இந்தப் பின்னணிதான் தமிழ் சினிமாவில் பலரையும் முன்னுக்குத் தூக்கிவிடும் தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம், விஜய் ஆண்டனியின் பல படங்களில் இயக்குநர் தொடங்கி டெக்னீஷியன்ஸ் வரை பல புதுமுகங்களைப் பார்க்க முடியும். திறமையாளர்களை அடையாளம் கண்டு, முதல் வாய்ப்புகளை வழங்கும் வகையில் அவரும் ஒரு 'முதல்'வரே!
'பிச்சைக்காரன்' படத்துக்குப் பிறகு ப்ளாக்பஸ்டர் இல்லாமல் போனாலும் இதோ 'அக்னிச் சிறகுகள்', 'தமிழரசன்', 'காக்கி' என புதிய படங்கள் அணிவகுக்கின்றன. இதற்கு, ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் குறையாதது மட்டுமல்ல; விஜய் ஆண்டனியின் அணுகுமுறைகளும் முக்கியக் காரணம்.