ரூ.1,001 கோடியில் சொகுசு பங்களா: டிமார்ட் நிறுவனர் வாங்கிய புதிய வீடு!
ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய தொகையில் நடந்த வர்த்தகம் இது!
டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷன் தமானி மும்பையில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார். அதன் மதிப்பு 1,001 கோடி ரூபாய்!
இந்தியாவில் பல்வேறு பகுதியில் அமைந்துள்ளது டிமார்ட் நிறுவனம். சில்லரை வர்த்தக நிறுவனமாக இந்நிறுவனம், சூப்பர் மார்கெட்டை உள்ளடக்கிய முதன்மையான நிறுவனம். மும்பையை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் நிறுவனரான ராதாகிஷன் தமானி தனது சகோதரருடன் இணைந்து மும்பையில் ரூ.1,001 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.
அண்மையில் நடந்த ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் இது மிகப்பெரிய தொகையில் நடந்த வர்த்தகமாக பார்க்கப்படுகிறது. இந்த பங்களாவானது,
தெற்கு மும்பையில் உள்ள மலபார் ஹில் பகுதியின் மதுகுஞ்ச் எனும் இடத்தில் 2 தளங்களைக் கொண்டுள்ளது. இது மொத்தம் 61,916 சதுர அடி கொண்டதாகும். இந்த பங்களாவின் சந்தை மதிப்பு ரூ.724 கோடியாகும். அப்படிப்பட்ட இந்த பங்களாவை வாங்குவதற்காக முத்திரைத் தாள் கட்டணமாக ரூ.30.03 கோடியை நிறுவனர் ராதாகிஷன் தமானி செலுத்தியுள்ளார்.
அவரும் அவரது சகோதரரும் தற்போது அல்டாமவுன்ட் சாலையில் உள்ள பிரித்வி அபார்ட்மென்ட் பகுதியில் வசித்து வருகின்றனர். இதுவும் தெற்கு மும்பை பகுதியில் மிகவும் மதிப்பு மிகுந்த இடமாக கருதப்படுகிறது. இந்த பங்களாவை பிரேம்சந்த் ராய்சந்த் அண்ட் சன்ஸ் குடும்பத்திடமிருந்து ராதாகிஷன் மற்றும் அவரது சகோதரர் வாங்கியுள்ளனர். இதற்கான பத்திரப் பதிவு மார்ச் 31-ம் தேதி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பங்களா நாராயண் தபோல்கர் சாலையில் உள்ளது. இது தெற்கு மும்பையில் மிகவும் ஆடம்பரமான, விலை அதிகம் போகும் குடியிருப்புப் பகுதி. இப்பகுதியில் குடியிருப்புகள் சதுர அடிக்கு ரூ.70,000, 80,000 வரை விலை போகின்றன.
இந்தியாவில் வாழும் பணக்காரர்களின் 8வது இடத்தில் இருப்பவர் ராதாகிஷன் தமானி. இவருடைய அவென்யு சூப்பர்மார்ட், வாத்வா கன்ஸ்ட்ரக்ஷனிடமிருந்து 2 ஃப்ளோர்களை வாங்கியுள்ளது. இதன் ஒப்பந்தம் 113 கோடி ரூபாய் மதிப்புடையதாகும்,
1,001 கோடி ரூபாய்க்கு ராதாகிஷன் தமானி வாங்க உள்ள மும்பை சொகுசு பங்களா தான் தற்போதைய ஹாட் டாப்பிக்!
தொகுப்பு: மலையரசு