இந்திய கிராமங்களின் அழகை ரசிக்க சுற்றுலா அழைத்து செல்லும் பயண ஆர்வலர்!

By YS TEAM TAMIL
September 26, 2022, Updated on : Mon Sep 26 2022 06:01:32 GMT+0000
இந்திய கிராமங்களின் அழகை ரசிக்க சுற்றுலா அழைத்து செல்லும் பயண ஆர்வலர்!
பெங்களூருவைச் சேர்ந்த பயண ஆர்வலரான ஷ்ரேயாஸ் தனப்பா Map My Stories என்கிற தளத்தைத் தொடங்கி தன்னுடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு ஒத்த சிந்தனையுடையவர்கள் பயணம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்கிறார்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஷ்ரேயாஸ் தனப்பா பெங்களூருவைச் சேர்ந்தவர். கல்லூரியில் சேரும் வரை இவர் பயணமே செய்ததில்லை. கல்லூரி இறுதியாண்டு படிப்பதற்கு முன்பு 2017-ம் ஆண்டு ஷ்ரேயாஸ் இமாச்சலப் பிரதேசம், காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு தனியாக பயணம் செய்திருக்கிறார்.


இது அவருக்கு ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. சுதந்திர உணர்வைக் கொடுத்திருக்கிறது. இந்தப் பயணம்தான் பரந்து விரிந்த இந்த உலகில் சிறகு விரித்து பறப்பதற்கான ஆரம்பப்புள்ளியாக இருந்துள்ளது.


பட்டப்படிப்பை முடித்த ஷ்ரேயாஸ் 25 வயதில் ஒரு நீண்ட பயணத்தை திட்டமிட்டார். பெங்களூரு, சிக்கிம், நேபால் என பல்வேறு இடங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

“இந்தப் பயணத்தைத் திட்டமிட்டபோது வழக்கமான, பரபரப்பான, இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் அடைந்துபோவதற்கு முன்பு சுதந்திரமாக சுற்றிவரலாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால், நான் நினைத்தது தவறாகிப்போனது. பரபரப்பான வாழ்க்கைக்கு நான் திரும்பவேயில்லை. பயணத்திற்கே அடிமையாகிவிட்டேன். அந்த அளவிற்கு பயணம் என்னைக் கவர்ந்துவிட்டது,” என்கிறார் ஷ்ரேயாஸ்.
shreyas-1

வெறும் பயணத்துடன் நிறுத்துகொள்ளாமல் பயணம் தொடர்புடைய விஷயங்களில் அடுத்தடுத்து தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஃப்ரீலான்ஸ் முறையில் உள்ளடக்கம் எழுதினார், சிக்கிம் பகுதியில் ஹோம்ஸ்டே நடத்தினார், மடாலயத்தில் இருந்த துறவிகளுக்கு ஆங்கிலம் பயிற்சியளித்தார். இப்படி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார்.


பயணம் தொடர்பான யூட்யூப் சானல் ஒன்றைத் தொடங்கினார். இதில் தன்னுடைய பயண அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

2021-ம் ஆண்டு பயணம் தொடர்பான தீர்வுகளைத் தொகுத்து வழங்கும் Map My Stories தளத்தைத் தொடங்கினார்.
shreyas-2


அதிகம் பயணிக்காத பாதை

பயணத்தின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஷ்ரேயாஸ், தொலைதூர கிராமங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். அங்கிருக்கும் மக்களுடன் ஒருங்கிணைந்து இணைப்பை ஏற்படுத்திக்கொண்டார்.


இது ஒரு புது அனுபவமாக இருந்தது. கிராம மக்கள் ஷ்ரேயாஸை அன்புடன் வரவேற்றார்கள்.

“கிராமங்களுக்கு சென்று அங்கிருக்கும் மக்களுடன் நேரம் செலவிட பலரால் முடிவதில்லை. அங்குள்ள இயற்கையான, ரம்மியமான சூழலையும் அங்கு கிடைக்கும் அனுபவத்தையும் மக்களுடன் பகிர்ந்துகொண்டேன்,” என்கிறார்.

ஷ்ரேயாஸ் சமீபத்தில் சிக்கிம் பகுதியில் இருக்கும் உள்ளூர் கலைஞர்களுடன் இணைந்து பயண திட்டம் ஒன்றை தொகுத்திருக்கிறார். இதில் வடக்கு சிக்கிம் பகுதியைச் சேர்ந்த கிளையண்டுகள் உள்ளூர் மக்களுடன் இணைந்திருந்தனர்.

