மாமியார் கொடுமை; திருமண முறிவு: யுபிஎஸ்சி தேர்வில் சாதித்த 7 வயது குழந்தையின் தாய் ஷிவாங்கி!
யுபிஎஸ்சியில் 177வது ரேங்க் பெற்று தனது குடும்பத்துக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஷிவாங்கி கோயல். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொண்டது குறித்தும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார்.
யுபிஎஸ்சியில் 177வது ரேங்க் பெற்று தனது குடும்பத்துக்கும், மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஷிவாங்கி கோயல். அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய சவால்களை எதிர்கொண்டது குறித்தும், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டது குறித்தும் பேசியுள்ளார்.
ஹபூரின் பில்குவாவில் வசிக்கும் ஷிவாங்கி கோயல், யுபிஎஸ்சி தேர்வில் 177வது ரேங்க் பெற்று தனது குடும்பத்திற்கு மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பெருமை சேர்த்துள்ளார். ஆனால், அவர் இந்த வெற்றிக்காக மேற்கொண்ட பயணம் மிகவும் கடினமானது.
UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2021ஆம் ஆண்டு நடத்திய தேர்வுகளின் முடிவுகள் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் மூன்று இடங்களை பெண்கள் பிடித்திருந்தனர்.
முதலிடத்தை ஸ்ரீருதி ஷர்மா, இரண்டாவது இடத்தை அங்கீதா அகர்வால், மூன்றாவது இடத்தை காமினி சிங்லா ஆகியோர் பெற்றனர். தமிழகத்தில் இருந்து கோவையைச் சேர்ந்த மாணவி ஸ்வாதி ஸ்ரீ இந்திய அளவில் 45வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்திருந்தார். இவர்களைப் போலவே யுபிஎஸ்சி தேர்வில் 177வது இடம் பிடித்த ஷிவாங்கி கோயல் என்பவரும் கவனம் ஈர்த்துள்ளார்.
யார் இந்த ஷிவாங்கி கோயல்?
ஹபூரின் பில்குவா பகுதியில் பெற்றோர் மற்றும் தனது 7 வயது மகளுடன் ஷிவாங்கி கோயல் வசித்து வருகிறார். ஷிவாங்கி கோயலின் மகள் பெயர் ரெய்னா, அவரது தந்தை ராஜேஷ் கோயல் ஒரு தொழிலதிபர், தாய் இல்லத்தரசியாக உள்ளார். ஷிவாங்கி கோயலுக்கு திருமண வாழ்க்கை சிறப்பானதாக அமையவில்லை, மாமியார் கொடுமை காரணமாக கணவனை பிரிந்த அவர், தற்போது பெற்றோர் மற்றும் தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவரை சட்டப்படி விவாகரத்து செய்வதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.
திருமண வாழ்க்கை குறித்த கொடுமையான நாட்களை ஷிவாங்கி நினைவுகூறுகையில்,
"சமூகத்தில் திருமணமான பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்காக பயப்பட வேண்டாம், உங்கள் சொந்த காலில் நிற்க முடியும் என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள், பெண்கள் எதையும் செய்ய முடியும் என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன். நன்றாகப் படித்து, கடினமாக உழைத்தால், ஐஏஎஸ் ஆகலாம்," என்று ஷிவாங்கி தனது அனுபவத்தையும், அதை எப்படி சமாளித்தார் என்பதையும் கூறுகிறார்.
திருமணத்திற்கு முன்பே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் ஷிவாங்கி கோயல் முயற்சித்துள்ளார். ஒருமுறை அல்ல, இரண்டு முறை யுபிஎஸ்சி தேர்விற்காக முயன்ற அவர், அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளார்.
இதனிடையே, அவரது பெற்றோர் ஷிவாங்கி கோயலுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். போன இடத்தில் அவரின் திருமண வாழ்க்கை சிறப்பானதாக அமையவில்லை. மாமியார் கொடுமை மற்றும் குடும்ப வன்முறை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது தனது 7 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
தாய் வீட்டிற்கு வந்த பிறகு மகள் வெறுமையை உணரக்கூடாது என பெற்றோர் நினைத்துள்ளனர். எனவே அவர் நினைத்ததை மீண்டும் செய் என உற்சாகப்படுத்தியுள்ளனர். அப்போது தான் ஷிவாங்கி கோயலுக்கு ஏன் தான் மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதக்கூடாது என்ற எண்ணம் வந்துள்ளது. அதற்கு அவரது அப்பா, அம்மாவும் சம்மதிக்க மீண்டும் யுபிஎஸ்சி தேர்வுக்கு தீவிரமாக தயாரானார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஷிவாங்கி கூறுகையில்,
“சிறுவயதில் இருந்தே இந்த நாளை கனவு கண்டு வந்தேன். கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்குப் பிறகு, இறுதியாக, அந்த நாள் வந்துவிட்டது,” என்கிறார்.
பள்ளிப் படிக்கும் போதிலிருந்தே தனது தலைமையாசிரியர் உள்ளிட்டோர் தன்னை ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என உற்சாகப்படுத்தியதாகவும். அன்று முதல் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்ததாகவும் கூறுகிறார்.
யுபிஎஸ்சி தேர்வுக்காக சமூகவியல் பாடத்தை எந்த கோட்சிங்கும் இன்றி சுயமாக படித்த ஷிவாங்கி கோயல், தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தொகுப்பு - கனிமொழி