Dolo 650: ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசங்கள்: ஐடி ரெய்டில் தகவல்!
டோலா 650 மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் தனது மருந்தை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பரிசுகளை விநியோகித்ததாக CBDT (மத்திய நேரடி வரிகள் வாரியம்) குற்றம்சாட்டியுள்ளது.
Dolo 650 மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் தனது மருந்தை விளம்பரப்படுத்துவதற்கு பதிலாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான இலவசப் பரிசுகளை விநியோகித்ததாக CBDT (மத்திய நேரடி வரிகள் வாரியம்) குற்றம்சாட்டியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் டோலோ 650 மாத்திரை மிகவும் பிரபலமானதாக இருந்தது. இதன் காரணமாக கொரோனா காலத்தில் ரூ.350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்றுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.400 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின.
வலி நிவாரணி மற்றும் பாராசிட்டமால் (காய்ச்சலைக் குறைக்கும்) மாத்திரைகள் கொரோனா தொற்றுநோய்களின் போது நோயாளிகளுக்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கடை உரிமையாளர்களால் பரவலாக பரிந்துரைக்கப்பட்டது. இன்றும் டோலோ மாத்திரை கொரோனா மாத்திரை என்று அழைக்கப்படுகிறது.
வரி முறைக்கேட்டில் சிக்கிய மைக்ரோலேப்ஸ்:
Microlabs நிறுவனம் முறையான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, பெங்களூருவைச் சேர்ந்த மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் ஜூலை 6ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தலைநகர் டெல்லி, தமிழ்நாடு, சிக்கிம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 9 மாநிலங்களில் மைக்ரோலேப்ஸ் நிறுவனத்துக்குத் தொடர்புடைய 36 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். மைக்ரோ லேப்ஸின் தலைமை மேலாண் இயக்குநர் திலீப் சுரானா, இயக்குநர் ஆனந்த் சுரானா ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில்,
சுமார் ரூ. 1.2 கோடி மதிப்புள்ள ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.1.4 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சோதனையின் போது, முக்கியமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் மீட்கப்பட்டதாக CBDT கூறியது. மேலும், தனது தயாரிப்பு விற்பனையை அதிகரிப்பதற்காக நிறுவனம் நியாயமற்ற வழிகளைத் தேர்ந்தெடுத்ததற்கான போதுமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் டோலோ 650 மாத்திரைகளை விற்பதற்காக மருந்துவர்கள் மற்றும் இதர மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளதாக சிபிடிடி குற்றம் சாட்டியுள்ளது.
"நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக விளம்பர பிரச்சாரம், கருத்தரங்குகள், மருத்துவ ஆலோசனைகள் மூலம் மாத்திரையை விளம்பரப்படுத்த, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான வெளிநாட்டுப் பயணம், சலுகைகள், பரிசுகள், இலவசங்கள் என முறையற்ற வகையில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் செலவழித்திருப்பதும் தெரியவந்துள்ளது,” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dolo 650 மாத்திரைகளை விற்க மைக்ரோலேப்ஸ் நிறுவனம் இப்படியொரு விஷயங்களை செய்திருப்பது மருத்துவ உலகில் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தொகுப்பு - கனிமொழி