கொரோனா வைரஸ் பற்றி பில் கேட்ஸ் ஏற்கனவே கணித்திருந்தாரா?
இது போன்ற கொடிய வைரஸ் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வழங்கிய டெட் உரை தற்போது வைரலாகி உள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி விரைவாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் தொற்று குறித்து சிலர் ஏற்கெனவே கணித்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இது போன்ற கொடிய வைரஸ் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் வழங்கிய டெட் உரை தற்போது மக்களிடையே வைரலாக பேசப்படுகிறது. வருங்காலத்தில் போர் காரணமாக பெரும்பாலான உயிரிழப்புகள் இருக்காது என்றும் கொடிய வைரஸ் காரணமாகவே உயிரிழப்புகள் நேரிடும் என்று நான்காண்டுகளுக்கு முன்பே அவரது டெட் உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த பத்தாண்டுகளில் 10 மில்லியன் பேரை கொல்லக்கூடிய சக்தி ஏதேனும் ஒன்றிற்கு இருக்குமானால் அது நிச்சயம் போராக இருக்காது, கொடிய வைரஸ் நோயாகவே இருக்கும் என்று பில் கேட்ஸ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த டெட் உரையை ஜெனெசிஸ் என்கிற பயனர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த முழுமையான வீடியோ யூட்யூபில் இருப்பினும் இந்தப் பதிவு பலரின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகிறது.
2015-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி இந்த உரை யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவு இதுவரை 15,000 முறை டிவிட்டரில் மறுட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த உரையில் கொரோனா வைரஸ் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றபோதும் கொடிய வைரஸ் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சொன்னதுபோன்றே கொரோனா மட்டுமல்லாது எபோலா போன்ற கொடிய வைரஸ் மக்களிடையே பரவி எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பில் கேட்ஸின் டெட் உரை சிறப்பு கவனம் பெற்றுள்ளது.