”உள்ளூர் கலைஞர் ஒருவரிடமிருந்து மொனாஸ்டிக் பெயிண்டிங் டெக்னிக் கற்றுக்கொண்டோம். 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த மடாலயத்தின் ஒரு பகுதியைப் புதுப்பித்தோம். மூங்கில் மக் தயாரிப்பு முதல் உள்ளூர் இசைக்குழுவுடன் இணைந்திருந்தது வரை புத்தம்புது அனுபவம் கிடைத்தது,” என்கிறார்.
shreyas-3

பயணிகள் வடக்கு சிக்கிம் பகுதியில் மொனாஸ்டரி பெயிண்டிங் செய்யும் புகைப்படம்

அருணாச்சலப்பிரதேசத்திற்கு பயணம் செய்தார். இந்திய-சீன எல்லைப் பகுதிக்கு சாகசப் பயணம் ஒன்று செய்திருக்கிறார்.


வழக்கமான மக்கள் செல்லும் சுற்றுலாத்தளங்களைக் காட்டிலும் பெரிதாக யாரும் பயணிக்காத புதிய பகுதிகளையே ஷ்ரேயாஸ் தேர்வு செய்து பயணிக்கிறார்.

கைட், ஹோம்ஸ்டே உரிமையாளர்கள், கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் என உள்ளூர் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இவரது பயணங்கள் திட்டமிடப்படுகின்றன. இதன் மூலம் உள்ளூர் மக்கள் வருமானம் ஈட்ட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

அனுபவங்களின் தொகுப்பு

தற்சமயம் ஷ்ரேயாஸ் Map My Stories முயற்சியைத் தனியாகவே நடத்தி வருகிறார். 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலாக பயணிகளை வடக்கு சிக்கிம் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அடுத்தடுத்த மாதங்களில் மூன்று குழுக்களை அழைத்துச் சென்றார். இந்த ஆண்டு அருணாச்சலப்பிரதேசம் அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்.


ஷ்ரேயாஸ் பயணம் செய்ய விரும்பும் அனைவரையும் அழைத்து செல்வதில்லை. அதற்கென ஒரு சில முக்கிய அம்சங்களைக் கவனித்து அதன் பிறகே தேர்வு செய்கிறார். முக்கியமாக, பயணம் செய்ய விரும்புவோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டும். அதேபோல்,

உள்ளூர் கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இவைதான் ஷ்ரேயாஸின் எதிர்பார்ப்பு. இதைப் பூர்த்தி செய்பவர்களை மட்டுமே தேர்வு செய்து குழுக்களாக ஒன்றிணைத்து அழைத்து செல்கிறார்.
shreyas-4

சிக்கிம் பகுதியில் பயணிகளுடன்

வழக்கமான பயணம் செல்லும் பயணிகள் அனைவருக்கும் Map My Stories தொகுப்பில் ஆர்வம் இருக்கும் என்று சொல்லிவிடமுடியாது. அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே ஃபில்டர் செய்யப்படுகின்றனர்.


அடுத்தபடியாக பயணத்தின் நோக்கம் என்ன என்பதையும் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் கிளையண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்மில் குறிப்பிடவேண்டும். இதன் அடிப்படையில், உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து இருப்பதில் ஆர்வம் கொண்ட, ஒத்த சிந்தனையுடையவர்களை மட்டுமே தேர்வு செய்வதாக ஷ்ரேயாஸ் தெரிவிக்கிறார்.

நான்கு முதல் ஆறு பேர், ஏழு நாட்கள் பயணம் மேற்கொள்ள சராசரியாக ஒரு பேக்கேஜிற்கு 33,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் ஒவ்வொருவரும் தனியாக அந்தந்த இடத்திற்கு சென்று பார்வையிடலாம் என்கிறார்.

இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கான பயண திட்டத்தைத் தொகுத்திருக்கிறார்.


உள்நாட்டு பயணத்துடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வெளிநாடுகளுக்கும் அழைத்து செல்ல விரும்புகிறார். ஆனால், Map My Stories வலைதளத்தில் இவற்றை சேர்ப்பதற்கு முன்பு அவர் முதலில் அந்த அனுபவங்களைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறார். அதேபோல், பயணங்களை முன்நின்று ஏற்பாடு செய்யும் குழுவை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா